பாரதிய கல்வியின் குறிக்கோள்

பாரதிய கல்வியின் குறிக்கோள்

· திரு முகுல் காநிட்கர்

பாரதிய சிக்ஷண்   மண்டல் அமைப்பின் தியான ஸ்லோகத்துடன் இந்த நிகழ்ச்சியை துவக்க விரும்புகிறேன். விஷ்ணு புராணத்தில் வரும் இந்த ஸ்லோகம் பாரதிய சிக்ஷண்   மண்டல் அமைப்பின் கொள்கையின் அடிப்படையாக இருப்பதாக உணர்கிறோம்.

தத் கர்ம யன்ன ப³ந்தா⁴ய, ஸா வித்³யா யா விமுக்தயே |

ஆயாஸாயாபரம்ʼ கர்ம, வித்³ய(அ)ன்யா ஶில்பனைபுணம்||

விஷ்ணு புராணத்தின் மகரிஷிசொல்கிறார், எது முக்தி அளிக்கிறதோ அதுவே கல்வி. அத்தோடு அவர் நிறுத்தவில்லை அவர் மேலும் சொல்கிறார் எது இவ்வாறு முக்தி அளிக்கவில்லையோ எது உங்களை கட்டுக்களில் இருந்து விடுதலை அளிக்கவில்லையோ அது கல்வியே அல்ல என்று கூறுகிறார்.  அப்படி முக்தி அளிக்கும் கல்வி அல்லாத மற்ற எல்லாமே வெறும் திறமை அல்லது திறன் சம்பந்தப்பட்ட விஷயம் என்று மிகவும் எளிமையாக அவற்றை இரண்டாம் நிலைக்கு ஒதுக்கி வைத்து பேசுகிறார்.  இந்தத் திறன் அல்லது திறமைக்கு வெறும் பயிற்ச்சி மட்டுமே போதும் இதற்கு விசேஷமான சிந்தனையோ அறிவோ தெளிவோ தேவையில்லை என்கிறார்.  இந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுதல் என்பது ஒன்றும் மிகப்பெரிய காரியம் அல்ல தினம் இடைவிடாது ஏதோ ஒரு விஷயத்தைப் பயிற்சி செய்தால் திறமை என்பது வளர்ந்து விடும்.  தொடர்ந்து பயிலப் பயில அந்த திறமையானது நமது ஆழ் மனதிற்குள் புகுந்து விசேஷமாக இதற்காக அறிவை பயன்படுத்த வேண்டியதில்லை எனும் நிலைக்கு இட்டுச் சென்று இயல்பாக சரீர உணர்வுடன் இருப்பவர்கள் எல்லோராலேயுமேஅந்த திறமையை வளர்த்துக் கொண்டு அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நாமே கண்டிருக்கிறோம்.

துவக்கத்தில் மிதிவண்டியை ஓட்ட பழகுபவர்கள் எல்லாருமே அதை மிகவும் சிரமமான காரியம் என்று எண்ணி இருப்பார்கள் பெடல் எங்கே இருக்கிறது, பிரேக் எங்கே இருக்கிறது, கைப்பிடி எங்கே இருக்கிறது, என்ற  பழக்கமில்லாததால் எங்கு காலை வைக்கிறோம், எங்கே கையை வைக்கிறோம் என்று தெரியாமல் சிரமப்பட்டு இருப்பார்கள் அதே நேரத்தில் சாலையின் மீதும் கண் வைக்க வேண்டும் வரும்போது வாகனங்கள் மீது கவனம் இருக்க வேண்டும் போக்குவரத்தின் மீது கவனம் இருக்க வேண்டும் இது எல்லாமே சேர்ந்து மிகப்பெரிய அச்சத்தை கலக்கத்தை மனதில் உண்டு பண்ணி இருக்கும் பைக், கார் போன்றவற்றிற்கும் இது போலவே கூறலாம். . இன்று நம்மை ஏதேனும் வாகனத்தை ஓட்டச் சொன்னால் விசேஷமாக சாலையை கவனித்து இந்த பிரேக் கியர் இவை எல்லாம் எங்கிருக்கிறது என்பதை கவனிக்காமல் மிகவும் அனாயாசமாக நாம் வாகனத்தை எடுத்து செலுத்த துவங்கி விடுகிறோம் இது எல்லாமே வெறும் பயிற்சியினால் சாத்தியமானது.

விஷ்ணு புராணத்தில் மகரிஷி, மேலே சொல்லப்பட்ட எல்லாமே வெறும் பயிற்சிதான் இதற்கு பெயர் வித்யை அல்ல கல்வி அல்ல என்று கூறுகிறார்.  அது எந்த கல்வி முறையாக இருந்தாலும் நமக்கு முக்தி அளிக்க கூடியதாக தளைகளிலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.  இதைத்தான் நாம் இழந்து இழந்து இருக்கிறோம் இதை மீண்டும் கை கொள்ள வேண்டும் அதற்காகத்தான் கடந்த அரை நூற்றாண்டாக பாரதிய சிக்ஷண்   மண்டல் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.  இப்போது வேடிக்கை என்னவென்றால் - இந்த வித்யை என்பது கட்டுக்களுக்கு ஆளாகியுள்ளது அதனால் முதலில் இந்த வித்யையை கட்டுக்களில் இருந்து விடுதலை செய்து அதை சரியாக பயில்வதன் மூலம் நாமும் கட்டுக்களில் இருந்து விடுபடலாம் என்ற நிலையில் இருக்கிறோம்.

நமது இந்த ஸ்லோகத்தின் முதல் பகுதி மிகவும் முக்கியமானதாகும் நாம் இப்போது பெற்ற பயிற்சி இதற்கும் இந்த ஸ்லோகத்திற்கும் மிகவும் நெருக்கமான  பந்தம் உள்ளது.  நமது பாரதிய வழி கல்வி என்பது ஒவ்வொருவருக்குமாக தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கல்வி முறை. நமது சுய சார்பு கல்வி முறையில் மிகவும் முயற்சி செய்து குறைகளை நீக்கப்பட்டுள்ளன, எந்தவிதமான மன அழுத்தமும் அளிக்காத  கல்விமுறை இதுவே.

ஆங்கிலத்தில் இந்த கல்வி என்ற சொல்லுக்கு எஜுகேஷன் என்று சொல்கிறோம்.  அந்த சொல்லின் அர்த்தம் வெளிக்கொண்டு என்பதாகும் .

(ஈசா) உபநிடதத்தில் மிகவும் அழகாக  'அபாவ்ருணு' என்ற சொல்லாடல்  உள்ளது.  அபாவ்ருணு என்றால் அஞ்ஞான இருள் என்பதை கொண்டு மூடி மறைக்கப்பட்டுள்ளதை விலக்கி எல்லாருக்கும் காண்பித்தல் என்று பொருள்.   இவ்வாறாக அந்த உபநிடத ரிஷி பூஷன் என்று குறிப்பிடப்படும் சூரியனிடம் வேண்டுகிறார்.  இந்த இந்தப் பூஷன் என்ற சொல்லுக்கு போஷிப்பது என்று பொருள் அதாவது எல்லா விதமான சத்துக்களையும் அனைத்து உயிர்களுக்கும் தந்து போஷிப்பதால் அவன் பூஷன் ஆகிறான்.

ஹிரண்மயேன பாத்ரேன ஸத்யஸ்ய அபிஹிதம் முகம் |

இதன் பொருள் -  இந்த அழகான தங்க பாத்திரமானது உண்மையின் முகத்தை மறைத்து வைத்துள்ளது.

தத் த்வம் அபாவ்ருணு |

தயவு செய்து அந்த திரையை விலக்கவும் என்று சூரியனை வேண்டுகிறோம்.

எதற்காக?  நானே உண்மையாக ஆக வேண்டும்.  உண்மைமயமாக ஆக வேண்டும்.  உண்மை எதுவோ அதுவே நானாக ஆக வேண்டும் என்பதற்காக.

இதில் உள்ள மிகப்பெரிய தடங்கல் தடை என்பதே  மாயையின் திரையாகும்.  இதுதான் அறியாமை எனும் திரை இதை நீக்க த்தான் – “சா வித்யா யா விமுக்தயே”  என்பதன் மூலமாகவும் (குறிப்பிடப்பட்ட தியான ஸ்லோகம்) வேண்டுகிறோம்.

கல்வியைப் பற்றி விளக்கி விட்டு மட்டும் இந்த ஸ்லோகம் நிறுத்தவில்லை.  அதற்கு ஒரு படி மேலே போய் எது கர்மா, எது கடமை, எது செய்ய வேண்டிய பணி என்பதையும் விளக்குகிறது.  எது கடமை?  எது நம்மை கட்டுப்படுத்துவதில்லையோ தடையாக விளங்கவில்லையோ அதுவே கடமை. இந்த கடமை என்ற சொல்லை ஓரளவுக்கு கர்மா என்ற சொல்லோடு இணைக்கலாம்.

நவீன விஞ்ஞானம் சொல்வதற்கு நேர் மாறாக உள்ளது இந்த விளக்கம்.  நியூட்டனின் மூன்றாவது விதிக்கு நேர் எதிராக உள்ளது இந்த ஸ்லோகத்தின் விளக்கம் காரண- விளைவு கோட்பாடு  என்று கூறுவார்கள் அதாவது cause and effect theory - அது இதனோடு ஒத்துப் போகவே இல்லை.

நமது தியான ஸ்லோகம் என்ன சொல்கிறது?  கட்டுப்படுத்தாதது எதுவோ அதுவே கர்மா என்று சொல்கிறது. அதாவது வினை உள்ளது, ஆனால் அதற்கு இயல்பாக எதிர்வினை என்று ஏதுமில்லை.  நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறது? For every action there is an equal and opposite reaction.  ஆனால் இங்கு வினை உள்ளது. ஆனால் எதிர் வினை இல்லாமல் இருப்பது எதுவோ அதுவே வினை, அதுவே கர்மா என்கிறோம்.  அப்படித்தான் இந்த கர்மா என்பதை செய்ய வேண்டும் மொத்த பகவத் கீதையுமே அப்படித்தான் சொல்கிறது.

யுத்தயஸ்வ - யுத்தம் செய்.  ஆனால் விகதஜ்வர - கோபம், வேகம்,

பந்தம், வெற்றி தோல்வியின் மீது பற்று இன்றி. இது எதிரெதிர் பொருள் உள்ள கருத்துகள்.  இது எப்படி சாத்தியம்?

எல்லா வினைகளுமே ஏதோ ஒரு காரணத்திற்காக செய்யப்படுகிறது  அப்படி ஆற்றப்பட்ட வினை வேறொரு வினைக்கு மூலமாக ஆகிறது இப்படியாக வினை-காரணம்-வினை-காரணம் என்று இந்தச் சங்கிலி தொடர் நிற்காமல் தொடர்ந்து கொண்டே போகிறது.  இந்தச் சங்கிலித் தொடரால் நீ பிணைக்கப்படுவாயானால் நீ வினை ஆற்றுவதில்லை, வினைக்கு எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறாய். அதுவும் எப்படி? நான் என்ற எண்ணத்துடன்.  இது எல்லாம் ஒன்று சேர மீண்டும் மீண்டும் இந்த பந்தத்தில் நம்மை கட்டிப்போடுகிறது என்று கூறுகிறார்.

இதைதான் வாழ்க்கை என்று வேறு கூறிக் கொள்கிறோம்.  ஆனால் வாழ்க்கையின் லட்சியம் என்ன?  பந்தங்களில் இருந்து விடுபடுதல்.  முக்தி என்பதை அடைதல். ஆனால் செய்வது என்ன?  மேலும் மேலும் பந்தங்களுக்கு ஆட்படுதல். எவ்வளவு வேறுபாடு பாருங்கள்!  முடிச்சுக்களை அவிழ்த்தல். முடிச்சுக்கு கிரந்தி என்பது இணை பதம்.

உளவியலில் ஃபோபியா என்றொரு சொல்லைப் பயன்படுத்துவார்கள்.  அதாவது பயம். பல்வேறு விதமான பயங்கள் உள்ளன.  எல்லாமே முடிச்சுகள் போன்றவையே.  இந்த முடிச்சுக்களை அவிழ்த்தால் பயம், ஃபோபியா என்பவை போய்விடும்.  இதுதான் முக்தி, இதுதான் சுதந்திரம், இதுதான் விடுதலை, இதுதான் கட்டுக்களிலிருந்து விடுபடுதல்.  இது எல்லாமே வினையாற்றும் போது செய்யப்பட வேண்டியது சும்மா இருக்கும் போது அல்ல.

கீதையில் கண்ணனும் அதைத்தான் சொல்கிறார் பணி செய்யாமல் இருத்தல் என்பது சரியல்ல.  சரியான வேலையை, திறம்படச் செய்தல் யோகமாகும். செய்வதே செயல் என்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் இது யோகத்தின் (யோக: கர்மஸு கௌசலம்) என்பது யோகத்தின் இலக்கணம் அல்ல. இது திறம்படச் செய்தலின் இலக்கணமாகும். இந்த சுலோகத்தின் முன் பகுதியில் - செய்யும் செயலில் புத்தியினை/கவனத்தை செலுத்திச் செய்தல் கௌசலம் என்று குறிப்பிடப்படுகிறது.

எப்போது உடல் மனம் சிந்தனை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்து ஒன்றாக குவிந்து ஒரே பணிக்காக இணைகிறதோ அதுவே யோகம் எனப்படுகிறது.  இந்தப் பயிற்சிகள் எல்லாமே உங்களது புத்தியின் மூலமாக சிந்தித்து செய்யப்படுவதால், இது புத்தியோகம் ஆகிறது. புத்தியோகத்தின் மூலம் நீங்கள் பலருக்கு இந்த பயிற்சியை/கல்வியை போதிப்பதற்கு தகுதியானவர்கள் ஆகிறீர்கள்.  இவ்வாறுசெயல்படும் போது அந்த செயலினால் விளையும் நன்மையும் தீமையும் இரண்டுமே, ஏற்படாமலேயே போகின்றன.  இவ்வாறு செய்வதனால் வினைப் பயனிலிருந்து விடுதலை அடைந்து முக்தியை நோக்கி பயணிக்கிறோம்.

சுவாமி கண்டனந்தா? (name to be verified) சொல்கிறார், உங்களை கட்டுப்படுத்தி வைக்கக்கூடிய சங்கிலிகள் தங்கமாக இருந்தால் என்ன, இரும்பாக இருந்தால் என்ன? எது உங்களை பந்தத்தில் ஆழ்த்துகிறதோ அந்த  கர்மத்திலிருந்து, கர்ம பந்தத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

இதில் சுக்ருத என்பது தங்கச் சங்கிலி - புண்ணியம் என்பதற்கு சமம். அதையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.  துஷ்க்ருத, அதாவது பாவம் என்பதை செய்தால், அதையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.  அதனால் நாம் 24 மணி நேரமும் எந்த செயலைச் செயலை செய்ய வேண்டுமோ அதை செய்தபடியே ஆனால் அதனால்கட்டுண்டு விடாமல் இருக்க வேண்டும்.    இது எல்லாமே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது.

பத்து இந்திரியங்களான (புலன்கள்) ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணித்து எந்த செயலை செய்து முடிக்க வேண்டுமோ அதை நோக்கியே செலுத்தி பயணித்து சிந்தித்து செயல்பட்டால் இந்த கர்ம பந்தத்தில் இருந்து விடுபடலாம்.  காரணம் - இவ்வளவு முனைப்புடன் ஒரு வேலையில் ஒருவர் ஈடுபட்டிருப்பாரேயானால் அவருக்கு பலனை பற்றி கவலைப்படுவதற்கு நேரமோ சிந்தனையோ இருக்காது. அதனால் பலனை பற்றி கவலைப்படாமல் கடமையை மட்டுமே செய்ய வேண்டிய அவசியத்தில் இருப்பதால் அவர் கர்ம பந்தத்திலிருந்து இயற்கையாகவே விடுபடுவார்.  கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொன்ன ஸ்லோகம் மிகவும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.  இன்று வரை இதன் உண்மையான பொருள் மேலே கூறப்பட்டுள்ளதுவே.  பலனை எதிர்பாராதே என்றால் பலனை இதுதான் பலன், இந்த பலன் தான் கிடைக்க வேண்டும் என்று எதிர்பாராதே என்று சொன்னாரே ஒழிய எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் கடமையைச் செய் என்று சொல்லவில்லை.  கீதை முழுவதிலும் எங்குமே கண்ணன் இப்படி செய்ய அப்படி செய் என்று சொல்லவில்லை ஒரே ஒரு குறிப்பு மட்டும்தான் தருகிறார் அர்ஜுனனை பார்த்து 27 முறை யுத்தம் செய், யுத்தம் செய் என்று பல்வேறு இடங்களில் கூறியுள்ளார் இது தவிர என் பகவத் கீதை முழுவதையும் சொன்ன பிறகு அர்ஜுனா உன் விருப்பம் எதுவோ அப்படி செய் என்று கூறி முடிக்கிறார்.

ஒரு குருவுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது அந்த வாக்கியம்.  இதை செய் என்று கட்டாயப்படுத்தாமல் எது விருப்பமோ அதை செய், உனக்கு சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன் என்று முடிக்கிறார் அதோடு கூட ஆழ்ந்து சிந்தி, கலந்த பேசு, ஆலோசனை செய் அதன்பிறகு முடிவெடு என்கிறார்.

அந்த சுலோகத்தில் கடமையை செய் என்று சொல்வதற்கு உண்மையான பொருள் கடமையை செய்ய மட்டுமே உனக்குத் தகுதி உள்ளது பலனை எதிர்பார்ப்பதற்கோ பலனை விவரிப்பதற்கோ, என்ன மாதிரியான பலன் உனக்கு வந்து சேர வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கோ உனக்கு எந்த விதமான தகுதியும் இல்லை. அதனால் உனக்கு இடப்பட்டிருக்கும்/தரப்பட்டிருக்கும் ஒரே செயல் கடமையைச் செய்வது மட்டுமே அதை மிகவும் சரியாக துல்லியமாக தவறின்றி சிறப்பாக செய் என்கிறார்.

இதில் செயற்கையான விஷயம் எது என்றால் பந்தத்திற்கு ஆட்படுவது தான்.  மற்ற உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே மிருகம் என்று பெயர். மற்ற மிருகங்களை போல மனிதனை கட்ட முடியாது, கட்டக்கூடாது. அவன் முக்திக்காக பிறந்தவன் அதை நோக்கித்தான் அவன் செயல்பட வேண்டும் கட்டுண்டு இருப்பதற்கு அல்ல.

இவ்வாறாக மனிதன் கட்டுப்பட கட்டுக்களுக்கு ஆட்பட்டு பந்தத்தில் உழன்று இருக்க பிறந்தவன் அல்ல இந்தப் பிறவி இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு பிறவியில் இந்த முக்திக்காக இந்த விடுதலைக்காக அவன் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். அது ஏன் இந்த பிறவியாகவே இருக்கக் கூடாது என்பதே நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. அதுதான் – “விமுக்தயே”-  முக்திக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டிய செயல் என்று தியான ஸ்லோகம் சொல்கிறது.

எந்தக் கலையாக இருந்தாலும் சரி ஆய கலைகள் 64, 16 வித்தைகள் இது எல்லாமே இந்த முக்தியை நோக்கி நம்மை இட்டுச்செல்வதாக அமைய வேண்டும்.  எது முக்தி? எது நம்மை பலனோடு கட்டுப்படுத்தி வைக்காமல் செயல் செய்யப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக செய்ய வைக்கிறதோ அதுவே முக்தி என்று அழைக்கப்படுகிறது.

மிக எளிமையாக சொல்வதென்றால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?  மிருகங்களுக்கு இருப்பது வினையாற்றுவது, எதிர்வினையாற்றுவது என்ற இரண்டே வழிகள்தான்.  ஒரு நாயின் மீது கல்லை எறிகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  பதிலுக்கு குரைக்கலாம் அல்லது ஓடிவிடலாம் அல்லது கடிக்கலாம். நாலாவது வழி என்று ஒன்று இல்லவே இல்லை.  காரணம் அவை விலங்கு வகைகளின் கீழே வருகின்றன.  வேறு எதுவும் செய்ய முடியாது, செய்யாது.  அப்படி செய்யவைக்க வேண்டுமென்றால் விசேஷமாக பயிற்சி அளித்தால்தான் உண்டு.  ஆனால், மனிதனுக்கு?  



உங்கள் மீது யாராவது கல் எறிகிறார்கள்  என்றால் என்னென்ன செய்வீர்கள்?  உங்களால் சொல்லவே முடியாது.  பதிலுக்கு என்ன கேள்வி கேட்பீர்கள்?  யார் என் மீது கல் எறிந்தது?  ஆணா ? பெண்ணா?  எதற்காக எறிந்தார்கள்?  நான் என்ன மனநிலையில் இருந்தேன்?  கோபமாகவோ, சந்தோஷமாகவோ, நண்பர்களுடனோ, வேலையாகவோ இருந்தேனா?  இப்படி நூறு கேள்விகள் கேட்பீர்கள்.  காரணம் என்ன?  நாம் விலங்குகள் அல்லர்.  நாம் எல்லாரும் கடமைக்கு கட்டுப்பட்டவர்கள்.  மிருகங்கள் போகத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.  அதை தாண்டி யோசிக்கவே முடியாது.  நாமும் மிருகங்கள் போல குறுகிய வட்டத்துக்குள் நம்மை அடைத்துக்கொண்டு அதை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அதே வேலையை மட்டுமே செய்து கொண்டு இருந்தால் நாமும் மிருகங்களே. .  

கல்வியின் லட்சியமே உங்களுக்குள் இருக்கும் அளவற்ற திறமைகளை வெளியே கொண்டுவருவதுதான்.  அதுவும் எப்படி?  அவரவர் தன்மைக்கேற்ப கற்பனை செய்தல், உருவாக்குதல், நடைமுறைப்படுத்தல்.  இதுதான் நம்மை மனிதனாக ஆக்குகிறது.  இதைத்தான் சுவாமி விவேகானந்தர் சொல்கிறார், மனிதனை மனிதனாக ஆக்கிடவல்ல சர்வ கலாசாலையாக கல்வி ஆகவேண்டும்.  அவனுக்குள்ளே இருக்கும் அளப்பரிய சக்தியை வெளிக்கொணரும் படியாக, என்னுள்ளே இப்படிப்பட்ட சக்தி இருக்கிறது என்று உணரும்படியாக, அதை நல்ல வழியில் பயன்படுத்தும் படியாக - சிந்திக்க வைக்கக்கூடியதாக இருக்கவேண்டும் கல்வி என்கிறார்.  அதாவது நம்மை தங்க சங்கிலியிலோ, இரும்பு சங்கிலியிலோ கட்டிப்போட்டு விடக்கூடாது.  சுதந்திரமாக சிந்திக்க, செயல்படக்கூடியவனாக ஆக்க வேண்டும் என்கிறார்.

ஆசிரியரின் பணியே மாணவனுக்கு இருக்கும் இந்த தனிப்பட்ட சுபாவத்தை புரிந்துகொண்டு அவனுக்கு அவனை புரிய வைப்பதேயாகும்.  நமது பாரதிய கல்வி முறையில் கற்பிப்பது  என்ற பேச்சுக்கே இடமில்லை.  யாராலும் யாருக்கும் எதையும் கற்பித்துவிட முடியாது.  ஆனால், யார் வேண்டுமானாலும் கற்கலாம்.  

ஐந்து வகையான தன்மைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.  ஆயுர்வேத சம்ஹிதையில் அவர்கள் எடுத்துக்கொள்வது சரீர ரீதியான தன்மைகளை.  இதை மனப்பூர்வமாக புரிந்துகொள்ள நமது பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளத்தான் வேண்டும்.  நமது மொத்த பிரச்சனைகளை, தீர்வுகளை, தாக்கங்களை சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே இந்த பாரதிய கல்வி முறையை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.  

இந்த ஐந்து தன்மைகள் என்னவென்றால் முதலில் தயாரிப்பு நிலைக்கு மாணவனை கொண்டு செல்லுதல் - உடல், மனம், சிந்தனை என்று முதலில் தன்னையே மாற்றிக்கொள்ள தயார் படுத்துதல்.  அடுத்து, மனதை சுத்தப்படுத்துதல், அடுத்து சிந்தனையை நெறிப்படுத்துதல், அடுத்து மேலே கூறப்பட்ட இந்த மூன்றையும் தாண்டிய பிறகு திறமை உதிக்கும், உருவாகும். இவ்வித கல்விமுறையின்  குறிக்கோளான அறிவொளிமயமான இடத்துக்கு நாம் இ ணைந்து செல்லவேண்டும்.  

பகவத் கீதைவிபூதி எனும் நிலையை பற்றி பேசுகிறது.  விபூதி என்றால் இதற்கு மேல் அடைய வேண்டிய நிலை எதுவும் இல்லை என்று பொருள்.  காரணம் - எல்லாருக்கும் தனித்தன்மை என்று ஒன்று இருக்கிறது.  நீங்கள் நானாகவோ, நான் நீங்களாகவோ மாறவும் வேண்டாம், மாறவும் முடியாது. அவசியமும் இல்லை.  நான் உங்களைப்போல ஆகவேண்டும் என்றால் எதற்கு தனித்தனியாக அடையாள அட்டைகள்?  இவரை போல ஆகவேண்டும் என்ற பேச்சுக்கே இடமிருக்க கூடாது.  இரட்டை குழந்தைகள் கூட ஒன்று போல இல்லை.  ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே.  உங்களது டின்ஏ, உங்கள் செல்கள், உங்கள் மனநிலை, உடல்நிலை, வாதம் பித்தம் கபம் எனும் மூன்று தோஷங்களை மையப்படுத்தி வைத்தியம் செய்கிறார்களே அது கூட ஒன்று போல இல்லை.  அதனால் அவரவர்கள் அவரவர்களது தனித்தன்மையை இழக்காமல் தங்களது உடலை, மனதை, புத்தியை, சித்தத்தை, சிந்தனையை தூய்மைப்படுத்தி உயர்ந்த நிலைக்கு தானும் சென்று, பிறருக்கும் வழிகாட்டியாக இருக்கும் அளவுக்கு நம்மை நமது கல்வி முறைகள் தயார்படுத்தவேண்டும்.  இப்படிப்பட்ட தனித்தன்மையை ஒரு பூ மலர்வது போல, கற்க கற்க தானாக அது வெளிப்பட்டு முழுமையடைய வேண்டுமே ஒழிய, இது போல அது என்றோ, வேகமாகவோ, கட்டாயப்படுத்தியோ செய்யவைக்க முடியாது.  பழத்தின் மீது கூட ரசாயனங்களைத் தடவி பழுக்க வைக்கிறார்கள்.  பூவுக்கு என்ன செய்ய?  மனிதனும் பூ போல கல்வியால் ஒளிபெற்று மலரவேண்டும்.  ராட் என்றால் ஒளி என்று பொருள்.  ஒன்றாக ஒளிபெற்று இணைந்தால் அதை ராஷ்ட்ரம் என்று சொல்கிறோம்.

நான் என் தனித்தன்மை யைத்தெரிந்துகொள்வதால் நான் யார், என் சுபாவம், என் தர்மம், என் கடமை என்னவென்று தெரியவரும்.  அதுதான் கல்வி.  கற்பிப்பவரது கடமை என்ன?  மேலே கூறப்பட்ட குணங்கள் நிலைப்பாடுகளை மாணவன் அடைய என்னென்ன செய்யவேண்டுமோ அதை செய்வது, தடங்கல்களை இடர்ப்பாடுகளை நீக்குவது.  இப்படி செய்து அவன் கற்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்வது, கற்பிப்பது அல்ல, கற்கும்படி செய்வது.  அவன் யாரென்று அவன் உணர செய்ய உதவுவது.  

பாரதிய சிக்ஷன் மண்டலில் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்.  இன்றைக்கு மாணவர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள்?  மனிதன் என்றால் சந்தைப்படுத்தப்பட்டவன், விற்கலாம், வாங்கலாம், மாற்றி அமைக்கலாம்.  ஆங்கிலத்தில் HUMAN RESOURCE என்கிறார்கள்.  ஆனால், நாம் எப்படி பார்க்கவேண்டும்?  இவன் RESOURCE அல்ல.  RESOURCE என்றால் ஒருவரது பயன்பாட்டுக்குக் கிடைக்கக் கூடியதாக உள்ள சேமிப்பு, துணைக்கருவி.  நாம் எப்படி பார்க்கிறோம்?  இவன் சேமிப்போ, துணையோ அல்ல.  இவன்தான் சகலத்துக்கும் மூலமானவன்.  SOURCE இவனே.  RESOURCE அல்ல.  

மகரிஷி  அரவிந்தர் இதை அவரோஹணம் என்கிறார்.  கர்நாடக சங்கீதத்தில் ஸ்வரத்தை ஏற்றும்போது ஆரோஹணம் என்றும், இறக்கும்போது அவரோஹணம் என்றும் கூறுவார்கள்.   மகரிஷி  அரவிந்தர் அழகாக மனிதனின் முயற்சியை ஆரோஹணத்தோடு ஒப்பிட்டு இறைவனின் கருணையை அவரோஹணத்தோடு ஒப்பிட்டு கூறுகிறார்.  

இறைத்தன்மை எனும் பிரம்மம் தன்னைத்தானே பலவாக உற்பத்தி செய்து விளையாடவிட்டது.  அதில் இந்திரியங்கள் இருந்தன.  இந்திரியங்கள் அறிவை நோக்கி செயல்படவேண்டும். அறிவு செயல்பாட்டை நோக்கி, நடவடிக்கைகளை நோக்கி இருக்கவேண்டும்.  இந்த இறை விளையாட்டில் ஈடுபட்டு எல்லா இந்திரியங்களை அந்த உச்ச நிலையை நோக்கி செல்ல முனைய வேண்டும்.  அதை நோக்கி சென்று இனி செய்யப்பட எதுவுமில்லை எனும் நிலையை அடையும்போது சொல்வது ஏதுமின்றி மௌனத்தை அறிகிறோம்.  அந்த உச்சபட்ச நிலையையே பேரானந்தம், பேரின்பம் என்கிறோம்.  

இதை சிறப்பாக செய்யவே நமக்கு ஐந்து கர்ம இந்திரியங்கள், ஐந்து ஞான இந்திரியங்கள் போக மனம் என்பதையும் சேர்த்து பதினோரு கருவிகள்  தரப்பட்டன.  எல்லாமே அந்த பேரின்ப நிலையை அடையவே.


இன்றைய கல்வியில், பாடத்திட்டத்தில் இதெல்லாம் பற்றி சிந்திக்கிறோமா?  இந்திரியங்கள் (புலன்கள்) பற்றி, இயற்கை பற்றி, தன்னை பற்றி, ஒவ்வொருவருக்குமான பாட முறைகள் பற்றி, கற்பிப்பது அல்லாமல் கற்கும் சூழ்நிலையை உருவாக்குவது பற்றி, கற்பது பற்றி சிந்திக்கிறோமா என்று சிந்திக்கவேண்டும்.  உள்ளார்ந்த அறிதிறன், அறிவாற்றல் சார்ந்த மனத்தின் வாங்கு திறன் பற்றியெல்லாம் பேசுகிறோம்.  மனதை பற்றி பேசுகிறோமா?  கவனித்தல், உணர்தல் என்றொன்று பாடத்திட்டத்தில் இருக்கிறதா?  கவனிக்க புலன்கள் வேண்டும்.  அதை பற்றி பேசுகிறோமா?  இந்த எல்லா விஷயங்களையும் இணைக்க பிராணன் எனும் உயிர் வேண்டியிருக்கிறது.  இந்த பிராணன் மனதை உடலோடு இணைக்கிறது.  இந்த அழகான பிரபஞ்சமே உயிரை கொண்டுதானே உருவாக்கப்பட்டிருக்கிறது.  உபநிஷத் சொல்கிறது, தாய் பிள்ளையை பார்த்துக்கொள்வது போல இந்த பிராணன் நம் எல்லாரையும் காப்பாற்றுகிறது என்று.  

ஆக, இந்த சுபாவம் என்பது அந்தந்த புலன்கள் , மனம், பிராணவித்யை, பஞ்ச மஹா பூதங்கள் என்று எல்லாவற்றோடும் இணைத்து நோக்க வேண்டும்.  குறைந்தது சித்தத்தோடு இணைத்து பார்க்கவேண்டும்.  அதுதானே யோகம்?  பதஞ்சலி அப்படித்தானே கூறுகிறார்.  எல்லாவற்றையும் ஈந்துவிட்டு பிறருக்காக என்று செய்ய துவங்கும்போது தான் அழிந்த நிலையான நிர்விகல்ப சமாதியை அடைகிறோம்.  இதுதானே பாடம்?  இவை தானே பாட முறைகள்?  இது அல்லவா பாட திட்டமாக இருக்கவேண்டும்?  இப்போது சொன்னது எல்லாமே நியாய சாஸ்திர முறைகள்.  

நாமெல்லாம் புதையல்களோடு பிறந்தவர்கள்.  அந்நிய பாடமுறைகளை ஒதுக்கவேண்டும்.  எல்லாமே நம்மிடம் உள்ளன, கணக்கற்ற அளவிற்கு.  இதெல்லாம் தலைமுறைகள் தலைமுறைக்காக நம்மிடமிருந்து நமக்கு வந்து சேர்கின்றன.  என்னை விட என் பிள்ளை சிறந்தவனாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று மட்டுமே சிந்திக்க வேண்டும்.  அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கிறோமா?  சகோதரி நிவேதிதை தனது AGGRESSIVE HINDU என்ற புத்தகத்தில் இதே சொல்லாடலை பயன்படுத்துகிறார்.  அடுத்த தலைமுறை இன்னும் அதிக தியாகங்கள் செய்ய தயாராக ஆக்கவேண்டும்.  அதிகம் சிறந்தவர்களாக இருக்க தயார் செய்யவேண்டும்.  அதிக போகங்களை அனுபவிக்க தயாராக்க கூடாது.  நான் பட்ட சிரமம் என் பிள்ளை படக்கூடாது என்று நினைக்க கூடாது.  மாறாக என் பிள்ளை, என்னை விட சிறந்தவனாக ஆகவேண்டும் என்று எண்ணவேண்டும் என்கிறார்.  திருமணத்தின் காரணமே அதுதான்.  தியாகத்தை செய்வதற்கும் பிறர் நலம் பேணவும், தேவையற்றதை ஒதுக்கவும் வேண்டும்.  இதையெல்லாம் கல்வி செய்யவேண்டும்.  இதையெல்லாம் செய்யும்படியான கல்வியை உருவாக்கவேண்டும்.  இதுவல்லவோ கல்வி?

நீங்களெல்லாரும் மெத்தப்படித்தவர்கள்.   இதுவரை கற்றதனை மறந்து மீண்டும் சரியான இடத்திலிருந்து துவக்கவேண்டியுள்ளது.  வெகு தூரம் பயணித்து விட்டோம் என்பதற்காக தவறான பாதையி ல் தொடரமுடியாதல்லவா?  இந்த மாற்றத்தை நோக்கி நமது செயல்பாடு துவங்கட்டும்.  இது பெரிய, நீண்ட நெடிய பாதையே.  ஆனால், இது அற்புதமான விஷயம்.  அலுப்பு தட்டாத ஒன்று.  எவ்வளவு கற்றாலும் எதுவுமே கற்காத மாதிரியான நிலை.  அப்படி ஒரு கல்வியை நமது ரிஷிகள் தந்துள்ளார்கள்.  நான் என்ற அகங்காரத்தை அழிக்கும் கல்வி முறை.  இதுவே பாரதிய கல்வி முறை.

சரியான கல்வியை கற்கவேண்டும்  என்று தைத்ரிய உபநிஷ தம் கூறுகிறது -  .  அந்த விவேகம் நமக்கு வேண்டும்.  கீதையில் கண்ணன் உன் விருப்பம் போல செய் என்கிறார்.  பதிலுக்கு அர்ஜுனன் பதிலளிக்கிறார் - , “என் மோகம், மனமயக்கம் ஒழிந்தது. என் வாழ்க்கையின் காரணம் புரிந்தது.   நீங்கள் சொன்னது போல செய்கிறேன்”.  கிருஷ்ணர் சொன்னது போல நமக்கு இடப்பட்ட கடமையை சரியாக செய்வோமாக.

· மொழிமாற்றம் செய்தவர்:  திரு. ஆனந்த் வெங்கட் , சென்னை.

*****************************************************************************