பாரதீய கல்வி (பகுதி - 4)
பாரம்பரிய பாரதீய தொடக்கக் கல்வி முறை
இந்தத் தொடரின் 2-ம் பகுதியில், பிரிட்டிஷ் கல்வி அமைப்புக்கு முன் இந்தியாவில் வழங்கப்பட்ட கல்வியை பற்றி சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தது. ஆங்கிலேயர்கள், மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளின் பதிவுகளிலிருந்து இதைப்பற்றி இன்னும் பல விவரங்கள் கிடைக்கின்றன.
தொடக்கக் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி என இரண்டு கட்டங்களில் கல்வி வழங்கப்பட்டது; இந்த பகுதியில் தொடக்கக் கல்வி விவரிக்கப்படும்.
கண்ணோட்டம்
முதலாவதாக, எந்த பிராந்தியத்திலும் மையப்படுத்தப்பட்ட கல்வி முறை இல்லை. பிராந்தியத்தின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் மொழியில் மாணவர்களின் கல்வி வழங்கப்பட்டது. இரண்டாவதாக, பரந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாடு முழுவதும் தொடக்கக் கல்வியின் முக்கிய உள்ளடக்கம், தன்மை மேம்பாடு மற்றும் தர்மத்தையே சார்ந்து வந்தது. மூன்றாவது, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் - மலபாரில், மெட்ராஸில், பஞ்சாபில், பீகாரில், வங்காளத்தில், குஜராத்தில் - அடிப்படை எண்கணித கணக்கீடுகள் மற்றும் படிக்கவும் எழுதவும் கற்பிக்கப்பட்டனர். நான்காவதாக, ஆசிரியர்கள் நாடு முழுவதும் உயர்வாக நடத்தப்பட்டனர், மேலும் ஆசிரியரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது சமூகத்தின் கடமையாக இருந்தது. ஐந்தாவது, நாடு முழுவதும், ஆசிரியர்கள் அவர்கள் செய்த தொண்டின் அளவிற்கு ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வகையில் ஏழைகளாகவே இருந்தனர்.
பள்ளி உள்கட்டமைப்பும் ஆசிரியர் சம்பளமும்
‘History of Indigenous Education in the Panjab,’ என்ற புத்தகத்தில் G. W. லீட்னர், “படையெடுப்பு மற்றும் உள்நாட்டுப் போரினால் அடி வாங்கிய போதிலும், பஞ்சாப் நன்கொடையை திரட்டி கல்வியை பாதுகாத்தது; சமூகத்தின் மிக மோசமான நபர்கள் கூட பள்ளிகளை நிறுவுவதன் மூலமும் அறிஞர்களுக்கு வெகுமதி அளிப்பதன் மூலமும் தங்கள் பாவங்களை தீர்த்துக்கொள்ள ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டனர். மதத்தை கற்பிக்க பள்ளி இணைக்கப்படாத எந்தக் கோயிலும் மசூதியும் தர்மசாலையும் இல்லை. இவைகளை தவிர, கிராமங்களில் இந்துக்கள், முகமதியர்கள் மற்றும் சீக்கியர்கள் ஒன்றாக படிக்க ஆயிரக்கணக்கான மதச்சார்பற்ற பள்ளிகள் இருந்தன,” என்று குறிப்பிடுகிறார்.
தென் மாநிலங்களில், வீட்டின் முன் திண்ணை ஒரு நிலையான அம்சமாக இருந்தது. இந்த திண்ணை பல பயன்களுக்கு உதவுகிறது; கிராம ஆசிரியரின் வீட்டில், இங்கேயே பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வந்தது, இவைகளை 'திண்ணைப் பள்ளிக்கூடம்' என்று அழைத்தனர். பிரிட்டிஷ் கல்வி அமைப்பு நிறுவப்பட்ட போதிலும், இவை 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்து இருந்தன. அந்தணர்கள் அல்லது வள்ளுவர்கள் என்று ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர்; இவர்கள் பிராமணர்கள் மட்டுமே அல்லாமல் பல சமூகங்களில் இருந்தும் வந்தனர்.
ஆசிரியர்கள் மரங்களின் கீழ் அல்லது கூரைகளின் கீழ் உட்கார்ந்து மாணவர்களுக்கு கற்பிப்பது நடைமுறையில் பொதுவானதாக இருந்ததை தரம்பாலின் தொகுப்புகள் காட்டுகின்றன. ஆசிரியர்கள் வசதியான மாணவர்கள் அல்லது பெண் மாணவர்களுக்கு, மாணவர்களின் வீடுகளில் கற்பிப்பதும் வழக்கமாக இருந்தது.
சொத்து இருந்த பலர் பள்ளிகளை நடத்துவதற்கு வருமானத்தை ஈட்டுவதற்கான ஆஸ்தியை நிறுவினர். ஒவ்வொரு கிராமவாசியும் தங்கள் விளைபொருட்களின் ஒரு பகுதியை ஆசிரியருக்கு அர்ப்பணிப்பதில் பெருமிதம் கொண்டனர். ஆசிரியருக்கு பணம் செலுத்த இயலாத ஏழ்மையான மாணவர்கள், தமக்கும் ஆசிரியருக்கும் உணவளிக்க கிராம மக்களிடமிருந்து பிச்சை எடுத்தனர். சமையலுக்கு எண்ணெய் பிச்சை கேட்கும் ஒரு தமிழ் பாடல் இலங்கை கிராமங்களில் உள்ள மாணவர்களால் பாடப்பட்டது - இந்த பாடல் இன்னும் மக்கள் நினைவில் உள்ளது.
இவை பாரிய பள்ளி உள்கட்டமைப்பையும் நிலையான ஊதியத்திற்கு வேலை செய்யும் ஆசிரியர்களை நியமிக்கும் பிரிட்டிஷ் கல்வி முறைக்கு முற்றிலும் மாறுபட்டவை.
பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை
ஆங்கிலேயர்களின் பதிவுகளின்படி, அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கிராமப் பள்ளிகளில் பயின்றனர்; இதற்கு விதிவிலக்காக சமூகத்திலிருந்து ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று ஒதுக்கப்பட்டு, காந்தியால் ‘ஹரிஜன்’என்று பெயர் சூட்டப்பட்டவர்களுடைய குழந்தைகள் இருந்தனர்.
குழந்தைகளின் சமூகவாரியான விகிதம் மக்கள் தொகை விகிதத்தை பிரதிபலித்தது. இவ்வாறு, பிராமண (கல்வியாளர்களும் கோயில் பூசாரிகளும்) மற்றும் வைசிய (வணிகர்கள்) சமூகங்களை விட சூத்திர (திறமையான தொழில் வல்லுநர்கள்) குழந்தைகள் அதிகமாக இருந்தனர்.
பள்ளிக்கூட கல்வி பெரும்பாலும் சிறுவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது, சிறுமிகள் தங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது தனியார் ஆசிரியர்களிடமிருந்தோ கல்வியைக் கொண்டிருந்தனர். தேசத்தின் சில இடங்களில் ஒரு சில பள்ளிகளில் சிறுமிகளும் இருந்தனர்.
பாடத்திட்டம்
தொடக்கக் கல்விக்கான மையங்கள் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் இடங்களாக இருந்தன - தரம்பாலின் வார்த்தைகளில் அவை “watering holes of culture” களாக இருந்தன - பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் கலாச்சாரம் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கும், ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு சமூகமும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தெரிந்து கொள்வதற்கும், இயற்கையை மதித்து படைப்பில் ஒருவரின் இடத்தை அறிந்து கொள்வதற்கும் பள்ளிக்கூடம் உகந்த இடமாக இருந்தது. தமிழ் பிராந்தியங்களின் குழந்தைகள் ஆத்திச்சுடியைப் பாராயணம் செய்து, வாழ நல்லொழுக்கங்களாக இவர்களைப் பின்பற்றினர்.
இராமாயணம், மகாபாரதம் மற்றும் அந்தப் பிராந்தியத்தின் ஆதிக்க சமூகத்தின் பாரம்பரியத்தின்படி புராணம்(கள்) படிப்பது தொடக்கக் கல்வியின் ஒரு பகுதியாக இருந்தது. நிகழ்த்து கலை (performing Arts) மற்றும் நுண்கலைகளை (fine arts) உள்ளடக்கிய முறைசாரா கல்வி (informal education) வழியாகவும் அனைத்து சமூகங்களிலும் இவை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டன.
மாணவர்களுக்கு உள்ளூர் மொழிகளில் தர்ம சாஸ்திரங்களின் உள்ளடக்கங்கள் கற்பிக்கப்பட்டன. திருக்குரள் குறுக்கப்பட்ட தர்மசாஸ்திரங்களின் தொகுப்பாகும்.
நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணக்கீடு ஆகியவற்றை அறிந்திருந்தனர். வரி கணிதம் கற்பிக்கப்பட்டது. பஞ்சாபில் பொதுவான பரிவர்த்தனைகளில் குறைந்த உயிரெழுத்துக்களை பயன்படுத்தும் எளிமை ஆக்கப்பட்ட எழுத்து வடிவத்தை உபயோகித்தனர் - இதனை G. W. லீட்னர் 'Lande' எழுத்து என்று குறிப்பிட்டுள்ளார் - இவ்விதமான எழுத்துக்கள் ஒவ்வொரு ஊரிலும் வேறுபட்டிருந்தது.
பயன்படுத்தப்பட்ட கற்பிதங்கள்
ஆங்கிலேயர்கள் வந்தபோது இந்தியா முழுவதும் மக்களுக்கு கல்வி கற்பிப்பது நடைமுறையில் இருந்தது. உண்மையில், கல்வி குறைவாக பரவி இருந்த மேற்கத்திய நாடுகளில் தொழில்துறை புரட்சியினால் அதிகரித்த கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கும் அங்கிருந்து மற்ற மேற்கு நாடுகளுக்கும் பல யோசனைகளை எடுத்துச் சென்றனர்.
பள்ளி வயது குழந்தைகள் 5 முதல் 8 வயதிற்குள் பள்ளிப்படிப்பைத் தொடங்கினர் - இது குழந்தையின் வளர்ச்சியையே அடிப்படையாகக் கொண்டு இருந்ததே ஒழிய கண்டிப்பானதாக இல்லை. பொதுவாக 12 முதல் 14 வயதுக்குள் தொடக்கக் கல்வியை முடித்தனர்.
பள்ளி நேரம் நீண்ட பள்ளி நாட்கள் சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை தொடர்ந்தது. பாரம்பரிய இந்திய நாட்காட்டியை பள்ளிகள் பின்பற்றியதால் அனைத்து பண்டிகை நாட்களும் பள்ளி விடுமுறையாக இருந்தன.
மனப்பாடம்நினைவில் கொள்வது மற்றும் மனப்பாடம் செய்வது வலியுறுத்தப்பட்டது. படிப்பில் மூத்த மாணவர்கள் மூலம் கண்காணிக்கும் முறை (Monitor System) மனப்பாடம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
எழுதுதல்பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தையும் எழுதக் கற்றுக்கொண்டது. இதை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரூ பெல் (Dr Andrew Bell) மலபாரில் கவனித்தார், அங்கு ஒவ்வொரு குழந்தைக்கும் படிக்க கற்றுக்கொடுக்கப்படுவதற்கு முன்பே (மணலில்) எழுத கற்பிக்கப்பட்டது. எழுதுவது சமூக பரிவர்த்தனைகளில் பொதுவாக பயன்படுத்தப் பட்டது. எழுதுவது பெரும்பாலும் மணலில் தான். மாணவர் நன்றாக எழுத பயிற்சி பெறும் வரை விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்தாமல் வாழை இலைகளில் மை வைத்து எழுதினார்கள்.
சமகால ஐரோப்பாவில் குழந்தைகளுக்கு படிக்கக் கற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் எழுதுவது நிபுணர்களுக்கான ஒரு செயலாக ஒதுக்கி வைக்கப்பட்டது. அனைவருக்கும் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இந்தியாவிலிருந்து ஐரோப்பா எடுத்துக் கொண்டது.
Zone of Proximal Development 1623-ல் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பில் இந்தியாவில் தனது அனுபவங்களைப் பற்றி பியட்ரோ டெல்லா வால் (Pietro Della Valle) என்ற ஒரு போர்த்துகீசிய பயணி எழுதினார். தனது இதழில், தான் பார்த்த நான்கு இந்திய குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை விவரிக்கிறார். அவர்கள் தங்கள் பாடங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் (பெருக்கல் அட்டவணைகளின் எடுத்துக்காட்டை கொள்கிறார்) முதல் மாணவர் அவர் முன் பரப்பி இருந்த மணல் மீது எழுதும்போது பாடத் தொடங்கினார், பின்னர் ஒவ்வொரு குழந்தையும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பாடி முதல் குழந்தைக்கு வந்தபின்பு அடுத்த வரி தொடங்கியது. இவ்வாறு அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்கள். தவறுகள் செய்ய மாட்டார்களா என்று அவர் குழந்தைகளிடம் கேட்டபோது, ஒருவர் தவறு செய்தால் குழுவில் உள்ள வேறு யாராவது அதைச் சரிசெய்வார்கள் என்று அவர்கள் பதில் சொன்னார்கள். தங்கள் ஆசிரியரால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முழுவதும் அவர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்தார்கள்.
ஆசிரியர் அருகில் இல்லாத நிலையிலும், அத்தகைய நல்ல நினைவாற்றலுக்கு நிகழ்கிற கற்றல் பணச் செலவு இல்லாமல் இத்தகைய சிக்கனமான முறையில் ஏற்படுவதை கண்டு அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். 18-ம் நூற்றாண்டின் இறுதியில் (1700 களில்), இந்த முறையை மீண்டும் மெட்ராஸில் டாக்டர் பெல் கவனித்தார். பிரிட்டனை சேர்ந்த ஜோசப் லாங்காஸ்டரால் (Joseph Lancaster) இது பிரிட்டிஷ் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது, இது பெல்-லாங்காஸ்டர் முறை (அ) மெட்ராஸ் சிஸ்டம் (Madras System) (அ) மானிட்டோரியல் கல்வி முறை (Monitorial System of Education) என அறியப்பட்டது, இது குறைந்த எண்ணிக்கையிலான பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஏராளமான பிரிட்டிஷ் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு உதவியது. 1805-ம் ஆண்டிற்கான வருடாந்திர மறுஆய்வு மற்றும் இலக்கிய வரலாற்றில் (Annual Review and History of Literature) லாங்காஸ்டர் அதை இங்கிலாந்தில் செயல்படுத்த இந்தியாவிலிருந்து கடன் வாங்கியதாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது (இது இந்தியாவில் படிப்படியாக வெளியேற்றப்பட்ட போதிலும் கூட).
பெல் மற்றும் லாங்காஸ்டருக்கு பெருமை சேர்க்கையில் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றவர்கள் ஒருபோதும் இந்த முறையின் மூலத்தை ஒப்புக் கொள்ளவில்லை. தனது புத்தகமான ‘The Madras School’ இல் பெல் ‘யுரேகா’ (Eureka) தருணம் தோன்றியதாகக் கூட கூறினார், மேலும் அவர் ஒரு நியூட்டன் (Newton), ஒரு பிராங்க்ளின் (Franklin), ஒரு லாவோயிசரின் (Lavoisier) உதாரணத்தைப் பின்பற்றினார் என்றும் கூறினார். 1823-ம் ஆண்டில் பெல்லாரி கலெக்டர் ஏ. டி. காம்ப்பெல் (A. D. Campbell), “பூர்வீக பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தரப்படும் சிக்கனம் மிகுந்த முறை, மேம்பட்ட மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு கற்பித்து அதே நேரத்தில் அவர்களின் சொந்த அறிவினை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமைப்பு போற்றத்தக்கது; இதன் சாயல் இங்கிலாந்தில் பயன்படுத்துவதற்கு தகுதியானது. ” என்பதை குறிப்பிட்டார்.
[20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், லெவ் வைகோட்ஸ்கி (Lev Vygotsky) என்ற ரஷ்ய உளவியலாளர் இந்த கற்றல் முறை குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார், மாணவர்களிடையே ஒரு சாரக்கட்டு (scaffolding) உருவாக்குவது திறமையான சக கற்றலை (Peer Learning) ஊக்குவிப்பதைக் கண்டுபிடித்தார், அதை அவர் Zone of Proximal Development (ZPD) என்று அழைத்தார்.]
பட்டமளிப்பு நிலைகள் மாணவர்களுக்கு வயது அடிப்படையிலான வகுப்புகள் இல்லை. பொதுவாக 3 அல்லது 4 நிலைகள், அவற்றில் குழந்தைகள் அவர்களின் திறன்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டனர். மாணவர் ஆசிரியரின் தனிப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் தொடக்கக் கல்வியைப் பெற்றதாகக் கருதப்பட்டது.
ஒழுக்கம்ஆசிரியர்கள் சரியான நேரம், நடத்தை மற்றும் மாணவர்களின் மன விழிப்புணர்வு ஆகியவற்றில் மிகவும் கடுமையான ஒழுக்கத்தை எதிர்பார்த்தனர். சில ஆசிரியர்களால் சரீர ரீதியான தண்டனைகள் கொடுக்கப்பட்டன - பிரம்படி, மண்டியிட்டு அல்லது கைகளை மேலே உயர்த்தி கொண்டு நிற்பது போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது – மற்ற சில ஆசிரியர்கள் ‘அகிம்சா வாதிகள்’என்று விவரிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, வாழ்க்கையையும் சமூகத்தையும் எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதே தொடக்கக் கல்வியின் தெளிவான நோக்கமாக இருந்தது. அவர்கள் நல்லொழுக்கங்கள் கொண்ட நபர்களாக உருவாகவும் அவர்கள் சமுதாயத்தில் ஆற்ற வேண்டிய பங்கை அறிந்து உபயோகமான புத்திமிக்க சமூக நபர்களாக வாழ வாழ்க்கைத் திறன்களை கற்கவும் கல்விமுறை அமைக்கப்பட்டது. சமுதாயம் சுயநல அகங்காரத்தை மரியாதை குறைவாக பார்க்கும் அளவிற்கு இக்கல்வி முறை மூலம் பணிவு வளர்க்கப்பட்டது. அத்தகைய கல்வி முறையில் சமூக ஒத்திசைவு உறுதி செய்யப்பட்டது. கல்வியின் இந்த கட்டம் மாணவர்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அறிவுபூர்வமாகவும் வளர உதவியது. கல்வி பொருளாதார சிக்கனத்துடன் மற்றும் மக்களுக்கு அர்த்தமுள்ள கற்பிதத்தைத் திறம்பட அளித்ததன் மூலம் சிறப்பாகச் செயல்பட்டது என்பதை காணலாம்.
தொடக்கக் கல்வி பெற்ற அனைத்து மாணவர்களும் மேலதிக படிப்புக்குச் சென்றார்களா? அந்த நேரத்தில் நம் நாட்டில் உயர் கல்வி மற்றும் அறிவியல் மேம்பாடு எவ்வாறு இருந்தது?
(அடுத்த பகுதியில் தொடரும்)
References:
Grey Edward ed. (1892). The Travels of Pietro Della Valle in India 1623 (Vol II), Hakluyt Society 1792. Available at https://www.rarebooksocietyofindia.org/book_archive/196174216674_10151529149931675.pdf
G. W. Lietner (1882). History of Indigenous Education in the Panjab, Superintendent of Govt. Printing.Available at http://www.panjabdigilib.org/webuser/searches/displayPage.jsp?ID=6767&page=1&CategoryID=1&Searched=
Dharampal (2000). The Beautiful Tree, Other India Press. Available at http://www.arvindguptatoys.com/arvindgupta/beautifultree.pdf
Vaman N (2015). Mattakalappil Hindukalvi parambariyam. Available at http://arayampathy.lk/research/36-09022016
Dr Nagaswamy R (2018). Thirukural - An Abridgement of Sastras, Giri Trading Agency.
Dede Chris, Richards John, Saxberg Bror (2019). Learning Engineering for Online EducationTheoretical Contexts and Design-Based Examples, Routledge. Excerpt available at https://bit.ly/3gXbIIC
Tschurenev, Jana (2019). Empire, Civil Society, and the Beginnings of Colonial Education in India, Cambridge University Press. Excerpt available at https://bit.ly/2UcVP6K