மூன்று மொழி அளிப்பதன் ஜனநாயக அடிப்படை: NEP 2020

மூன்று மொழி அளிப்பதன் ஜனநாயக அடிப்படை: NEP 2020

மூன்று மொழிகள் கற்பதன் முக்கியத்துவம்

எந்த கலாச்சாரத்திற்கும் வரவேற்பு சாளரம் மொழியே ஆகும். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது புதிய கலாச்சாரம், புதிய மரபு முறைகள், ஒரு புதிய மக்கள் வலைப்பின்னல் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதாகும். ஒரு மொழியைப் பாதுகாப்பதினால் இந்த கலாச்சாரத்தையும், இந்த பாரம்பரியத்தையும், இந்த மக்கள் வலையமைப்பையும் பாதுகாக்க முடியும். பாரதம் பல எழுத்துக்களையும் நூற்றுக்கணக்கான பேசும் மொழிகளையும் கொண்ட ஒரு தனித்துவமான தேசம். இவை நம் நாட்டிற்கு வண்ணத்தையும் துடிப்பையும் சுவாரஸ்யத்தையும் அள்ளிக் கொடுக்கின்றன.

மூன்று மொழிகளைக் கற்க வாய்ப்பு கிடைப்பது நமக்கு ஏன் முக்கியம்? முதல் முறையாக, புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டபோது, ​​நாடு முழுவதும் உள்ளவர்களிடமிருந்து உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகள் அழைக்கப்பட்டன. இந்த பரிந்துரைகளைப் பின்பற்றவும், அவற்றை வகைகளாக வரிசைப்படுத்தவும், அவற்றைப் பற்றி விவாதிக்கவும், மாணவர்களின் நல்வாழ்வையும், சமூகம் மற்றும் தேசத்தின் நலனையும் மனதில் வைத்து சிறந்த விருப்பத்தை தீர்மானிக்க கல்வியாளர்கள் குழு பல மாதங்கள் எடுத்தது. பரிசீலிக்கப்பட்ட பரிந்துரைகளில், வாழ்க்கை யதார்த்தங்களைக் கையாண்டவர்களுக்கு குழு அதிக முக்கியத்துவம் அளித்தது.

மொழிகளைப் பொருத்தவரை, இவை முக்கியமான விவரங்கள்:

ஒருவரின் சொந்த மொழியில் கற்றல் அறிவை சிறப்பாக ஒருங்கிணைக்க உதவுகிறது மற்றும் கற்பவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதற்கு நடைமுறை அணுகுமுறை என்னவென்றால், பிராந்திய மொழியை முதன்மை நிலையத்தில் கட்டாயமாக கல்வி ஊடகமாகவும், முடிந்தால் உயர் மட்டங்களில் வழங்குவதும் ஆகும்.

பிராந்திய பெரும்பான்மை மொழி அல்லாத மொழி பேசும் மாணவர்கள் அனைத்து பிராந்தியங்களிலும் பரவி இருக்கின்றனர். அவர்கள் நாட்டின் வேறொரு பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது மாநிலத்தில் சிறுபான்மை எண்ணிக்கையிலான மக்களால் அவர்களின் மொழி பேசப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மொழிகள் வழங்கப்படுவது முக்கியம்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உள்ளூர் மொழியில் கற்கவும், சொந்த மொழியைக் கற்கவும் முடிவது இரு கலாச்சாரங்களையும் தடையின்றி இணைக்க ஒரு சிறந்த வழியாகும்.

சிறுபான்மை மொழி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இது அவர்களின் சொந்த மொழிக்கு ஒரு ஊக்கத்தைப் பெறுவதற்கான அருமையான வாய்ப்பாகும். உதாரணமாக, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா மற்றும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பெங்களூர் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உள்ளனர், ஆனால் அவர்களில் பலரால் தங்கள் தாய்மொழியை பள்ளியில் கற்க முடிவதில்லை. புதிய கல்வி கொள்கையால் இதை மாற்றலாம்.

தற்பொழுது உள்ள நிலையில் பல மொழிகள் பள்ளிகளில் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாமல் வெறும் பேசும் மொழிகளாக வாழ்ந்து வருகின்றன. இதில் சில மொழிகள் அழிந்து போகும் நிலையிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக அனைத்து மாநிலத்திலும் உள்ள பழங்குடி மக்களின் தாய்மொழிகள் பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. இம்மொழிகளில் உள்ள கலாச்சாரங்கள் ஞானங்கள் தனித்துவம் அனைத்துமே இந்த மொழிகள் அழிந்துவிட்டால் போய்விடும். அம்மொழி பேசும் மக்களின் தனித்துவமும் பெருமையும் கூட அம்மொழிகளுடனே அழிந்து போய்விடும். மும்மொழித் திட்டத்தின் மூலம் அந்த மொழிகளை கற்றுக்கொள்ள வழிவகுத்து இதை தவிர்க்க ஒரு பெரும் வாய்ப்பாக நாம் அமைத்துக் கொள்ள முடியும்.

மாநிலத்தின் முதன்மை மொழி தாய்மொழியாக இருக்கும் மாணவர்களுக்கு, தங்கள் பிராந்தியத்தில் சிறுபான்மையினர் பேசும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களின் கலாச்சாரம், அவர்களின் இலக்கியம் மற்றும் அவர்களின் மரபுகளை நோக்கும் கண் திறக்க உதவும். சமூகங்களுக்கிடையில் புரிந்துகொள்ளுதல், மற்றும் ஒருங்கிணைப்புக்கு இது அதிக வாய்ப்பை வழங்கும்.

பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான மொழியியல் சிறுபான்மையினர் இல்லாதிருந்தால், மாணவர்கள் சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த பாரதீய மொழியையும் கற்றுக்கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும், இது பள்ளியால் இரண்டாம் மொழியாக வழங்கப்படலாம். நம் நாட்டின் சிறந்த கலாச்சாரங்களைக் கற்றுக்கொள்ளவும் பாராட்டவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நமது பண்டைய தேசத்தின் பல்வேறு மொழிகளை அறிந்துகொள்வது மிகவும் பெருமை அளிக்கும்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், ஆங்கிலம் கற்றல் (அல்லது அரபு, ஜப்பானிய, ஸ்பானிஷ் போன்ற மற்றொரு வெளிநாட்டு மொழி) கற்றல் ஒருவரின் தொழில் வாழ்க்கையை முன்னேற்ற சில வாய்ப்புகளை வழங்க உதவக்கூடும்.

மொழிகள் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும்?

பள்ளி வழங்க வேண்டிய இரண்டாவது மொழியைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை ஜனநாயகமாக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் மாநிலத்தின் பெரும்பான்மை பேசும் மொழியை கல்வி ஊடகமாகப் பயன்படுத்தும், இது முதல் மொழியாகவும் இருக்கும்.

சில குறிப்பிட்ட மொழி(களை) பள்ளியில் இரண்டாம் மொழியாக வழங்குமாறு மாணவர்கள் கோருவதற்கான வாய்ப்பை பள்ளி வழங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழியைக் கேட்கும் குறைந்தபட்ச எண் அல்லது குறைந்தபட்ச சதவீத மாணவர்கள் இருந்தால், அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கு முழுநேர ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் ஏதேனும் ஒரு மொழியைக் கற்குமாறு கோரினால், ஒரு பகுதிநேர ஆசிரியரை பணியமர்த்தலாம். பள்ளி அமைந்துள்ள வட்டாரத்தில் ஆசிரியர் கிடைக்கும் வரை, மாணவர்கள் விரும்பும் பாரதீய மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு தடையாக இருக்கக்கூடாது.

முதல் மொழி, முன்பள்ளி கட்டத்திலிருந்து தொடக்கப்பள்ளி ஆண்டுகளில் முடிந்தால் அதற்கும் அப்பால் கற்பிக்கப்பட வேண்டும். இந்தக் கட்டத்தில் துல்லியமான உச்சரிப்பு, சரியான சொற்களஞ்சியத்தின் பயன்பாடு, பேசும் பாணியை அதிக மரியாதைக்குரிய, நுண்ணறிவு மற்றும் ஆழமானதாக அமைவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்பட வேண்டும்.

முன்பள்ளிகளில் முக்கியத்துவம் கவனிப்பது மற்றும் பேசும் திறன் ஆகியவற்றில் இருக்க வேண்டும், தாழ்ந்த தொடக்கப்பள்ளி மட்டங்களில் போதுமான வாசிப்பு, பாராயணம் மற்றும் கதை சொல்லல் இருக்க வேண்டும். இந்த கட்டத்தில், குழந்தையின் உச்சரிப்பு ஒரு பெரிய அளவிற்கு அமைந்துவிடுகிறது. சரியான சொற்களஞ்சியத்தின் பயன்பாட்டுடன் நன்கு உச்சரிக்கப்படும் மரியாதை நிறைந்த மொழி அம்மொழியின் அதிர்வுகளின் சக்தியை முன்னோக்கி கொண்டு செல்லும்.

இரண்டாவது மொழி இரண்டு நிலைகளில் வழங்கப்படலாம்: அடிப்படை மற்றும் உயர் நிலை. அடிப்படை நிலையில், கேட்பது மற்றும் பேசுவதில் கவனம் முக்கியமாக இருக்கவேண்டும் இத்துடன் அடிப்படை வாசிப்பு மற்றும் எழுத்து கற்பிக்கப்பட வேண்டும். இது மேல் தொடக்கப்பள்ளியில் தொடங்கி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் படிப்படியாக கற்பிக்கப்படலாம். உயர் நிலையில் கற்க விரும்பும் மாணவர்கள் அதிக இலக்கணம் மற்றும் இலக்கியம் மற்றும் அதிக ஆழமான படிப்பைக் கொண்டு மொழியைக் கற்றுக்கொள்ளலாம். இந்த மாணவர்களுக்கு மொழி படிப்பு ஆண்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

மூன்றாம் மொழி (இது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்கிலமாக இருக்கும்) நன்கு புரிந்துகொள்வது, பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவதை மாணவர் எளிது என்று உணரும் அளவிற்கு கற்பிக்கப்படலாம். இந்த பயிற்ச்சி பயனுள்ளதாகவும் நடைமுறைத் தொடர்பு திறன் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். உயர் மட்ட இலக்கணம் மற்றும் இலக்கியம் மீதான வலியுறுத்தல் குறைக்கப்படலாம். ஆங்கிலம் கற்றல் தாழ்ந்த தொடக்க பள்ளி மட்டத்தில் தொடங்கி நடுநிலைப்பள்ளி வரை படிப்படியாக தொடரலாம்.

இவ்வாறு பள்ளிகளில் மூன்று மொழிகள் மாணவர்கள் கற்க வழிவகுத்து ஜனநாயக ரீதியாக மாணவர்களின் மொழி கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவைகளை மாணவர்கள் படிக்கும் வண்ணம் ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் கொள்கை. இதில் பள்ளிகளோ மாநில அரசுகளோ கல்வி அமைச்சகங்களோ இரண்டாம் மொழி என்னவாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் எடுப்பது எந்த விதத்திலும் ஜனநாயகம் அல்ல என்பதை உறுதி செய்துகொண்டு, பாரபட்சமின்றி எந்த பாரதீய மொழியையும் கற்பதற்கு வாய்ப்பும் ஊக்கமும் அளித்து நம் நாட்டின் மொழி பன்மையையும் கலாச்சாரங்களையும் காப்பாற்றுவதுதான் புதிய கல்வித் திட்டத்தின் நோக்கம் என்பதை உணர்ந்து இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.

ஜெய்ஹிந்த்!