உலகத் தரம் வாய்ந்த கல்விக்கு பாரதம் தயாரா?

கல்வி ஒவ்வொரு நபர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை
விரும்புகிறோம். உலகத்தரம் வாய்ந்த கல்வி என்பதன்
பொருளென்ன? எந்த கல்வி முறையை உலகத்தரம் என்று
அழைக்கலாம்?
கொஞ்சம் வரலாற்றை பார்த்துவிட்டு வருவோம். கல்வி
முறை சரியில்லை என்று கற்பவர், கற்பிப்பவர் சாபத்துக்கு ஆளாகி நிற்கும் தாமஸ் பாபிங்டன் மக்காலேயின் பரிந்துரையின் அடிப்படையில் 1835 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நம் நாட்டில் இன்றுள்ள கல்வி முறை திணிக்கப்பட்டது. இந்த முறை அவர்களது தொழில்துறை புரட்சிக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது. அன்று ஆங்கிலேயர்கள் ஒரு
பொருளாதார வல்லரசாக உதவியது. அவர்களுக்கு
சொன்னதை செய்யும் தலையாட்டி குமாஸ்தாக்கள் நிறைய பேர் தேவைப்பட்டார்கள். அதை இந்த கல்வி முறை
சிறப்பாக உற்பத்தி செய்து தந்தது. இன்றுவரை
அதைத்தான் செய்கிறது. நாமும் அதே கல்வி முறையை
வெட்கமின்றி தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.
தற்போது நம் நாட்டில் பின்பற்றப்படும் அமைப்பு - சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி - மக்காலேயின் திருத்தப்பட்ட பதிப்பு மட்டுமே. இதனால்
ஏற்படும் விளைவுகள் பின்வருமாறு: மாணவர்கள் பெரும்
மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள், ஆசிரியர்கள்
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், பெற்றோர்கள்
குழப்பமடைகிறார்கள், மேலும் மாணவர்கள் படித்துவிட்டு வெளியேறும் தரத்தால் வேலைக்கு எடுத்துக்கொள்ள
வேண்டிய சமூகம் பெரும்பாலும் மகிழ்ச்சியடையவில்லை. இது தொடர வேண்டிய கல்வி முறையே அல்ல. என்றோ மாறியிருக்க வேண்டிய ஒன்று இது.
***
உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பற்றி பேசும்போது,
உலகெங்கிலும் உள்ள கல்வி அமைப்புகளின் சிறந்த
எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
பின்லாந்து பெல்ஜிய நாடுகளில், ஆரம்பகால குழந்தை
பருவ கல்வியின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கு
ஒத்துழைத்து வாழ்வது மற்றும் தொடர்பு திறன்களைக் கற்றுக் கொள்ள,
மன அழுத்தமில்லாத உயர்தர அடிப்படைக் கல்வி
வழங்கப்படுகிறது. கல்வி தொடக்கத்திலிருந்தே குழந்தைகள் தாய்மொழியையும், ஒரு தேசிய மொழியையும், ஒரு வெளிநாட்டு மொழியையும், ஆக மொத்தம் மூன்று மொழிகள் கற்றுக்கொள்கிறார்கள்.
வெவ்வேறு மொழிகளைக் கற்கும்போது மாணவர்களின் அறிவாற்றல் திறன்கள் வளர்வதை உறுதி செய்கிறது,
அதே நேரத்தில் பாரம்பரிய மொழிகளும் பாதுகாக்கப்படுகின்றன.
ஜப்பான் கல்வி முறை தார்மீகம் மற்றும் சமுதாய வாழ்க்கைக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தைகள் தாராள மனோபாவம், இரக்கம், பச்சாதாபம் கொள்தல், மற்றவர்களை மதிப்பது, விலங்குகள் மற்றும் இயற்கையை மென்மையாக கையாள்வது முதலியவை கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தூய்மையின்
முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்; தங்கள் பள்ளியை தாங்களே சுத்தம் செய்கிறார்கள்.
சுவிஸ் கல்வி அமைப்பான
இன்டர்நேஷனல் பாக்கலோரியேட், ஆய்ந்து கற்றல் மூலம் மாணவர்களின் திறனை அதிகரிக்க உதவுகிறது. அவர்கள் வழங்கும் டிப்ளோமா திட்டம் சிறப்பானது. மாணவர்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களின் கலவையைப் தேர்ந்து படிக்க சுதந்திரம் உள்ளது. விரும்பிய பாடங்களை தேர்ந்தெடுத்ததால் அவர்கள் கற்கும் கல்வியில் தங்களை பலப்படுத்திக்கொள்ள ஆழ்ந்து படிக்கின்றனர், ஆராய்கின்றனர்.
பாரதிய பாரம்பரியக் கல்வி முறை சுயமதிப்பீட்டை வலியுறுத்துகிறது. தர உத்தரவாதத்தை, பராமரிக்க இந்த கல்வி பாரம்பரியம் உதவுகிறது. இதனால்தான், மதிப்பெண்
அடிப்படையிலான தேர்வுகள் இல்லாமல் குருவிடமிருந்து சிஷ்யன் என்று காலத்தின் சோதனையைத் தாங்கிய
மரபுகள் இன்னும் நம்மிடம் உள்ளன.
உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் கல்லூரிப் படிப்புகளை நெகிழ்வுத்தன்மையுடன் வழங்குகின்றன. இதன் பொருள் முதல் ஆண்டின் இறுதியில், டிப்ளோமா, இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மேம்பட்ட டிப்ளோமா என்று பட்டங்களை பெறுகிறார்கள். இப்படி கற்ற
மதிப்பெண்கள் புள்ளிக ளாக அவர்களின் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. அதை பயன்படுத்தி படிப்பை மேலும் தொடரலாம் அல்லது உயர் படிப்புக்கு முனையலாம்.
நாம் ஆற்றல் வாய்ந்த, அதே சமயம் பல பிரச்சினைகளை
எதிர்கொண்டு இருக்கும் உலகில் வாழ்கிறோம்.
இதையெல்லாம் தீர்க்க ஆராய்ச்சிக்கு பெரும்
முக்கியத்துவம் தரவேண்டும். ஆராய்ச்சி முறையை
உள்ளடக்கிய கல்வி முறையே நமக்கு தேவை.
பாரதத்திற்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி எப்போது
கிடைக்கும்?
***
இப்போது கீழேயுள்ள தொகுப்பை பார்ப்போம்:
துவக்கத்தில், ஆரம்பகால கல்வியின்போது ஒத்துழைப்பு
மற்றும் தொடர்பு போன்ற சமூக திறன்களை வளர்ப்பதில் கற்றலின் கவனம் இருக்கும்.
பின்னர், ஆரம்பப் பள்ளியின் போது, மாணவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள அடிப்படை பாடங்களுடன்,
மன அழுத்தமில்லாமல் நல்லொழுக்கங்களை மேம்படுத்துவதில் ஈடுபடுவார்கள். தங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படுவார்கள், இது தவிர மேலும் ஒரு பாரதிய மொழியையும், ஒரு வெளிநாட்டு மொழியையும் கற்றுக்கொள்வார்கள். இதெல்லாமே மகிழ்ச்சியாக, தொடர்பு திறன்களை
மேம்படுத்தும் விதத்தில் கற்பிக்கப்படும்.
நடுநிலைப் பள்ளியின் முடிவில் (8 ஆம் வகுப்பு), மாணவர்கள் 4 ஆண்டு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வார்கள் (இதன்
பொருள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்கள்
விரும்பும் படிப்புக்குள் நுழைவதால், மாணவர் ஆண்டுகளின் விரயம் நீங்குகிறது. மேம்பாட்டு கல்வியையும் தேர்வு செய்யலாம். ஆகவே, மாணவர்கள் பள்ளி முடிக்கும் போது,
அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் கல்வி ரீதியாக நன்கு
தயாராகிறார்கள் அல்லது அவர்கள் பெற்ற திறன்களுடன் வேலைக்குச் செல்ல தயாராவார்கள். இந்த காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் ஆர்வத்தின்அடிப்படையில்
பாடங்களைத் தேர்வு செய்யலாம்.
கல்லூரியில், மாணவர்களுக்கு தேவை ஏற்பட்டால்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இடைவெளி
எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் சேமிக்கப்படும். மேலும் அவர்கள் விரும்பும் போதெல்லாம்
தங்கள் படிப்பை தொடரவும் பயன்படுத்தலாம். ஆராய்ச்சி வலியுறுத்தப்படும்; இளங்கலை திட்டத்தின் நான்காம்
ஆண்டு ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கை (NEP) இதுதான், வரும்
ஆண்டுகளில் கல்வியில் உண்மையான உலகத் தரம்
வாய்ந்ததாக நம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும்! ஆகவே, முதலில் நேரடியாக அரசின்
இணைய தளத்தை தேடிப்பார்த்து என்னதான் சொல்ல
வருகிறார்கள் என்று படித்து பார்த்து புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.