நம் கல்வி

பாரதீய சிக்ஷண் மண்டல் அமைப்பின் நாகபுரி கிளை ஏற்பாடு செய்திருந்த கல்வியாளர்கள் கூட்டத்தில் (நவம்பர்-30, 2012) 'கல்வி பற்றிய நம் கண்ணோட்டம்’ என்பது குறித்து ஆற்றிய உரை.

நம் கல்வி

  • திரு. மோகன் பாகவத்

இங்கு கூடியிருக்கும், கல்வித்துறையோடு இணைந்திருக்கும்  மகத்தான கல்வியாளர்கள் முன்பு உரையாற்றுவது என்பது எனக்கு கடினமான செயலாக இருக்கிறது. ஆனாலும், 'கல்வி பற்றிய நமது கண்ணோட்டம்' என்பது குறித்து சிந்திக்கும்போது, மிக விரிவாகச் சொல்லவேண்டியதில்லை.

நம் கண்ணோட்டம் என வரும்போது,  கல்வியின் அடிப்படை  பற்றிய விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.

பல கல்வியாளர்கள் நிபுணர்களாக இல்லாவிட்டாலும், அவர்களுக்கும் அனுபவக் கல்வி இருக்கும். கல்வி அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதால் எல்லோருமே இது குறித்துப் பேச இயலும்.

பிராணிகளுக்கான கல்வி, மனிதர்களுக்கான கல்வி என எந்த வேறுபாடும் கிடையாது, ஏனென்றால் பிராணிகளுக்கு சிந்தனை என்பது கிடையாது. பிராணிகள் தாங்கள் உயிர்வாழ்ந்தே ஆக வேண்டுமென்பதால், எப்படி உயிர் வாழ்வது என்பதை  அது தானாகவே கற்றுக் கொள்கிறது. சிலர் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படுவது போல கற்றுக் கொடுப்பதன் மூலம் பிராணிகள் அதன் சுயதன்மையை இழக்கிறது. அது சர்க்கஸ் பிராணி போல ஆகிவிடுகிறது. சிலர், கொடிய காட்டு மிருகங்களான சிங்கம் போன்றவைக்கு குட்டியாக இருக்கும் போதிலிருந்தே பயிற்சி கொடுத்து வந்தாலும் அப்படி வளர்ந்த பிறகு,  சட்டப்படியாக அதை காட்டில் விடவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், அம்மிருகங்கள் காட்டில் தனித்து வாழத் தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.

பிராணிகளுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் விபரீத நிலை இங்கு உருவாகிறது. பிராணிகள் தாங்கள் உயிருடன் இருக்கவே, உயிர்வாழத்  தேவையான திறன்களை கற்றுக்கொள்கிறது. உணவு, உறக்கம், பயம், பாலின கவர்ச்சி இவை தவிர பிராணிகளின் வாழ்க்கையில் ஏதேனும் செய்யவேண்டுமென்ற விருப்பம் கூட இருப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு அப்படியில்லை. அவர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற செயல்களை செய்யவேண்டியுள்ளது. பல செயல்கள் செய்யவேண்டுமென்ற விருப்பமும் மனிதர்களிடம் ஏற்படுகிறது. இறைவனது படைப்பில், சிந்தனை செய்யக் கூடியவைகளுள் சிறந்தது, மனிதப்படைப்பாக இருப்பதால், மனிதனுக்கு இறைவனது படைப்பு அனைத்திலிருந்தும் கற்றுக் கொள்ளவேண்டும் என்பது கடமையாகிறது. ஏனென்றால், மனிதன் சரியானவற்றை கற்றுக் கொள்ளாவிட்டால், அவன் கற்றுக் கொள்ளவேண்டாததைக் கற்றுக் கொள்வான். பிராணிகள் தன் தன்மையிலிருந்து பிறழ்ந்தாலும் பிராணித் தன்மையோடு நின்று விடும். அதற்கு கீழே அவற்றால் தாழ்ந்துபோக முடியாது. மனிதன் தாழ்ந்தால்,  மனிதத்தன்மையிலிருந்தும் கீழேயிறங்கி மிருகத்தன்மையிலும், அதைவிட மிக மோசமானதாக மாறுவதோடு மட்டுமில்லாமல், உணர்வற்ற நிலைக்கும் செல்ல வாய்ப்புள்ளது. கொடுமை செய்யும் மிருகமாகவோ, அரக்கனாகவோ கூட ஆக முடியும். எனவே, மனிதத்தன்மையுடன் மனிதன் உண்மையாக வாழ வேண்டுமென்பதாலும், மனித நிலையிலிருந்தும் மேம்பட வேண்டுமென்பதாலும், மனிதனுக்கு வாழ்க்கையில் கல்வி என்பது அவசியமாகிறது. ஆதலால் ஒவ்வொரு மனிதனும் கற்க விரும்புகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியமானதாக ஆகிறது.

ஆதலால், 'கல்விச் சிந்தனை' என்பது தொன்று தொட்டு விளங்கி வருகிறது. இன்று நாம், முதன் முதலாக 'கல்வி' பற்றி சிந்திக்கிறோம் என்பதல்ல. மனிதன் தன் இருகால்களில் நடக்கத் துவங்கியது முதல் சிந்தனை ஆற்றலும், கற்றுக் கொள்வதும் துவங்கிவிட்டது. கற்பது வளர்ந்து, வளர்ந்து இன்றைய நிலை வரை வந்துள்ளது. கற்றுக் கொள்வதால் சிந்தனா சக்தி வளர்வதும், சிந்தனா சக்தி வளர்வதால் கற்றுக் கொள்வதும் அதிகமாகிறது. கற்றுக்கொண்டே இருப்பதால் சிந்தனை விரிவடைகிறது. சிந்தனை விரிவு  மேன்மேலும் ஏற்படுவதால் கற்றுக் கொள்வதும் விரிவுபடுகிறது. தொன்று தொட்டு கல்வியின் நிலை இப்படிச் செல்கிறது.

ஏழு போராட்டங்கள் :

இன்றைய நிலையைப் பார்க்கும்போது மனிதன் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. ஐக்கிய நாடுகளின் சபையில் அங்கமான 'யுனஸ்க்கோ’  அமைப்பு , 'மனிதனால் உருவாகியுள்ள இன்றைய நிலை' குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து, ஒரு உதாரணம் கிடைத்தது. மனிதர்களுக்கு ஏழுவிதமான போராட்டங்கள் மோதல்\அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

  1. உலகாயத வாதத்திற்க்கும் - உள்ளூர்\சுதேசி வாதத்திற்கும் உடன்பாடு இல்லை.

ஒன்றுக்கொன்று முரண்பட்டு, ஒன்றை மற்றொன்று தன்பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. சுதேசிவாதிகள் தன்பக்க நியாயத்தையும், உலகாயதவாதிகள் அவர்கள் பக்க நியாயத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். உலகாயத வாதமும் - சுதேசிவாதமும் இணைந்து செயல்பட முடியாததால், இரண்டுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது

  1. உலகளாவிய நன்மைக்கும்- தனிநபர் நன்மைக்கும் உடன்பாடு இல்லை.

இதே போல, உலகளாவிய நன்மை குறித்தும், தனிநபர் நன்மை குறித்தும் போராட்டம் நடைபெறுகிறது. தனிநபர்  நலனுக்காக, உலகநன்மை என்பதை பலி கொடுக்க வேண்டியிருக்கிறது. உலகம் நன்மை  பெற வேண்டுமானால் , தனிநபர் நலனை பலிகொடுக்க வேண்டும் என்ற போக்கில் இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே,  இங்கும் மோதல் போக்கு ஏற்படுகிறது.

  1. நடைமுறைக்கும் நவீன காலத்திற்கும் உடன்பாடு இல்லை.

தொன்று தொட்டு இருந்து வரும் நடைமுறைக்கும், நவீன காலத்தில் என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ அவை இரண்டிற்க்குமிடையே முரண்பாடு உள்ளது. ஒன்று மற்றொன்றுடன் இணைந்து செல்ல முடியாத இப்போக்கு ஏற்கக் கூடியதல்ல.

  1. மனிதனின் பாரம்பரிய சிந்தனையும் நவீன காலத்து விஷயங்களும் முரண்படுகிறது :

மனித சுபாவத்தில் இருக்கும் பாரம்பரிய சிந்தனையிலிருந்து, மனிதன் விலகி இருக்க முடியாது. மனிதனின் விருப்பம் நவீன காலத்து விஷயங்களில் இருப்பதிலிருந்தும் அவனை பிரிக்க முடியாது. இவ்விரண்டு விஷயங்களுக்கு இடையேயும் மோதல் போக்கு ஏற்படுகிறது. நெடுநோக்குடன், நீண்ட கால நன்மை குறித்து சிந்தித்தோமானால், இன்று சில துன்பங்களை ஏற்க வேண்டியிருக்கும். இல்லையெனில், இன்றைய நலன் குறித்து சிந்திக்கும்போது நீண்ட கால துன்பங்களை ஏற்கவேண்டியிருக்கும். இன்று சில விஷயங்களில் தற்காலிக நன்மையைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது, இன்றைய உலகின் சுகங்களைப் பெறமுடியாததால் அழுத்தம் ஏற்படுகிறது.

  1. உலகில் போட்டியும் சமத்துவமும் இணைந்து இல்லை :

உலகில் போட்டி இருந்தாலும், சமத்துவம் அடைய விரும்புகின்றனர். இரண்டும் இணைந்து செல்ல வாய்ப்பில்லை. சமத்துவம் அடைய விரும்பும்போது, போட்டி மனப்பான்மை வலுவிழந்து விடுகிறது. போட்டி மனப்பான்மை மேலெழும்போது சமத்துவ கொள்கை அடிவாங்குகிறது. இப்படி இரண்டும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கிறது.

  1. அறிவு வெடிப்பும் (Knowledge explosion) மற்றும் அறிவை உள்வாங்குதலும் (Knowledge assimilation) முரண்படுகிறது :

அறிவு வளர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு உலகோர், அறிவு வெடித்துக் கொண்டு கிளம்புகிறது என்கின்றனர். ஆனால் பெருகிவரும் அறிவை ஜீரணிக்க இயலாததால் மனித வாழ்க்கை இன்பமடைவதைவிட துன்பம் அடைகிறது. அறிவு வெடித்துக் கொண்டு கிளம்பினாலும் அதை தன்வயப்படுத்திக்கொள்ளும் தன்மை இல்லை. (Knowledge assimilation) அறிவை தன்வயப்படுத்திக்கொள்வதில் முனைப்புடன் இருந்தால் அறிவு விரிவடைவது குறைகிறது. இரண்டும் முரண்படுகிறது.

  1. மனிதனின் ஆன்மீக மற்றும் பௌதீகச் சிந்தனை முரண்படுகிறது :

கடைசியில், இன்றைய வரலாறு, எக்காலத்தைப் புராதனமானது என்று      கருதுகிறதோ, அன்று முதல் இன்று வரை ஆன்மீக மற்றும் பௌதீகச் சிந்தனை இருந்து வருகிறது.

இன்றைய உலகின் பௌதீக விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்றால், ஆன்மீக உலகிலுள்ள விஷயங்களை மறக்க வேண்டியிருக்கும்; வாழ்க்கை துன்பமயமாக ஆகும். ஆன்மீக உலகை ஆராயும்போது, இன்றைய உலகின் இன்பங்களைத் துறக்க வேண்டியிருக்கும். இதுவும் மனிதனுக்கு துன்பத்தைக் கொடுக்கிறது.

இப்படியாக, இன்றைய உலகில் ஏழுவிதமான போராட்டங்கள் உள்ளது. உலகில் முன்னேற்றம் அதிகம் ஏற்பட்டு, அறிவு விசாலமாக வளர்ந்திருக்கிறது. ஆனாலும் இன்று உலகில் சுகமும் அமைதியும் இல்லை.

இந்த பயணத்தில், மனிதன் தன் கைகளாலேயே இறைவனின் படைப்புகளுக்கும், தனக்கும் அழிவை ஏற்படுத்திக் கொள்கிறான். சிந்தனையாளர்கள் மனதில் இப்பிரசினை அடிக்கடி ஏற்படுகிறது. ஆகவே, இதுவரை மனிதன் என்ன கற்றுக்கொண்டான்?

மனித வாழ்க்கையை நோக்கும்போது அண்ணல் காந்திஜி ஏழு சமுதாய பாவங்களைப் பற்றி கூறியுள்ளார். நாலாபக்கமும் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அவர் கூறும் ஏழு சமுதாயத் தீமைகளே கண்ணில் படுகிறது. எனது விஜயதசமி விழா உரையில் இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

1.அரசியல், கொள்கை   இரண்டும் குறைபாடுள்ளது.

அரசியலும் கொள்கைகளும் இணைந்து செல்லவேண்டும், ஆனால் இணைந்து செல்வதில்லை. உழைக்காமல் செல்வம் சேர்க்கவேண்டுமென்ற போக்கு இன்றுள்ளது. உழைப்பவர்கள் தொழிலாளிகளாக இருக்கிறார்களே தவிர, முதலாளிகள் ஆவதில்லை. உழைக்காமல் செல்வம் சேர்ப்பதால் சுகம் கிடைத்தாலும் அதில் விவேகம்  இல்லை.

விவேகமில்லாமல் சுகத்தை அனுபவிக்கின்றனர். யாரிடம் அறிவு இருக்கிறதோ, அவர்களிடம் நன்னடத்தை இல்லை. வியாபாரம் செய்பவர்களிடம் நீதி இல்லை. அறிவியல் அறிவு இருந்தாலும் அதில் தியாகம் இருப்பதில்லை. சமர்ப்பண உணர்வு இல்லாமலேயே புகழ் கிடைக்கிறது. சான்றோர்களைப் போற்றினாலும், தன் வாழ்வில் தியாகம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் உருவாகியுள்ளனர்.

கல்வி பற்றிய சிந்தனை தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், இன்றைய காலகட்டத்தின் சவால்களுக்கு ஏற்ற தீர்வினைக் காண, இன்றைய கல்விமுறையைப் பற்றி சிந்திப்பதும் பொருத்தமானதே.

இன்றைய கல்வி முறை :

இன்றைய கல்வி, முன்னேற்றப் பாதையில் பயணிப்பதாகத் தோன்றினாலும், அழிவின் விளிம்பை அடைந்து கொண்டிருக்கிறது. அழிவைத் தவிர்க்கும் கல்வியை எப்படிக் கொடுக்க இயலும். இன்றைய கல்விமுறையில், பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி விஷயங்கள் அதிகம் இல்லை. ஆனால் உலகிலுள்ள கல்வியாளர்கள், இன்றைய உலகின் பல பிரசினைகளுக்கான தீர்வு, பாரதீயக் கல்வி முறையில் உள்ளதென நினைக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் கல்வியாளர் ஒருவர், தனது கட்டுரையில், 'இன்றைய உலகின் பலவித அழிவுகளுக்குத் தீர்வு கிடைக்கவேண்டுமெனில், பாரதீய கல்வி முறையில் மட்டுமே வழி கிடைக்கும். அறநெறிக்கல்வி பற்றிய விழிப்புணர்வு,  ஆன்மீக சிந்தனை,  நீதிநெறிப்படி அமைந்த வாழ்க்கை ஆகிய இம்மூன்றும் பாரதத்திலிருந்து மட்டுமே கிடைக்கும். எனவே, பாரதத்திலிருந்து நாம் கல்வி கற்க வேண்டும், என்று எழுதியுள்ளார்".  ஆனால் பாரதத்தில் இவ்விஷயங்கள் நிறைந்த கல்வியா கொடுக்கப்படுகிறது. இன்றைய நிலை தலைகீழாக உள்ளது. மிக விரைவாக நம் பாரம்பரிய கல்விமுறையிலிருந்து விலகிச் செல்வதுடன், மேலும் விரைவாக, மனித குலத்தில்    அழுத்தத்தையும் பிரச்சனைகளையும் கொண்டுவரும் கல்வி முறைக்குள் மேன்மேலும் சென்று கொண்டிருக்கிறோம்.

ஆதலால், நம்மிடம் எப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கிறது என சிந்திக்க வேண்டும். நம் கல்வி முறையை விட்டுவிடாமல், அதிலிருந்து பயனடைய வேண்டும். மனித வளர்ச்சிக்கு வழிகோலும் அதே நேரத்தில், இறைவனின்  படைப்பிலுள்ள அனைத்தையும் காப்பாற்றும் கல்வி முறையை உலகத்திற்கு  நாம் அளிக்க வேண்டும்.

கல்வி முறையைப் பற்றிக் கூற வரும்போது, அதில் விரிவாகச் செல்லவில்லை. கல்விமுறை பற்றிய எண்ணற்ற கருத்துப் பரிமாற்றங்களில், நான் கேட்ட விவாதமெல்லாம், 10+2+3 அல்லது 8+2+2 அல்லது 7+5 வைக்கவேண்டும் என்பது பற்றியே இருந்துள்ளது. கல்விக்கான அடிப்படை அலகு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால், மிகமுக்கியமாக, 'கல்வி கற்றுக் கொடுப்பதின் நோக்கம்' எதுவாக உள்ளதோ அதிலிருந்து 'கல்வி' என்பது அமைகிறது. மனிதர்கள் தான் கேட்பவற்றை பின்பற்றுவதில்லை. பிறரைப் பார்த்தே, அவர்களது செயல்களிலிருந்தே கற்றுக் கொள்கிறார்கள். ஒருவரின் வாயிலிருந்து வெளிப்படும் விஷயம் எதுவானாலும், அவரது பழக்கவழக்கத்தின்படியே அவரது செயல்கள் அமைகிறது. ஒருவரது சித்தத்தில் என்ன பதிவு ஏற்படுகிறதோ அதனடிப்படையிலே அவரது பழக்க வழக்கங்கள் அமைகிறது.

கல்வியின் அடிப்படை- வாழ்க்கையின் நோக்கம்:

****சிந்தனைகளின் பின்னணி எது ?    சிந்தனைகளிலேயே அடிப்படை மாற்றம் கொண்டுவராமல், கல்வியில் மாற்றம் கொண்டுவருவதில் எந்த பயனும் இல்லை. மனிதனின் மனதில் கேள்வி எழுந்தது முதற்கொண்டு, கல்வி துவங்குகிறது. மனிதன்-படைப்பு என்பதன் வடிவம் என்ன? இவற்றுக்கிடையே உள்ள தொடர்பு என்ன? இதன் பயன் என்ன? இதன் முடிவு எப்படி? இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கும்போது ஏற்படும் வேறுபாடுகளே 'கல்வியில்' வேறுபாடாகத் திகழ்கிறது.   இன்று நடைமுறையில் இருக்கும் ஒரு கண்ணோட்டத்தில் மனிதன்- படைப்பு இவற்றின் வடிவம் ஒரு உணர்வற்ற நிலையிலிருந்து தோன்றியது என்கிறார்கள். இது ஏன்? எப்படி உள்ளது எனும் விஷயத்திற்கு நாம் இப்போது போக வேண்டாம். ஏனென்றால், அது இன்று நிலவும் கருத்துக்களின்படி அமைந்துள்ளது. பரமாணுவின் மீது போஸோன் கதிர்கள் மோதி, அதற்கு ஒரு 'பொருள் எனும் தன்மையை’ அளித்தது. வேகம் கிடைத்தது. அதன் தொடர்பு மற்றும் பிரிவால், " ஒரு மனிதன் எனப்படும் சிந்தனை செய்யும் பிராணி" தோன்றியது. அம்மனிதனின் சிந்தனை என்பதும் கூட அணுக்களின்செயலே. ஒன்றுக்கொன்று இடித்துக் கொள்வதும், இணைந்து கொள்வதும்,  பிரிவதும் கூட அணுக்களின் செயல்பாடுகளாலே நிகழ்கிறது. இவையனைத்தும் இயந்திரகதியில் ஏற்படுகிறது. இவை முற்றிலும் உணர்வற்ற நிலையிலிருந்து உருவானவை . இது இப்படித்தான் இருக்கிறது என்பதிலும்,  இது இப்படியே முடிவடைந்து போகும் என்பதிலும்,   எவ்விதமான அர்த்தமும் இல்லை. ஆகவே, இந்நிலை நீடிக்கும்வரை வாழுவோம்; வாழ்கின்ற போது  சுகமாக வாழ்வோம். உங்களுடைய பார்வை எப்படிருந்தாலும், சுகம் அனுபவிப்பது மட்டுமே முக்கியமானது. மனிதர்கள் தங்களுக்கு சுகம், ஆனந்தம், அமைதி போன்றவை  வாழ்நாள் முழுவதும் வேண்டும் என சிந்திக்கின்றனர். வாழ்வில் எப்போழுதும் இவை தடைப்படாமல் கிடைக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கின்ற மனிதர்களுக்கு இறைவனின் படைப்புகளின் மீது எந்தவொரு பிடிப்பும் இருப்பதில்லை.  நீ எதனுடன் வேண்டுமானாலும், உன் தேவைக்கேற்ப ஒப்பந்தம் செய்துகொண்டு வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கலாம் என நினைக்கின்றனர்.

வாழ்க்கையின் நோக்கம் என்ன? இது தீர்மானிக்கப்படும்போது கல்வியின் நோக்கம் தெளிவாகிறது. வாழ்க்கையின் நோக்கம் சுகமாக வாழவேண்டும்; எவ்வளவு சுகமாக வாழ முடியுமோ அவ்வளவு நாள் வாழவேண்டும் என பிராணிகள்  போலவே சிந்திக்கின்றனர் . பிராணிகளுக்கு இப்படி வாழ்வதே உத்வேகம் அளிக்கிறது. கழுத்தைப் பிடித்து மரண தேவன் அழைத்துச் செல்லும்வரை இப்படியே வாழவேண்டுமென நினைக்கிறது. உணவு, உறக்கம், பயம், பாலின கவர்ச்சி ஆகியவை மட்டுமே வாழ்வு என்றும், அதற்குமேல் வாழ்வில் வேறு எதுவுமில்லை என பிராணிகள் வாழ்கின்றன. சிந்திக்கின்ற திறன் படைத்தவன் மனிதன் . உலகில் மக்கள் கூட்டத்தில் திறமைசாலி எவனோ அவனே வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமென்பது உலக நியதி. இக்கருத்தின்படி வாழும்போது படைப்புக்கும் மனிதனுக்கும் வேறு எந்த தொடர்பும் இருப்பதில்லை. தன் திறமையை வளர்த்துக்கொள்ள பயன்படுபவர் எவரோ, தனது வாழ்க்கையில் நெடுங்காலம் வரை சுகமாக வாழ எவையெல்லாம்  உதவுமோ அவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு உன் சுகத்தைக்  காப்பாற்றிக்கொள். மற்றவற்றை புறக்கணித்து விடு ; நான் இறந்தபிறகு இந்த உலகின் படைப்புகளுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டிய அவசியமில்லை. நான் வாழும் காலத்திலேயே இவ்வுலகின் படைப்புகளுக்கு என்ன ஆகும்? நான் வாழும்வரை எனக்கு பிரசினைகள்     வராமலிருந்தால் படைப்பைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. இப்படி சிந்திக்கின்றவர்கள் கொடுக்கப்படும் கல்விக்கு நோக்கம் எதுவும் இருப்பதில்லை. இந்த பின்னணியில், வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்வதும், வாழ்க்கைப் பந்தயத்தில் எப்பொழுதும் முதலாக வரவேண்டுமென்பதும், எப்பொழுதும் முன்னணியில் இருக்க வேண்டுமெனவும் சிந்திக்கின்ற மனிதர்களாக இருக்கிறார்கள். அப்படியென்றால், எல்லாவற்றையும் விட வலிமை உடையதாகவும், நீண்ட ஆயுளைக் கொண்ட பிராணியாகவும் மாற வேண்டும். மனிதப் பிறவியே உயர்ந்தது எனும் கண்ணோட்டத்தில், இப்படிப்பட்டவர்கள், மனிதனுக்கும் பிராணிக்கும் சிறிதே  வேறுபாடு  உள்ளது; அவை உடை உடுத்துவதில்லை; நாம் உடுத்துகிறோம். மனிதனின் புத்திக்கும், மனதிற்க்கும் மகிழ்ச்சி கிடைக்க ஏதேனும் தேவைப்படுகிறது . இதனடிப்படையில், மனிதப் பிறவி தன்னை, மற்ற பிராணிகளைவிட பெரியது; உயர்ந்தது  என கருதிக் கொள்கிறது. ஆகவே மனிதப்பிறவி என்பது தனித்தன்மை உடையது என கூறுகிறார்கள். ஆனால்  உண்மையில் வேறுபாடு இரண்டிற்க்கும் இடையே உள்ளதா? வேறுபாடு ஒன்றுமே கிடையாது. மற்ற பிராணிகளைவிட சிறிது, அதிக திறன்படைத்தவர்களாக இருப்பதால் விதவிதமான இன்பங்ளை அடைய விரும்புகிறோம். ஆனால்  பிராணிகள் உணவு, உறக்கம், பயம், பாலின கவர்ச்சி இவற்றோடு மட்டுமே நின்றுவிடுகிறது. இவை தவிர, பிராணிகள் வேறு எதையுமே எதிர்பார்ப்பதில்லை. ஆனால்  மனிதப்பிறவியோ அதிகமதிகம் எதிர்பார்ப்புடன் இருப்பதால், ஆசைகள் அதிகமாகி, அதைப் பூர்த்திசெய்ய வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஓடி ஓடி எவரது இதயம் வெடித்து அதிகமாகச் சிதறுகிறதோ அவர் பெரிய ஆளாக கருதப்படுகிறார், இப்படிப்பட்ட ஒரு வாதம், இச்சூழ்நிலையில் பிறக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, நாம் நம்மையே ஏமாற்றிக்கொண்டு, இப்பாதையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம்.

நம் கண்ணோட்டம்:

இன்றைய தலைமுறை சரியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் பிரசினை எதுவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு கல்விக்குறித்து வீட்டில் கொடுக்கப்படுகின்ற கண்ணோட்டம் என்ன? அதிகமதிகம் ஓடவேண்டும்; கை நிறைய சம்பாதிக்க வேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் சுகமாக வாழமுடியும். இந்த பரம்பரை தொடர்வதால் படைப்பு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; அழுத்தம் உருவாகிறது. தொடர்புகள் குறைகிறது. இணைந்து வாழவேண்டுமானால், என்னுடைய பேரம் பூர்த்தியாக வேண்டும். எனவே அழுத்தம், போராட்டம் ஏற்படுகிறது. 'Survival Of the fittest' எனும் பிராணியாக வேண்டும். ஆனால் பிராணியாகவே இருக்க வேண்டும்.

நம் நாட்டில்,

" ஆகார நித்ரா பய மைத்துனஞ்ச

சாமான்யமேதத் பஸுபிர் நராணாம்”

என்று பிராணிகளைப்போல மனிதனுக்கும் வாழ்க்கை வாழ இந்நான்கும் தேவை என்று கூறியுள்ளனர். ஆனால் இதைத் தொடர்ந்து கூறியிருப்பதையும் பார்க்கலாம்.

"தர்மோ ஹி தேஷாம் அதிகோ விசேஷ:

தர்மேண ஹீனா: பஸுபிர் ஸமானா:

(பொருள்:  ஆனால், மனிதனுக்கு தர்மமே விசேஷம். தர்மம் இல்லாவிட்டால் பிராணிக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லை.)

இறைவனின் படைப்பிலுள்ள அனைத்தையும் இணைக்கும் தத்துவத்தை நம் பெரியோர்கள் தேடிக் கண்டுபிடித்தார்கள். மனிதனின் உடல், மனம், புத்தியை ஒருங்கிணைக்கும் ஆத்ம தத்துவத்தை கண்டுபிடித்தனர். அதை அனுபவத்தால் வளர்த்தனர். இதை எவரும் உருவாக்கவில்லை. இந்த 'ஆத்மா' இம் மூன்றையும் சமமாகக் கொண்டு செல்கிறது. மனிதன், சமுதாயம், படைப்பு இவைகளை இணைக்கும் 'பரமாத்மா'வைக் கண்டனர். அதனால் ஆத்மா என்பது பரமாத்மாவின் ஒரு அம்சமே என்பதை உணர்ந்தனர். இந்த 'பரமாத்மா'வின்  காரணமாகவே இவ்வுலகம் இணைந்திருக்கிறது. எனவே, அர்த்த, காமம் (பொருள், இன்பம்) இவற்றைப் பெரும் முயற்சியின் மூலமாக, உனது பிராணியெனும் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முக்கியமாக படைப்பிலுள்ளவற்றை அனுபவிக்கும்போது, தானும், " படைப்பிலுள்ள பிற அனைத்திலும் இருப்பவற்றின் ஒரு அங்கமே" என்பதை மனிதன் உணர வேண்டும். எனவே, (அர்த்த, காமம்) பொருள், இன்பத்தை தேடும் முயற்சியில், மற்ற படைப்பு அனைத்தும் முன்னேற வேண்டும். அர்த்த, காம, மோக்ஷ- என இம்மூன்றையும் இணைக்கும் 'தர்மத்தின்' பாதையில் செல்லவேண்டும். மனிதன் இனப்பெருக்கத்தினால் மட்டுமே வாழ்வதில்லை.(Man does not live by breed alone). இது உலகத்தில் அனைவருக்கும் தெரியுமா? அப்படிச் சொல்லமுடியாது. உலகில் 'முக்தி' என்பது பற்றிய சிந்தனை பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது. உலகில் எங்கும் 'முக்தி' பற்றிய சிந்தனை உள்ளது. ஆனால், அர்த்த, காம, முக்தி இம் மூன்றிற்குமிடையே ஒருங்கிணைப்பை எப்படி ஏற்படுத்துவது? இங்கு நம் நாட்டில், தர்மத்தினாலே இம் மூன்றும் கிடைக்கும் என்று  கூறியுள்ளனர்.

தர்மாது அர்த்தச்ச காமாஸ்ச்ச

ஸ தர்மம் கிம்  ந சேவ்யதே

(பொருள்: தர்மத்திலிருந்தே அர்த்தமும், காமமும் பெற முடியும்; தர்மம் மூலமாக சாதிக்க முடியாதது உள்ளதோ).

நீங்கள் எவ்வளவு அறிவு வேண்டுமானாலும் பெறலாம். மோக்ஷம் அடையும் ஞானமும் பெறலாம். ஆனால், தர்மத்திற்கான ஞானம் பெறாவிட்டால் நமக்கு 'நிரந்தரமான சுகம்' கிடைக்காது.

மகாபாரதக் கதையில், கௌசிகன் எனும் ஒரு முனிவர் இருந்தார். அவரது தவம் மேலோங்கிய நிலையில், தன்மீது எச்சமிட்ட ஒரு பறவையை கோபத்தில் பார்த்தவுடன் அப்பறவை எரிந்து சாம்பலாகி விட்டது. தான் சிறந்த தபஸ்வியாகிவிட்டேன் என அவர் சந்தோஷம் கொண்டார்.  அன்றாட முறைப்படி, பிச்சை (பிக்ஷை) பெற ஊருக்குள் சென்றார். ஒருவீட்டின் முன்பு நின்று 'அம்மா- பிச்சையிடுங்கள்' என்று குரல் கொடுத்தார். அவ்வீட்டின் பெண்மணி வெளியே வரும்பொழுது அவரது கணவர் வந்துவிட்டதால் பிச்சையளிக்காமல், தன் கணவருக்கு பணிவிடை செய்யச் சென்றுவிட்டாள். வெறுங்காலோடு,  வெயிலில் நின்று கொண்டிருக்கும் கௌசிகன் கோபத்துடன் அப்பெண்மணியை நோக்கினார். ஆனால் அவரோ, தன் கணவருக்கு செய்யவேண்டிய பணிவிடையெலாம் செய்துவிட்டு நிதானமாக பிச்சைப் பாத்திரத்தில் பிச்சை இட்டுவிட்டு, " மஹாத்மாவே- என்னை கோபத்துடன் பார்க்காதீர்கள்; நான் அந்தப் பறவை போல எரிந்து போக மாட்டேன்" என்று கூறினார்.

கௌசிக முனிவருக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. காட்டில் நடந்த நிகழ்வை இப்பெண்மணி எப்படி அறிந்து கொண்டார் என எண்ணினார். எனக்கு தவம் அதிகமாகியும் கூட இப்படிப்பட்ட 'ஞான திருஷ்டி' கிடைக்கவில்லையே என நினைத்து, அப்பெண்மணியிடம் கேட்டார். பதிலளிக்கையில், தங்களது கேள்விக்கு விடை கொடுக்கத் தகுதியான 'தர்மவ்யாதன்' எனும் கசாப்பு கடைக்காரன் அடுத்த ஊரில் உள்ளான்; அவனிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள் என்றார் அப்பெண்மணி. கௌசிகனுக்கு ஆச்சர்யம் மேலிட்டாலும், அந்த கசாப்புக் கடைகாரனிடம் செல்கிறார். அந்த கசாப்பு கடைக்காரனோ, தாங்கள் இங்கு இந்தக் காட்சியைப் பார்க்க வேண்டாம். என் வீட்டிற்குச் சென்று அமருங்கள். நான் அங்கு வருகிறேன் என்றார். கசாப்பு கடைக்காரன் கடையை மூடிவிட்டு, கை கால்களை சுத்தம் செய்துவிட்டு தன் வயதான தாய்-தந்தையருக்கு சேவை செய்யச் சென்றுவிட்டான். பின்னர், கௌசிகனுக்கு நீர், பழங்கள் கொடுத்து வரவேற்று, " மகராஜ், உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளது" என கேட்டார். கௌசிகன் மேலும் ஆச்சர்யப்பட்டு, நான் சந்தேகத்துடன் ஒரு கேள்விக்கு விடை காண வந்துள்ளேன் என்பது உனக்கு எப்படித் தெரிந்தது - என்று கேட்டார். ஒரு தவசிக்கு கிடைக்காத ஒரு விஷயம் உனக்கு எப்படிக் கிடைத்தது என்றார். 'தர்மவியாதன்' பதிலளிக்கையில் நான் எனது ஸ்வதர்மத்தை கடைபிடித்து வந்ததாலேயே இது சாத்தியமாயிற்று என்று கூறினார்.

கல்வியின் நோக்கம் தர்மமே:

கல்வியின் நோக்கம் என்பது 'தர்மம்' ஆகும். கல்வியறிவுள்ளவன் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் திறன் பெறுகிறான். தக்கவைத்துக்கொள்ளும் திறன் படைத்தவன் சாஸ்திர ஞானம் பெற்றவன் ஆகட்டும். யார் பிறரை, கீழே வீழ்த்தமாட்டார்களோ, எல்லாரையும் இணைத்து, மேன்மையுறச்  செய்வார்களோ, அப்படிப்பட்ட தன்மையை சாஸ்திர ஞானம் கொடுக்கிறது. தக்க வைத்துக்கொள்ளும் தன்மையை 'தர்மம்' அளிப்பதால் இம்மை, மறுமை இரண்டிற்கும் சுகம் அளிக்கும் தன்மை உடையது.

யதோ அப்யுதய நிஸ்ரேயச சித்தி: ஸ தர்ம:

ஒவ்வொரு பொருளின் தன்மையை புரிந்து கொண்டு, படைப்பை மேலெடுத்து செல்கையில், அனைவரின் கடமையை வலியுறுத்தும் தர்மத்தின் ஞானம் கல்வியின் மூலமாக கிடைக்கவேண்டும்.

வரலாற்றின் தொன்மைக்காலத்தில், முறையான கல்வி என்பது துவங்கும் முன்பே மனிதன் வாழ்ந்து கொண்டிருந்தான். குழுக்களாக அமைந்த சமுதாயமாக வாழ்ந்து வந்தான். வேட்டையாடி வாழ்வதை அறிந்தவர்கள் இருப்பினும் 'கல்வி முறை' பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம், உலகம் முழுவதிலும்,  இங்கு நம்நாட்டிலும் ஏன் ஏற்பட்டது?

மனித வாழ்வு மனிதத்தன்மையுடன் திகழ்ந்து,  படைப்பு தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். இதுவே தர்மத்தின் நோக்கம்; தர்மம் அனைவரையும் இணைக்கிறது.

இந்தச் சிந்தனையின் காரணமாகவே நம்மிடையே எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என்பதே கிடையாது. இதன் பொருட்டே, இங்கு நம் நாட்டில் ஐடப்பொருளுக்கும், உயிருள்ளவற்றிக்கும் எவ்வித உராய்வும் ஏற்படவில்லை. முன்னோர்கள் கூறியபடி, தெய்வீகத் தன்மையுடன் ஞானம், விஞ்ஞானம்  இரண்டையும் இணைத்து, இம் மூன்று குணங்களும் ஒரு மனிதனுக்கு அவசியம் என்றனர்.

'ஞானம், விஞ்ஞானம், ஆஸ்திக்யம்'......  (கீதை 18:42)

சான்றோர்கள் கூற்றுப்படி, இவ்வுலக ஞானத்தைப் பெற்று அமிர்தத்தை (அமரத்துவத்தை) அடைவாயாக.

வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ்தத்வேத உபயம் ஸஹ

அவித்யையா ம்ருத்யும் தீர்த்வா வித்யையா அமிர்தமஷ்ணுதே

  • ஈஸாவாஸ்ய உபநிடதம் ( ஸ்லோகம் 11)

(யஜுர்வேதம் -அத்.40)

பொருள்:

எவர் இம்மை, மறுமைக்கான அறிவு, ஞானம் ஆகிய இரண்டையும் தெரிந்துவைத்திருக்கிறார்களோ, அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை எளிதாகக் கடக்கவும், அமரத்துவம் பெறுவதையும் சுலபமாக அடைகிறார்கள். எந்த ஒரு பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இரண்டும் இணைந்தே உள்ளது. வயிறும் நிறைய வேண்டும்; உடலின் தேவையும் பூர்த்தியாக வேண்டும்; உலகம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே பரோபகாரியாக நாம் ஆக வேண்டும். இந்த ஒருங்கிணைந்த ஞானத்தின் ஒருமைப்பாட்டோடு கூடிய கண்ணோட்டமே நம் சிறப்பு. இதனடிப்படையில் கல்விக்கான அனைத்து விஷயங்களையும்  தொன்று தொட்டு ஏற்படுத்தி வைத்துள்ளோம். கல்வியின் நோக்கம் என்ன? தகுதிமிக்க பிராணியாக வேண்டும் என்பதல்ல. முன்னோர் கூற்றுப்படி, இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் சத்தியமானவன்; உலகம் முழுவதும் இணைந்தே உள்ளது; 'வேற்றுமையில் ஓற்றுமை'  உள்ளது. இந்த ஒருமைப்பாட்டுணர்வே நம் சுபாவமும், தனித்தன்மையும் ஆகும்.

சுபாவத்தின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொண்டு, நாம் சத்தியத்தில் நிலைத்திருக்க வேண்டும். இந்த சத்தியத்தின் அடிப்படையில், நம் சுபாவத்தின்படியே நாம் செயல்படுவோம். பிறருக்கு அடிமையாக இருக்கக் கூடாது.

'மனித வாழ்க்கையில் உண்மையான சுதந்திரம் கொண்டு வருவதே என் லட்சியம்; என் வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணித்துள்ளேன்' என அறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.  ‘உண்மையான சுதந்திரம்' என்றால் என்ன? மனிதன் தன் முறைப்படியே, தன் சுபாவத்திலேயே இருக்க வேண்டும். 'மன: பூதாம் சமசரேத்' எனக்கு எவ்விதம் வாழவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படி வாழ வேண்டும் என்பதல்ல இதன் பொருள். தன் சுபாவத்திலேயே முழுமையாக இருந்துகொண்டு, அதனடிப்படையில் உருவாகும் உத்வேகத்தின்படி செயல்பட வேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கை மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென்பதே கல்வியின் நோக்கம். எனவே தான் "ஸா வித்யா யா விமுக்தயே" என்று சொல்லப்பட்டுள்ளது. (கல்வி என்பது மனிதனின் முக்திக்காகவே). மனிதன் தன் வாழ்க்கையில் பல வித நிர்பந்தங்களை அனுபவிக்கிறான். வயிறு வளர்க்க, உணவைப் பெற, வேறுவழியில்லாமல் கட்டுப்படுகிறான். பணிஓய்வு என்ற நிலைக்குப் பிறகும் வேலை செய்கிறான். உடலால் முடியாது. சோற்றுக்காக பாடுபடவும் வேண்டியதில்லை. ஆனலும், வேலைசெய்து மனம் பழகிவிட்டதால் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறான். தனித்து இருக்க முடியாது. ஆகவே 'பணிதொடர்ச்சி' வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். அதிலிருந்து  கொஞ்சத்திற்க்கு கொஞ்சமாவது அவனுக்கு கிடைக்க வேண்டும். அமைதியாகவும், செயல்படாமல் இருப்பதும் சாத்தியமில்லை. புத்தி, மனம், உடல் இம் மூன்றும் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் எல்லாம் இருந்தும், அவரால்  கூட சும்மா இருக்க முடியாது. சும்மா இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். ஏனென்றால் நம்மீதே  நமக்கு கட்டுப்பாடு இல்லை.

நம் உடல், மனம், புத்தி இவற்றின் தொடர்பைக் கொண்டு, உலகின் செயல்பாடுகளில் திகழும் வழிமுறைகளின் நிர்பந்தத்தை, அழுத்தத்தை அவன் அனுபவிக்கிறான், கஷ்டப்படுகிறான். வயதாகும் காலத்தில் விரக்தி கொள்கிறான். எதுவும் விருப்பமாக இல்லை; சுவையுமில்லை; உயிர் போகாததால் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சுகம் நிறைந்த, இன்பம் நிறைந்த வாழ்வு இறுதிமூச்சு வரை இருக்க வேண்டும். இது போன்று விரக்தியற்று, வாழ்வின் எல்லை வரை சுகமாக வாழும் வழிவகையளிப்பதே  கல்வி; இதுவே மனிதனுக்கு கிடைத்துள்ள சுதந்திரம்.

ஆகவே கல்வி என்பது என்ன?

"அஸதோ மா ஸத்கமய

தமஸோ மா ஜ்யோதிர்கமயா

ம்ருத்யோர் மா அமிர்தம்கமய”

பொய்மையிலிருந்து உண்மையை நோக்கி படிப்படியாகச் செல்வோம். பொய்மையிலிருந்து திடீரென உடனடியாக விடுபட வேண்டும் என்று கூறவில்லை. உண்மையை அறிந்துகொள்ள, பொய்மைப் பாதையில் பயணித்து வெளிவர வேண்டும். இந்த உண்மை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. இறைவனை அடைய வேண்டுமானால் இவ்வுலகில் பயணித்து மேலே செல்ல வேண்டும். மாயை, கற்பனைத் தோற்றம் இருக்கலாம். ஆனாலும் இதிலிருந்துதான் செல்லவேண்டும். அப்பொழுதுதான் நம்மால் மரணத்தை கடந்து அமரத்துவதை அடைய முடியும். இதுவே கல்வி. நமக்குள்ளே  இருக்கும் உண்மைத் தத்துவம் - எது எல்லாவற்றையும் இணைக்கிறதோ, எது செயல்பட வைக்கிறதோ, எது நம்மை பூரணமாக்குகிறதோ, எது நம்மைத் தாங்குகிறதோ, மற்றும் பிரசினை ஏற்படும்போது அதை நாசமாக்குகிறதோ அதுவே - அந்த உண்மைத் தன்மையாகவே நாம் இருக்க வேண்டும். பொய்மையின் மாயத்திலிருந்து உண்மையின் வடிவாக ஆக வேண்டும் இப்படியாக மனிதனுக்கு சுயஉரிமை அளிக்கக்கூடியதும், செழுமை பெற்று வாழ வகை செய்வதும், செயலின்மையுடன் வலிமையாக போராடக்கூடியதும், படைப்பாற்றலை வளர்க்கக் கூடியதும் ஆக இருக்கக்கூடியதையே  கல்வி என்கிறோம். எனவே நம் கல்விமுறையில் முதன்முதலாகக் கூறுவது “முயற்சி செய்துபார்”. என்பதே.. பார்க்கக் கூடியதைப் பற்றிய கல்வி,  பார்க்கக் கூடியதை கடந்துள்ளவை பற்றிய கல்வி என இரு வகையாக உள்ளது. எனவே முயற்சி செய்தே ஆகவேண்டும். உயிரற்ற உலகின் படைப்புகளையும் அறிந்துகொள்ள வேண்டும். உயிரற்ற படைப்புகளுக்கு அப்பாலுள்ளவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.

சிரத்தை:

முயற்சிகளை சிரத்தையுடன் செய்ய வேண்டும். சிரத்தை என்றவுடன் மூடநம்பிக்கை என்பது மனதில் வருகிறது. ஆனால், நம்பிக்கை, மூடநம்பிக்கை இரண்டிற்கும் தொடர்பு எதுவுமில்லை. 'மூட நம்பிக்கை' என்ற சொல்லில் 'மூட அல்லது அறியாமை' என்று கூறுவதில் அர்த்தமில்லை. ஏனெனில், மனதில் உறுதி எடுத்துக் கொள்ளும்போது, பெரும் முயற்சி, உழைப்புக்கு பிறகே எடுத்துக் கொள்கிறோம். விவேகத்துடன் எடுத்துக் கொள்ளவேண்டும். சிரத்தை என்பதை உழைப்புடன் கூடிய உறுதி மனம் என்று ஏற்க வேண்டும். நன்கு சோதித்து முடிவெடுத்தாலும், முழு நம்பிக்கையுடன் சோதனை செய். இன்று எப்படிப்பட்ட கல்வி அளிக்கப்படுகிறதென்றால், ஒவ்வொரு விஷயம் பற்றியும் அதிகம் கேள்விகேள். யாராக இருந்தாலும், நம் வகுப்பறையில், ஆசிரியரிடம் கூட நம்பிக்கை கொள்ளாதே என்கின்றனர். நான் படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரையில், ' எவ்வித கல்விமுறை சிறந்தது' என்று குறிப்பிடும் போது, 'நம் ஆசிரியர் நம்மை ஏமாற்ற வந்துள்ளார்; ஆகவே அவரிடம் பத்துவித கேள்விகள் கேட்போம்" என உள்ளது. உதாரணமாக, ஒரு ஆசிரியர் வகுப்புக்கு வந்து, 'உங்களுக்கு உயிரியல் வகுப்பு முடிந்துவிட்டதா' என கேட்டபோது மாணவர்கள், ‘ஆம்’ முடிந்துவிட்டது என்றனர். 'போர்க்கெட்டோ சோரோஸ்'   என்பது என்ன என்று சொல்ல முடியுமா? என ஆசிரியர் கேட்கிறார். எவருக்கும் பதில் தெரியவில்லை. மறுபடியும் ஆசிரியர் கேட்கிறார். மறுபடியும் ஆசிரியர்,  ‘தான் கேட்டதற்கு பதிலில்லை; தெரியாது’ என சொல்லாதீர்கள்;  காரணமென்னவெனில் 'போர்க்கெட்டோ சோரோஸ்'  என்ற பெயரில் எந்த பிராணியும் இல்லை;  உன் ஆசிரியர் பொய் சொல்கிறார் என்று எண்ணிக்கொண்டு அவரிடம் நீங்கள் கேள்விகளை கேட்கவேண்டுமென்றார். வகுப்பில், உங்களிலிருந்து யாருமே எழுந்து ‘இப்பெயரை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை; எங்கிருந்து இப்பிராணியைப் பற்றி கூறுகிறீர்கள்’ என சொல்லியிருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் என்றார். ஆகையால் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் சுபாவத்தை விட்டுவிடுங்கள் என ஆசிரியர் கூறுவதாக கட்டுரையில் உள்ளது.  இங்கு நம் நாட்டில் அப்படி இல்லை. கேள்வி கேளுங்கள். இப்பிராணியின் பெயரை எங்கிருந்து சொல்கிறீர்கள் என கேளுங்கள். அதே நேரத்தில் சொல்லும் ஆசிரியர் நம்பிக்கைக்குரியவர் என்ற எண்ணத்துடன் கேளுங்கள். பகவான் இராமகிருஷ்ணரிடம், சுவாமி விவேகானந்தர்,  "நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா" என்று கேட்டார். விவேகானந்தருக்கும் இக்கேள்விக்கான தர்க்கம் தெரிந்தாலும், அவர் அதுவரை பலரிடம் இதே கேள்வியை கேட்ட போது ' பார்க்கவில்லை' என்று பலரும் கூறினார்களே  தவிர " பார்த்தேன்' என்று கூறியவர் எவருமில்லை. விவேகானந்தரே பின்னர் கூறும்போது, பகவான் ராமகிருஷ்ணரிடம் கேள்வி கேட்ட அந்த நேரம் வரை, 'அவருக்கும்  கடவுளைப்பார்க்க முடியாது என்றிருக்கும்போது,  இவர்மட்டும் நம்பிக்கையோடு கடவுளைப் பற்றி பேசுகிறாரே என்று அக்கேள்வியை அவரிடம் கேட்டார். ஆனால், விவேகானந்தர் நம்பிக்கையான பதிலை எதிர்பார்த்து இப்படிக் கேட்டாரே தவிர, என் கேள்வியைக் கேட்டவுடன் அவர் வாயை மூடிக்கொண்டு விடுவார் என நினைத்துக் கேட்கவில்லை.

நீங்கள் சொல்வது போலவே கடவுள் இருக்கிறாரா. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக, நம் நாட்டில் இறை நம்பிக்கை இருந்து வருவதால், இது பொய்யாக இருக்காது என்று நினைத்தே விவேகானந்தர் கேள்வி கேட்டார். யாரேனும் சரியான பதிலளித்தால் நல்லது என்றே கேட்டார். இராமகிருஷ்ணர் பதிலளிக்கையில், "ஆம். கடவுளைப் பார்த்து இருக்கிறேன்;  உன்னை நான் எப்படி பார்க்கிறேனோ,  அதைவிடத் தெளிவாக கடவுளைக் காண்கிறேன்; அவரிடம் பேசவும் செய்கிறேன்;  நீயும் கடவுளிடம் பேசலாம்; நான் கூறும் வழிமுறையின்படி நீ சென்றால் கடவுளைப் பார்க்கலாம் என்று கூறினார். இந்த பதில் கிடைத்தவுடன் விவேகானந்தர் இராமகிருஷ்ணரின் சீடர் ஆகிவிட்டார்.

முயற்சி செய்:

முழு சிரத்தையுடன் செய். வெளிஉலக அனுபவங்களில் நம்பிக்கை கொள். ஏனெனில் அவை உன்னை சோதித்தும் பார்க்கிறது. நம் பரம்பரையில் பண்டிதர்கள், " நெருப்பில் கை வைத்தாலும் அது உன்னைச் சுடாது" என்று வேதமே கூறியிருந்தாலும் நம்பிக்கை கொள்ளாதே. ஏனெனில் அது உன் அனுபவத்திற்கு முரண்பட்டது. தர்க்க பிரமாணம், அனுபவ பிரமாணம் என்றிருந்தாலும் உள்ளுணர்வு  பிரமாணமும் உள்ளது என்பதை நினைவில் கொண்டு, அது வெளிப்படலாம் என்று சிந்தனை செய்.

முழுக்க முழுக்க 'இயற்கை ரசாயனம்' (organic chemistry) எனும் முறை உருவாகியுள்ளது. அது உருவான அடிப்படை என்ன? 'முறை' என்பதன் அடிப்படை தெரியவில்லை. அனைத்து தர்க்கமும், கணிதமும், இதை விளக்க இயலவில்லை. 'கெக்யூலே' என்ற அறிவியல் அறிஞர், சிந்தித்துக்கொண்டே உறங்கியபோது, கனவில் 'இரு பாம்புகள் ஒன்று மற்றொன்றின் வாலை வாயில் உண்பது போல காட்சி கண்டார். கனவு தெளிந்ததும் உடனே அவருக்கு இரு அணுக்களை இணைக்க முடியும் என்பது புலப்பட்டது. இதிலிருந்துதான் 'இயற்கை ரசாயன' முறையை அவர் உருவாக்கினார். மனிதன் உள்ளுணர்வில் இது ஏற்பட்டது. ஆகவே ஆழ்மனதின்  உள்ளுணர்விலும் நம்பிக்கை கொள். நீ முடிவெடுப்பதை அனுபவத்தின் ஆதாரத்தினால் சோதனை செய். இதை வாழ்ந்து பார்த்து சிந்தனை செய். வாழ்க்கையின் அனுபவ அடிப்படையில் ஏற்படுவதை ஏற்றுக்கொள்கிறோம்.

அனுபவத்தில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய். சாணக்யர் தனது 'அர்த்த சாஸ்திரத்தில்'  எழுதும்போது பல இடங்களில் கீழ்க்காணும்படி குறிப்பிட்டுள்ளார்.

“பல்வேறு பிரசினைகளுக்குத் தீர்வாக, பீஷ்மாச்சார்யார், சுக்ராச்சாரியார் ஆகியோர் இப்படிக் கூறியிருந்தாலும், என் அனுபவ அடிப்படையில் இது சரியில்லை; அவர்கள் காலத்தில் ஒருவேளை அது சரியானதாக இருந்திருக்கலாம்; ஆனால் இன்று அப்படி இல்லை; இருப்பினும், அவர்கள் மீது அவமரியாதை இல்லை; என் அனுபவம் இப்படி உள்ளது; நான் இப்படிச் செய்து அனுபவரீதியாகப் பார்த்திருக்கிறேன். இவ்வழியில் சென்று முயற்சி செய்திருக்கிறேன். எனவே, நான் தற்போது நினைப்பது சரியென்றே தோன்றுகிறது”.

அவர் தன் வாழ்நாள் முழுவதும் முயற்சிகள் செய்து நூல் எழுதினார். பல்கலையில் போதிக்கும் ஆசிரியராக மட்டுமல்லாமல், ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய தன் அனுபவ அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார்.

இது போல, 'கல்விமுறை' குறித்து அறிவு இருந்தால் மட்டும் போதாது. அனுபவ அறிவு இருக்கவேண்டும். என் வாழ்க்கையில் இந்தவொரு விஷயத்தை சோதித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்பன குறித்து கலந்துரையாடல் நடைபெற வேண்டும். கல்வி, நடைமுறைக்கேற்ற விஷயமாக இருப்பதால் அதனை பிறரால் ஒதுக்க முடியாது. இன்றும் கூட (Internship), ‘உள்ளுறை பயிற்சி’  எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளதைப் பார்க்கிறோம். ஏன் இப்படிச் செய்ய வேண்டியுள்ளது. புத்தகத்தில் அனைத்துமிருப்பினும், நடைமுறை வாழ்க்கையில் அனுபவம் பெற்று அதை கடைப்பிடித்துத் தெரிந்துகொள்வதே சாலச் சிறந்தது. அனுபவத்தில் செய்து பார்த்து வெற்றிபெற்ற விஷயங்களைத் தொடர்ந்து செயல்படுத்துங்கள். இப்படி எண்ணற்ற நடைமுறை விஷயங்கள் இக்கல்விமுறையில்  இருக்கவேண்டும்.

மாணவரின் எண்ணப்போக்கு:

யார் கல்வி கற்றுக் கொடுக்கிறார்களோ, அதே போல யார் கல்வி பெறுகிறார்களோ இருசாராருக்கும் 'கல்விமுறை' பற்றி முடிவெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும். மாணவர் எப்படி கற்க வேண்டும்.

'தத்வித்தி ப்ரணிபாதேன பரிபிரஷ்னேன சேவையா' - (கீதை).   பணிவுடன், சிரத்தையுடன் சென்று விழுந்து வணங்கி, என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள் என்பதல்ல; (பரிப்ரஷ்னேன) கேள்விகளையும் கேள். கேள்விக்கான பதில் கிடைப்பதன் மூலம் ஞானம் கிடைக்கிறது. கிடைத்த ஞானத்தின் அடிப்படையில் முயற்சி செய்துபார் என்றும் சொல்லப்படுகிறது.

பிரம்மாவிடம், இந்திரன், விரோசனன் இருவரும் ஆத்மஞானம் பெறச் சென்றபோது, 'கண்ணால் பார்க்கக்கூடிய தன்மை உடையதே ஆத்மா; அதைப்பார் என்றார். இருவரும் எதிர் எதிரே நின்று கொண்டு தங்கள் உருவங்களைப் பார்த்தபோது, பார்க்கப்படுபவர் ஆத்மா என உணர்ந்தார் இந்திரன். திரும்பிச் சென்ற பிறகு சலனமற்ற நீரில் பார்க்கப்படும் உருவம், சலனப்படும் நீரில் மறைந்துவிடுகிறதே என சிந்தித்தார். இந்திரன் திரும்பி பிரம்மாவிடம் வந்தார். ஆனால்  விரோசனன் வரவில்லை. விரோசனனுக்கு ஞானம் கிடைக்கவில்லை. இந்திரனுக்கு ஆத்மவித்யாகிடைத்தது. திரும்பிவந்த இந்திரனுக்கு பிரம்மா மேலும் பல அனுபவங்களை கொடுத்தார். எனவே, செய்து பார்க்கும்போது, பிரச்னையும் அதற்கு பரிகாரமும் பெறப்பெற ஞானம் அடைய முடியும். 'சேவயா' என்றால் சேவை செய்து ஞானம் பெறு; சேவை மூலம் அனுபவம் பெறு. "'தத்வித்தி ப்ரணிபாதேன பரிபிரஷ்னேன சேவையா' என்று கீதை கூறுவது போல,  தகுதி பெறுவது என்பது ஒரு தொடர் முயற்சியே.

கேள்வி கேட்பது, பதிலைக் காதில் வாங்கிக் கொள்வது, வாழ்க்கையில் அனுபவம் பெற்று புரிந்துகொள்வது - அதை ஆழமாக மனதில் பதித்து சிந்தனை செய்வதன் மூலமாகவே, உண்மையில் அனைவருடைய கருத்தும் உருவாகிறது. இது சரியான பாதை.என்று தெளிவு பெற்று, தொடர்ந்து இப்படியே செய்து வரவேண்டுமென்பதால், சோதனை என்பதற்கு முடிவு என்பது கிடையாது. எனவே விதவிதமான திரிபுகள் ஏற்படுகின்றன. 'திருடாதே ஊழல் செய்யாதே. லாகிரி/புகையிலை பொருட்களைப் பயன்படுத்தாதே' போன்ற விஷயங்கள் இன்று அதிகம் சொல்லப்படுகின்றன. திரைப்படங்களில் காட்சி காட்டும்போது, கீழே புகை பிடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு என்ற வாக்கியமும் காட்டப்படுகிறது. இருப்பினும் புகை பிடிப்பது குறைந்துள்ளதா? புகை பிடிக்க, ஊழல் செய்ய எவரும் கற்றுக் கொடுக்காவிட்டாலும் பெருமளவில் அதிகரிப்பதைக் காண்கிறோம். ஏன்? இப்படிச் சொல்வது ஒருபுறம்; மறுபுறம் கேட்டபடியே விஷயங்கள் நடைபெறுவதில்லை. எனவே கேட்டது, அறுபட்டு விடுகிறது. அதை விட்டு விடுகிறோம். யார் சொல்கிறார்களோ, அவர்கள் அதை தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டவேண்டும். அதன்பிறகே, கற்பவர் இவற்றை மனதில் ஏற்கிறார். இது எப்படி நடக்கிறது; இதிலிருந்து என்ன ஆகும் என்பதையெல்லாம் முயற்சி செய்து பார்க்கிறார்கள். சிறிது விரல் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். கற்பவர் தன் வாழ்க்கையில் செய்து பார்க்கிறார்கள். அப்பொழுதுதான் இவ்விஷயம் சரியானதாக நிறைவு பெறுகிறது. அனுபவத்தில் கற்றுக் கொண்டது உண்மை என்பதால் இதை விட்டுவிடக் கூடாது . அனுபவம் பெற்றவர்களே கற்பிக்கத் தகுதியானவர்கள். இப்படி அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கற்பிப்பதும், அவர்களிடம் மாணவர்கள் கற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும்.

ஆசிரியருக்கான தகுதி :

கல்வி என்பது ஒரு தொடர் முயற்சியாக, வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிறது. பள்ளிக்கூடங்களில் மட்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது சரியல்ல. சமுதாயமும் கற்றுக் கொடுக்கிறது. வீடுகளில் கல்வி கொடுக்கப்படுகிறது. கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கம் இல்லாதபோதும் கற்பித்தல் நடைபெறுகிறது. எனவே கல்வி எனும் தொடர்முயற்சியில் ஆசிரியர்களும் கற்கிறார்கள். கல்வி பெறுவது மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஆசிரியர்களின் தகுதியும் மிக முக்கியமானது. இங்கு ஆசிரியர்கள் எப்படி உள்ளார்கள்? வெறும் மெத்தப் படித்தவர்களாக மட்டும் இருந்தால் போதாது. நல்ல முன்னுதாரணமான ஆசிரியர்களாகத் திகழ வேண்டும்.

நான் மாணவனாக இருந்தபோது திருப்பதிக்கு தரிசனம் செய்யச் சென்றிருந்தேன். அப்பொழுது ஆசிரியர் உடனிருந்தார். அக்காலத்தில் இன்று போல வசதிகள் இல்லை வெயிலில் வரிசையில் நான்கு மணிநேரத்திற்கு மேல் நிற்கவேண்டியிருந்தது. மதியம் கடும் உச்சி வெயிலில் கடவுளை வழிபட தேங்காய்  பழத்துடன் நின்றிருந்தோம் ' வெங்கட்ரமணா - கோவிந்தா' என கோஷமிட்டோம். ஆசிரியர் கோபத்துடன் பார்த்துவிட்டு, இதுவும் மூட நம்பிக்கையே என்றார். இன்றைய கல்விமுறை காரணமாக ஆசிரியரை அவமதிக்கும் நிலையில் இருந்தோம். இப்படிச் சொல்லும் நீங்களும் ஏன் வரிசையில் நிற்கிறீர்கள் என கேட்டோம். என் சிந்தனைப்படி கடவுள் இல்லை; ‘என் சிந்தனை தவறு-கடவுள் இருக்கிறார்’ என்றே வைத்துக்கொண்டாலும், நான் பிரசினைகளில் சிக்க விரும்பவில்லை. ஆகவே வரிசையில் நிற்கிறேன் என்றார். மாணவர்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து எப்படிக் கற்றுக்கொள்வார்கள். அவர் பேசுவது ஒன்று- செயல் வேறு என்றிருப்பதால் என்ன விளைவு ஏற்படும்? எனவே மாணவர்களுக்கு, ஆசிரியர், தானே உதாரணமாகத் திகழவேண்டும். மற்றோரு விஷயம் என்னவெனில் ஆசிரியர் தன் மாணவர்களுடன் ஒன்றிப் போக வேண்டும்.

பூஜனீய ரஜ்ஜூபையா அவர்கள் கூறிய ஒரு சம்பவம். அவர் மாணவராக இருக்கும்போது அணுவிஞ்ஞானத்தில் நிபுணராக இருந்தார். எல்லோரையும் போல அங்கிருந்த விஞ்ஞானி திரு. சி.வி.ராமன் அவர்களும் இவரை 'வளரும் சிறந்த விஞ்ஞானி' என்ற எதிர்பார்ப்போடு பார்த்தார். பல்கலையின் துணைவேந்தர் அழைத்து, நீ தேர்வில் வெற்றிபெற்றுள்ளாய். உனக்கு நல்லவேலை ஒன்று தயாராக உள்ளது. நீ விரும்பினால், நான் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறேன் என்றார். ஆனால், திரு.ரஜ்ஜூபையா அவர்கள் நான் வேறு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் நான் ஆசிரியராகவே பணிபுரிய விரும்புகிறேன். கற்ற கல்விக்குச் சரியான பயனாக அது விளங்கும். மேலும் அதிகம் சம்பாதித்து என்ன செய்யப் போகிறேன். பணத்திற்கான தேவை எனக்கு எதுவும் இல்லை என்றார். இதன்படியே, திரு. ரஜ்ஜூபையா அந்தப் பல்கலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டு வருடம் கழித்து அவரின் ஆசிரியர் அவரைப்பார்த்து, 'எல்லாம்  எப்படி நடந்து கொண்டிருக்கிறது? என்று கேட்டார். திரு. ரஜ்ஜூபையா  பதிலளிக்கையில், கடந்த இரண்டு வருடமாக ஒரே பாட விஷயத்தை தொடர்ந்து சொல்லிக் கொடுப்பதால் கிட்டத்தட்ட அனைத்துமே எனக்கு மனப்பாடமாகிவிட்டது. யாரேனும் பழைய மாணவன் என் வகுப்பில் அமர்ந்தால், ஒரு விஷயத்தை விளக்க, நான் என்ன உதாரணம் சொல்வேன் என்பதைக் கூட அவர் சொல்லி விட முடியும். ஒரே பாட விஷயத்தை தொடர்ந்து கற்றுக் கொடுப்பதால்  நான் பக்குவமடைந்து விட்டேன். அங்கங்கே சில புதிய விஷயம் கற்றுக் கொடுத்தாலும் பெரும்பாலும் பழைய விஷயங்களையே சொல்லிக் கொடுக்கிறேன் என்றார். அவரது ஆசிரியர் திரு. மேகநாத் சாஹா பதிலளிக்கையில், 'நீங்கள் பௌதீகப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து வந்துள்ளீர்கள்; ஆனால்,  நானோ மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்துள்ளேன்’ என்றார். இதன் உட்பொருள் என்னவெனில், பாடங்கள் சொல்லிக் கொடுத்தாலும் அவர் மாணவரின் நிலையையும் கவனத்தில் கொண்டிருந்தார். மாணவர் நிலைக்குச் சென்று கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு சரிவர புரிதல் ஏற்படும் வகையில் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் எவரால் மாணவர்களுடன் ஒன்றிப்போக முடிகிறதோ அவர்களால் மட்டுமே, மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டிய பாடவிஷயம் மட்டுமல்லாமல், அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கின்ற ஆசிரியர்களாக விளங்க முடியும்.  தொடக்கக் கல்வி முதல் முதுநிலை கல்வி வரை எனக்கு, என் உடல்நலன் பற்றியும் சிந்திக்கக்கூடிய ஆசிரியர்கள் கிடைத்தது என் பாக்கியம். சமுதாயவேலை செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியது மட்டுமல்லாமல், அவர்களே முன்னுதாரணமாக தன் மற்ற சொந்த நேரத்தையும் எங்களுக்காக ஒதுக்கி பாடம் கற்றுக் கொடுத்தார்கள். எனவே, இப்படிப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வாழ்வில் முன்னுதாரணமாக இருந்து எங்கள் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட்டதால், அவர்கள் இன்றும் என் நினைவில் நிற்கிறார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தவை நினைவில் நீங்காமலிருக்கிறது. ஒரு ஆசிரியர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, மாணவர் நிலைக்குச் சென்று பாடவிஷயங்களை சொல்லிக் கொடுப்பதுடன் அது சார்பாக உள்ள மற்ற பிற விஷயங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பாடவிஷயத்தில் ஆழமாகத் தெரிந்த பண்டிதராக மட்டுமல்லாமல், சந்தர்ப்பத்திற்கேற்ப  விஷய ஞானத்தையும் கொடுப்பராகவும் இருக்க வேண்டும்.

இன்று எல்லாவேலைகளையும் பிறரிடம் கொடுத்து செய்யச்சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காசு கொடுத்தால் வேலை நடக்கும். உடையை தன் கையாலேயே துவைக்கும் பழக்கமில்லை. லாண்டிரியில் பைசா கொடுத்தால் வேலை முடிந்துவிடுகிறது; வீடுகளில் வாஷிங்மெஷின் பயன்படுத்தப்படுகிறது. சிறுசிறு விஷயங்ககள் கூடத் தெரிவதில்லை. அவ்வப்போது சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. நான் எம். எம். சி படிப்பில் நோயியல்(pathology) படிக்கச் சென்றபோது, என் கல்லூரியில் அத்துறை தயாராகவில்லை. எங்களது ஆசிரியர்,  துறையின் ஆராய்ச்சிக் கூடத்தை உருவாக்குவதில் கட்டிட அமைப்பு, மின் சாதனங்கள் இணைப்பு ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்தார். பறவைகளை எப்படிப் பிடிப்பது போன்ற சிறுசிறு விஷயங்கள், பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும் கற்றுக் கொடுத்தார். இவர் கற்றுக் கொடுத்த பல விஷயங்கள் வாழ்க்கையை நடத்த மிகவும் பயன்பட்டது. பறவை பிடிப்பவர்களை வரவழைத்து நிதர்சனமாக கற்றுக் கொடுத்தது போல சந்தர்ப்பத்திற்கேற்ற சரியான கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களும், அவற்றைத்  தானே கற்றுக்கொள்ளும் ஆசிரியர்களும் தேவை. சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி (குரு) ஆசிரியர் என்பவர் களங்கமற்றவராக விளங்க வேண்டும்.

மனிதர்கள் உள்மனதை நாம் புரிந்துகொள்ள முடியாது. அறநெறிக்கல்வி தற்போது சரிவர கொடுப்பதில்லை என்றபோதிலும் மேன்மையான வாழ்க்கை வாழ்பவர்களை மதித்து அவரிடமிருந்து கற்றுக் கொள்ளும் தன்மை மனிதர்களிடம் இருக்கிறது. பெரும் குற்றவாளிகள் கூட, சிறந்த மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்வதைக் காண முடிகிறது. இது எப்படி ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. மாணவரின் வாழ்க்கையை மனதில் கொண்டு கற்பிக்க வேண்டும். மாணவர்களின் வாழ்க்கையில் மனதில் பதியும் வண்ணம் கற்பிக்க வேண்டுமெனில், ஆசிரியர்கள் களங்கமற்ற முன்னுதாரணமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு இப்படிப்பட்ட தகுதி தேவை.

கேள்வியிலிருந்து எதிர்பார்க்கப்படும் பண்பு வளர்ச்சி:

மேற்கூறியவாறு ஆசிரியர்கள், கல்விமுறையைப் பின்பற்றினால் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைவேறும். கல்வியின் மூலம் எவ்வித குணவளர்ச்சி ஏற்பட விரும்புகிறோமோ, அத்தகைய குணவளர்ச்சி மனிதர்களிடம் ஏற்படும். அவை என்னென்ன?

முதலில், திறன். மனிதன் பிராணி இல்லை. ஆனாலும் மனிதன் படைப்பில் அனைவருடனும் வாழவேண்டும். தான் வாழவும், தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவனுக்கு திறன் தேவை. இங்கு ஆளுமை வளர்ச்சி பற்றி கூறுகிறார்கள். ஆளுமை வளர்ச்சி என்பது திறன் வளர்வதால் மட்டும் ஏற்படுவதில்லை. திறனுடன் அவரது உள்மனது வெளிப்படுகிறது. சரீரம், புத்தி, மனம், சொல், செயல் இவை மூலமாகவே வெளிப்படுகிறது. பொது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தினால், வேறு சில விஷயங்களும் கவனத்திற்கு வருகிறது. மன அழுத்தத்தால் கோபம் ஏற்பட்டாலும், பின்னர் வருந்தி, அப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது என்கின்றனர் பலர். அவை வெளிப்படக் கூடாது. ஏன் இப்படி நடக்கிறதென்றால், உள் மனதில் இருக்க வேண்டிய தெய்வீகம் வெளிப்படவில்லை. மனிதனின் 'தனித்துவம்' வெளிப்படுகின்றதென்றால், அது அவனின் உள்மனதின் வெளிப்பாடே. நற்குணங்கள் சேர்ந்திருந்த போதிலும், ஆழ்மனதில் பதிந்துள்ள நற்குணமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. அது பணிவுடன் திகழ்கிறது. உதாரணமாக ஒருவரின் கஷ்டத்தைப் போக்க, ஒரு விவசாயியின் பயிரைக் காப்பாற்ற காவல் புரிவதாக இருக்கலாம்; மகான்களின் இல்லத்திற்குச் சென்று தண்ணீர் நிரப்புவதாக இருக்கலாம். இதில் தாழ்ந்த வேலை-உயர்ந்த வேலை என்பது கிடையாது. இதன் மூலம் நம் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.  அம் மனம், பிறரின் குறைகளைக் கூட சகித்துக் கொள்கிறது. வாழைப்பழம் சாப்பிடாமல், அதன் தோலைக் கூட சாப்பிட்டு திருப்தி கொள்ளச் சொல்கிறது; எச்சில் செய்த நாவல் பழத்தைக் கூட சாப்பிடச் செய்கிறது; இப்படிப்பட்ட பணிவான, மனம், இருதய பூர்வமான அன்பு மனிதர்களிடம் ஏற்படச் செய்யவேண்டும்.

நாய், தான் சாப்பிடும்போது பிறர் சாப்பிட்டார்களா, இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல் அதற்கு பசித்தால் அது உணவு உட்கொள்கிறது. யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் கூட அந்த தட்டிலிருந்து பிடுங்கியெடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறது. மனிதன் இப்படி இருக்கக் கூடாது. மனிதன், தன் கண் முன் யாரேனும் பசியோடு இருந்தால், அவரைப் பொருட் படுத்தாமல் நாயைப் போல தன்பாட்டுக்கு சாப்பிட மாட்டான். தன் உணவிலிருந்து சிறிது கொடுப்பதோ, அல்லது அவரது வேலையை முடித்து வெளியே அனுப்பிவிட்டு சாப்பிடுவான். பசியோடு ஒருவர் எதிரிலிருந்தால் அவனுக்கு உணவு இனிமையாகத் தோன்றாது. ஏனெனில், அவன் மனிதத் தன்மையுடன் இருப்பதால் இப்படி நிகழ்கிறது. இந்த வேதனையுணர்வே மனிதத்தன்மையின் அடிப்படை சிறப்பு அம்சமாகும். பிறரின் துக்கத்தை அறிந்துகொள்ளும் தன்மை படைத்தவனாகிறான். பிறரின் துக்கத்தை உணர்ந்து, அதற்கேற்ப தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் விவேகம் இருக்கவேண்டும். அறிவு, விவேகத்துடன் வெளிப்படாவிட்டால் அது  தீமையைத் தரக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது.

உதாரணம் :

நான்கு  சிஷ்யர்கள் குருகுலப் படிப்பு முடிந்து திரும்பும் வழியில் ஒரு எலும்புக் கூட்டைக் கண்டனர். உடற்கூறு படிப்பு (Anatomy) படித்த மாணவன் இதைப் பார்த்துவிட்டு இது சிங்கத்தினுடையது என்றான். இந்த எலும்புக்கூடு சிங்கத்தினுடையது போலத் தோன்றவில்லை என மற்றோருவன் கூறினான். இன்னொருவன், தான் கற்ற வித்தையைப்  பிரயோகிக்க முற்பட்டு, கமண்டலத்திலிருந்து  நீர் தெளித்தான். அந்த எலும்புக்கூடு தசை, நரம்புகளுடன் வளர்ந்து அங்கு சிங்கம் உருவானது. மூன்றாமவன், நான் இதற்கு உயிர் கொடுப்பேன் என்றான். நாலாமவன், பொறுமையாக இரு. இப்படிச் செய்யாதே என்றான். இதைக்கேட்டு, முந்தைய மாணவன், 'நான் ஏன் உயிர்க்கொடுக்கக்கூடாது; நீ உன்திறமையைக் காட்டினது போல, நான் என் திறமையைக் காட்டுவேன்' என்றான்.  உடனே, அருகிலிருந்த மரத்தின் மீதேறி, தண்ணீர் தெளித்து, அந்த சிங்கத்துக்கு உயிர்கொடுத்தவுடன், 'அந்தச் சிங்கம் அங்கிருந்த பிற மூன்று மாணவர்களையும் சாப்பிட்டுவிட்டது' என்ற கதை பஞ்சதந்திர கதையில் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில், ஞானம் இருந்தால் மட்டும் போதாது; விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதே. தற்போது, தத்துவ உலகில் பெரும் விவாதப் பொருளாக,  அறிவியல்-அறநெறி இவையிரண்டும் இருந்து வருகிறது. நம் நாட்டில் நிலவும் கருத்துப்படி ஞானமென்பது மனிதனை மேலோங்கச் செய்யக்கூடியதாக, சுகமளிக்கக் கூடியதாக, அமைதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அர்ஜுனனிடம் இருந்த "பிரம்மாஸ்திரம்” பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. ஆனால் அஸ்வத்தாமாவிடம் இருந்த  "பிரம்மாஸ்திரம்" அழிவை ஏற்படுத்தக்கூடியதாக இல்லை. உத்தரையின் கற்பத்தின் மீது அது செலுத்தப்பட்டதால் வெளியில் அது பேரழிவை ஏற்படுத்தவில்லை. விவேகமில்லாத ஞானம் நம்மை கதறவைக்கும். எனவே விவேகமென்பது மிகவும் அவசியமான தேவையாகிறது.  முக்கிய விஷயம் என்னவென்றால் கல்வி  கற்றவனுக்கு 'சுய கௌரவம்' தேவை. ஞானம் ஒருவனுக்கு தன்னைப்பற்றிய சுய கௌரவம் ஏற்படுத்தாவிட்டால் அந்த ஞானத்தினால் என்ன பயன்? சுயகௌரவம் இல்லாத மனிதன், இவ்வுலகில் மேன்மையடைய முடியாது. இதில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். இந்த உலகில், நானே, என்னை வழிநடத்திக் கொள்வேன்; என் மேன்மையைக் காப்பாற்றிக் கொள்வேன் என்ற நம்பிக்கை மனதில் இருக்க  வேண்டும். அதில், பயமின்மை இருக்கவேண்டும். எனக்கு ஞானமிருக்கிறது, ஆனால் உண்மை பேச திராணி இல்லை என்றால் பயனில்லை. பாரபட்சமில்லாமல் இருக்கவேண்டும். உலகின் ஞானமிருந்தும், பயனுள்ள ஞானம் எது என்பதும் நமக்குப் புரியும். அதன் பயன் எப்படி  இருக்கும். இந்த ஞானம் நம்மை கடைசிவரை கடைத்தேற்றுமா என சிந்திக்க வேண்டும். வாழ்வில் எப்பொழுதும் அமைதியையும், சுகத்தையும் அளிக்கக் கூடியது  எது? ஆகவே நம் மனம் பாரபட்சமில்லாமல் தெளிவுடையதாக வேண்டும். எல்லா விஷயத்திலும் அதன் உட்பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.

இதைத்தான் 'எல்லாம்புரிந்தவர்' என்று கூறுகிறார்கள். உட் பொருளை சாரத்தை, தெரிந்து கொள்வதே 'திறமை பெறுவது' என அறியப்படுகிறது.

இவ்வளவும் ஒருவரிடம் இருந்தால்மட்டுமே, உங்களது அறிவு, தகவல், திறன், இவையனைத்தும் கொண்ட ஆளுமை மெருகு பெறுகிறது. திறன் மற்றும் அறிவு இன்றைய உலகில் கணினிக்கு கூட உள்ளது. உயிருள்ள மனிதனின் தேவை என்ன? இயந்திர அறிவியல் வளர்ந்து 'ரோபோ' எனப்படும் யந்திர மனிதன் அனைத்து செயல்களையும் செய்ய முடியும். மனிதனுக்கு, மனிதத்தன்மை என்பது கேள்விஞானம் மிகப்பெற்ற தன்மையோ, குணங்களோ, திறமைகளோ - இவையனைத்தையும் தன் "நற்பண்புகள்" என்பதின்கீழ் கொண்டு வந்தால் மட்டுமே 'மனிதத் தன்மை' என்பது முழுமை பெறுகிறது. இப்படிப்பட்ட மனிதன் உருவானால் மட்டுமே, அவரவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதிலும், அமைதி, சுகம் பெறுவதிலும், வெகுஜன மக்களின் நன்மையை அடைவதிலும், திறமை பெற்றவராக, சாத்வீகத் தன்மையுடன் செயலாற்றுபவராக "தவமயமான வாழ்க்கை" வாழும் மனிதனாக உருவாக முடியும். அவரால் தான், சுயமாக, சுகமாக இருந்து, உலகம் முழுவதையும் சுகமடையச்  செய்ய முடியும். நம் நாட்டில், கல்வியின் வெளிப்பாடு என்னவெனில், எப்படிப்பட்ட மனிதன் உருவாகவேண்டுமெனில், இன்றைய உலகின் தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய மனிதனாக அவன் உருவாக வேண்டும். இத்தேவையை பாரதத்தால் நிறைவேற்ற முடியும். எனவே, பாரதத்தில் இந்த உறுதிப்பாட்டுடன் கூடிய நம் கல்வி முறையை மீண்டும் நிலைநாட்டுவதை விரிவான அளவில் செய்யவேண்டும். கல்வியில் ஆராய்ச்சி சிந்தனைகள் பன்னெடுங்காலமாக இருந்து வந்த போதிலும், தற்போது கல்வியாளர்களாகிய நாம் ஒன்று கூடி ‘கல்வியில் பாரதிய சிந்தனை' என்பது பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமுள்ளது. இதன்பொருட்டு, இன்றைய காலசூழ்நிலைக்கேற்ற யோசனைகளை கருத்தில்கொள்வது மிகவும் அவசியமானது. தங்களது, இந்த கூட்டத்தின் மகத்தான கலந்தாய்வுகள் சரிவர நடைபெறட்டும். அவை வெற்றிபெறுவதின்மூலம் பாரதிய கல்விமுறையில் புதிய மாற்றம் ஏற்படட்டும்;

இப்புதிய கல்விமுறையின் மூலம், மனிதனின் வாழ்க்கை முழுமை நிறைந்ததாக உதயமாகட்டும். இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

மொழிமாற்றம்  செய்தவர்: சு. விஸ்வநாதன்