பாரதீய கல்வி (பகுதி - 3)

பாரதீய கல்வி (பகுதி - 3)
தாமஸ் பாபிங்டன் மெக்காலே

இந்தியாவில் ஒரு புதிய கல்வி முறையை நிறுவ ஆங்கிலேயர்கள் ஏன் விரும்பினர்?

“அவர்கள் (அதாவது மாணவர்கள்) தங்கள் 13-வது வயதை அடைவதற்கு முன்பு, அவர்கள் பல்வேறு கிளைகளில் பெற்ற கற்றல் அசாதாரணமான மகத்துவம் கொண்டது,” என்று மெட்ராஸ் கலெக்டரால் 23.11.1822 அன்று, வருவாய் வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

சில தசாப்தங்களுக்கு முன்னர், இந்த கிழக்கத்திய நாட்டின் கலாச்சாரம், அறிவியல் மற்றும் அரசியல் பற்றி வால்டேர் (Voltaire), அபே ரெய்னல் (Abbe Raynal), ஜீன் சில்வைன் பெய்லி (Jean Sylvain Bailly) போன்ற ஐரோப்பிய பிரமுகர்களின் எழுத்துக்களின் மூலம் இந்தியாவின் மீது ஐரோப்பிய ஆர்வம் வளர்ந்து வந்தது. 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் முதலில் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாகவும் பின்னர் நாட்டின் சில பகுதிகளின் நிர்வாகத்திற்குள் நுழைந்தபோதும், அவர்களின் ஆர்வம் இந்நாட்டின் வானியல், மருத்துவம் மற்றும் அறிவியலில் தூண்டப்பட்டது.

பேராசிரியர் A. மாகோனோச்சி (A. Maconochie) 1783-ம் ஆண்டிலும், மீண்டும் 1788-ம் ஆண்டிலும் வாதிட்டார். “இந்துக்களின் பண்டைய படைப்புகளை அனைத்தையும் கண்டுபிடிப்பது, சேகரித்தல் மற்றும் மொழிபெயர்ப்பது ஆகியவற்றுக்கு மன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படைப்புகளை ஐரோப்பாவிற்கு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தால், வானியல் மற்றும் தொல்பொருட்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட விஞ்ஞானங்கள் இன்னும் பெரிய விகிதத்தில் முன்னேறும்,” என்று அவர் நினைத்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்துக்களின் மதம் மற்றும் அரசாங்கத்தின் பழைமை, அவர்களின் அறிவியலை விட குறைந்த சுவாரஸ்யம் கொண்டவை இல்லை; எனவே, இந்துக்களின் வரலாறு, கவிதைகள், மரபுகள், கட்டுக்கதைகள் போன்றவை பண்டைய உலக வரலாற்றின் மீதும், குறிப்பாக மோசஸ் தனது கற்றலைப் பெற்ற அந்த புகழ்பெற்ற மக்களின் நிறுவனங்கள் மீதும், கிரேக்கத்தின் மதத்தைப் பற்றியும் வெளிச்சம் காட்டக்கூடும்,” என்று உணர்ந்தார். பேராசிரியர் மாகோனோச்சி இந்த கற்றலின் பெரும்பகுதியின் மையம் பெனாரஸ் என்றும், அங்கு அனைத்து விஞ்ஞானங்களும் இன்னும் கற்பிக்கப்படுகின்றன என்றும், வானியல் துறையில் மிகவும் பழமையான படைப்புகள் இன்னும் உள்ளன என்றும் கூறினார். பிந்தைய குறிப்பு 1775-ல் வால்டேர் எழுதியதை ஒட்டி இருந்தது. இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டிருப்பது இவர்கள் மட்டுமல்ல. இந்தியாவில் கிடைக்கக்கூடிய அறிவின் மிகப்பெரிய புதையலை அங்கீகரித்த சார்லஸ் வில்கின்ஸ் (Charles Wilkins), வில்லியம் ஜோன்ஸ் (William Jones), F. W. எல்லிஸ் (F.W. Ellis) மற்றும் Lt. வில்போர்ட் (Lt. Wilford) உள்ளிட்ட பல முக்கிய ஐரோப்பியர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் அந்தக் காலங்களில் கூட இந்தியா மீது நேசத்தை கொண்டவர்களாக (Indophiles) மாறி இந்திய மொழிகளையும் நூல்களையும் படிக்கத் தொடங்கினர்.

ஆக, இந்த மேற்கத்தியர்களின் எண்ணத்தில், இந்தியா மொழிகள், கலாச்சாரம், விஞ்ஞானம், தத்துவங்கள் முதலிய அனைத்து துறையிலுமே அன்றே மேலோங்கி நின்றது. மேலும், மாணவர்கள் கற்றல் திறமை மிக்கவர்களாக இருந்தனர் என்று சற்று முன்பு பார்த்தோம். இப்படி நன்கு நிறுவப்பட்ட பயன்பாட்டில் இருந்த பாரதீய கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் ஏன் தீர்மானித்தனர்?

ஏனென்றால் பன்முகத்தன்மையும் வேற்றுமையும் கொண்ட இந்தியா மீது அதிகாரத்தைப் பெறுவதற்காக தங்களுடைய மொழி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் – மிக முக்கியமாக - மதம் ஆகியவற்றின் மேன்மையை அறிவிப்பதே ஆங்கிலேயர்களின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.

எனவே, தாமஸ் பாபிங்டன் மெக்காலே 1835 பிப்ரவரி 2 ஆம் தேதி ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்: “எனக்கு சமஸ்கிருதம் அல்லது அரபு பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவற்றின் மதிப்பைப் பற்றிய சரியான மதிப்பீட்டை உருவாக்க என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன் … … கிழக்கத்திய படிப்பு ஆசிரியர்களின் மதிப்பீட்டின்படி கிழக்கத்திய கற்றலை ஏற்றுக்கொள்ள நான் மிகவும் தயாராக இருக்கிறேன். இந்தியா மற்றும் அரேபியாவின் பூர்வீக இலக்கியங்கள் அனைத்தும் சேர்ந்தே ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் வெறும் ஒரு அலமாரியில் உள்ள புத்தகங்களின் மதிப்பளவே உள்ளது என்பதை மறுக்கக்கூடிய ஒருவரைக்கூட கண்டதில்லை.”

எந்த வடிவத்திலும் மதத்திற்கு அவர் எதிரானவர் என்று மெக்காலேயின் பெரும்பாலான உரைகள் தோன்றினாலும், சோம்நாத் கோயில் வாயில்களைக் கட்டுவதற்கு நிதியளிப்பது தொடர்பாக, “நம் சந்தோஷப்படுத்த வேண்டியவர்களின் பார்வையில் நாம் நம்மைத் தாழ்த்திக் கொண்டோம். கிறித்தவத்திற்கும் புறஜாதியினத்திற்கும் (heathens) இடையிலான வேறுபாட்டிற்கு நாங்கள் எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்று அவர்கள் நம்பும்படி அவர்களை வழிநடத்தினோம். எனினும் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகள் எத்தனை பெரியது!” என்று அவர் ஆற்றிய உரை இந்த பாசாங்கை நிராகரிக்கிறது.

1813-ம் ஆண்டில் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் அளித்த அறிக்கையால் இது உறுதிப்படுத்தப்படுகிறது. “கிறித்தவத்தின் பொதுவான பரவலைக் கருத்தில் கொண்டு சொந்த மொழிகளில் புனித நூல்களைப் பரப்ப வேண்டும்,” என்று அழைப்பு கொடுத்தார், “இதனால் இந்தியர்கள் மிக விரைவில் கிறித்தவர்களாக மாறிவிடுவார்கள், அதுவும் அவர்கள் அறியாமலேயே என்று நான் கூற விரும்புகிறேன்,” என்றும் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஆட்சி செய்வதை எளிதாக்கும் பொருட்டு, இந்தியர்கள் மீது பிரிட்டிஷ் சட்ட முறையை அமல்படுத்தும் அதே வேளையில், உள்ளூர் மக்களை தங்கள் சொந்த சட்டத்திலிருந்து அந்நியப்படுத்தும் ஒரு கல்வி முறையை கொண்டு வருவதே கூடுதல் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. இதை 1835-ம் ஆண்டின் உரையில் மெக்காலே   கீழ்காணும் படி வெளிப்படுத்தியுள்ளார்.

"இந்து சட்டம் முக்கியமாக சமஸ்கிருத புத்தகங்களிலிருந்தும், அரபு புத்தகங்களிலிருந்து இஸ்லாமிய சட்டத்திலிருந்தும் கற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற உண்மை மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, ஆனால் இவை எல்லோருக்கும் பொருந்துவதாக தெரியவில்லை. இந்தியாவின் சட்டங்களை அறிந்து கிரகித்துக்கொள்ள பாராளுமன்றம்   நமக்கு கட்டளையிட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக ஒரு சட்ட ஆணையத்தின் உதவி நமக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் அறிவிக்கப்பட்டவுடன் சாஸ்திரமும் ஹிதாயாவும் முன்சீப்க்கும் சதர அமீனுக்கும் உபயோகப்படாது.  இப்போது மதரஸா மற்றும் சமஸ்கிருத கல்லூரியில் நுழையும் மாணவர்கள் படிப்பை முடிப்பதற்குள், இந்த மாபெரும் பணி முடிவடையும் என்று நம்புகிறேன்.”

இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழியையும் மெக்காலே கூறினார்: “தற்போது நமக்கும், நாம் ஆளுகின்ற லட்சக்கணக்கானவர்களுக்கும் இடையில் உரைபெயர்ப்பாளர்களாக இருக்கும் ஒரு வகுப்பை உருவாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்; இரத்தத்திலும் வண்ணத்திலும் இந்தியர்களாகவும், ஆனால் சுவை, கருத்துக்கள், ஒழுக்கங்கள் மற்றும் புத்தி ஆகியவற்றில் ஆங்கிலேயர்களாகவும் ஒரு வர்க்க நபர்களை உருவாக்க வேண்டும். அந்த வகுப்பிற்கு, நாட்டின் மொழிபேச்சுவழக்குகளைச் செம்மைப்படுத்துவதற்கும், மேற்கத்திய விஞ்ஞான சொற்களைக் கடன் கொண்டு அந்த மொழிகளை வளப்படுத்தவும், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு அறிவை கொண்டு சேர்ப்பதற்காகவும் படிப்படியாக தயார்ப்படுத்தி விடலாம்.”

மெக்காலேயின் அணுகுமுறை சரியா என்று உறுதியாக மனதில் படாததால், பிரிட்டிஷ் அணிகளில் பலர் ஆட்சேபனைகளை எழுப்பினர். உண்மையில் (ஆச்சரியம் அளிக்கும் வகையில்), ஜான் ஸ்டீவர்ட் மில் கலாச்சார மாற்றத்தில் மொழி ஒரு பங்கை வகிக்க முடியும் என்ற கருத்தை வெளிப்படையாக நிராகரித்தார் [பிற்காலத்தில் இதே ஜே.எஸ். மில் "பயனற்ற" பாரம்பரிய கல்விக்கு எதிராக நின்று “பயனளிக்கக்கூடிய”(Utilitarian) கல்வியை ஆதரித்தார், இந்தியாவில் இதை நிலைநாட்டுவதற்கு செயல்பட்டார்]. இந்த எதிர்ப்பு அடக்கப்பட்டது, மேலும் 1835-ம் ஆண்டின் ஆங்கில கல்விச் சட்டம் (English Education Act of 1835) மெக்காலேயின் செல்வாக்கின் காரணமாக அமல்படுத்தப்பட்டது.

மெக்காலே ஒரு கல்வியாளர் அல்ல, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மொழிகளை அவர் அறிந்திருக்கவில்லை. அவர் பேசிய அனைத்தும் பிறரிடமிருந்து இரண்டாம் பட்சமாக சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்தும் மேலும் ஏகப்பட்ட அனுமானங்களுடனும் நிறைந்தவை. நன்கு பேசும் திறமை வாய்ந்த ஒரு வழக்கறிஞராக இருந்ததால், ஆங்கிலம் மற்றும் பிரிட்டிஷ் சட்டம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றிய அறிவைக் வளர்த்துக்கொண்டு ஆங்கிலேயர்களின் பக்கம் நிற்கக்கூடிய ஒரு வகை மக்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதன் மூலம் அரசின் முடிவை தனக்கு சாதகமாகப் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர்களின் குறிக்கோள் இந்தியா மீது அடிமைபோல கட்டுப்படுத்தும் சட்டத்தை திணித்து பிரிட்டிஷாரின் கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே.

பிரிட்டிஷார் மாற்றி அமைக்கும் வரை இருந்த கல்வித் திட்டம் எப்படி செயல்பட்டது? அதற்கு முன் விஞ்ஞான முன்னேற்றத்தில் பாரதத்தின் நிலைமை என்ன?

(அடுத்த பகுதியில் தொடரும்)

References:

Dharampal (2000). The Beautiful Tree, Other India Press. Available at: http://www.arvindguptatoys.com/arvindgupta/beautifultree.pdf

Minute by the Hon'ble T. B. Macaulay, dated the 2nd February 1835. Available at: http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html

Macaulay T. B. (March 9, 1843). The Miscellaneous Writings and Speeches of Lord Macaulay, Vol. 4 The Gates of Somnauth. A Speech Delivered in The House of Commons. Available at: https://www.gutenberg.org/files/2170/2170-h/2170-h.htm

HANSARD: June 22, 1813; columns 832, 833.

Sharp, H. (ed.). 1920. Selections from Educational Records, Part I (1781–1839). Superintendent, Govt. Printing, Calcutta.