ஹிந்துவின் பார்வையில் கல்வி

 சகோதரிகளே சகோதரர்களே,   கல்வியை பற்றி பேசுவதற்காக என்னை அழைத்தார்கள்.  முதலில் என்னுடைய உள்ளுணர்வு இதை மறுத்து ஏற்க வேண்டாம் என்று சொல்லியது.  நான் மெத்த படித்தவன் என்றோ, அல்லது ஏதோ ஒரு விசேஷமான தகுதி பெற்றவன் என்றோ நான் நினைக்கவே இல்லை.  ஆனால் உங்களுடன் இருக்கப் போகிறோம் என்ற அந்த உணர்வு, பல மெத்தப்படித்தவர்களோடு இருக்கப் போகிறோம் என்ற அந்த உணர்வு என் மனதில் இருந்த தயக்கங்களை எல்லாம் அகற்றி, என்னுடைய பகுத்தறிவை கூட அகற்றி எடுத்துவிட்டது, உங்களுடன் கலந்து கொள்ள வைக்க வைத்து விட்டது.  நான் என்ன சொல்ல போகிறேன்?    ஏதோ ஒன்று புதிதாகச் சொல்ல இருக்கிறேன்  என்று தயவு செய்து எண்ணாதீர்கள்.  ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்ததை, உங்களுடைய எண்ணங்களை நான் பிரதிபலிக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

நண்பர்களே, நீங்கள் ஒரு மிகப்பெரிய, அற்புதமான அமைப்போடு  தொடர்பில் உள்ளீர்கள்.  இந்த நாடு எதன் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டு உள்ளதோ, அதனோடு தொடர்பில் உள்ளீர்கள். இன்றைய இளைஞர்களும், இளைஞர் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் உலகெங்கும் கவனச்சிதறல்களின் மீது, தங்கள் கவனத்தை வைத்துள்ளார்கள்.  உணர்ச்சிவசப்படக்கூடிய விஷயங்கள் மீது, எது தீமையோ அதன் மீது, கவனத்தை வைத்துள்ளார்கள்.  அதுவே அவர்களுடைய சுபாவத்தை கட்டுப்படுத்துகிறது.  எப்பொழுது பார்த்தாலும் எதையாவது எதிர்ப்பது, உரிமைகளைப் பற்றி பேசுவது என்றே இருக்கிறார்கள். கல்லூரி வளாகங்கள் எல்லாமே ஒரு புரட்சிக்கான போராட்டத்திற்கான அமைதியற்ற இடங்களை உருவாக்கக்கூடிய இடங்களாக இருக்கின்றன.  ஆனால் நீங்களோ வித்தியாசமான மாறுபட்ட கொள்கையை கொண்டவர்களாக, மாறுபட்ட உத்வேகத்தைக் கொண்டவர்களாக, மாறுபட்ட புத்துணர்வை கொண்டவர்களாக, லட்சியங்களை உடையவர்களாக, கொள்கைகளை உடையவர்களாக இருக்கிறீர்கள்.  உங்களுடைய சிந்தனை ஆரோக்கியமாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமான விஷயங்களை நோக்கிச் செல்கிறது.  நீங்கள் எல்லாரும் தேச பக்தர்கள்.  இந்த நாட்டின் பண்பாட்டை நேசிக்கிறீர்கள்.  கடமையை பற்றிய எண்ணம் உங்கள் மனதில் அதிகமாக உள்ளது.  சுய கட்டுப்பாடு என்பதன் மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.  பிறருக்கு ஆலோசனை சொல்வதை விட, பிறர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதை விட, சுய கடமை, சுய கட்டுப்பாடு என்பதன் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.  நீங்கள் சுய மாற்றம் என்பதே அதிக முக்கியம் என்று உணர்கிறீர்கள். பிறரை மாற்றுவதை விட சுய மாற்றம் என்பதே முக்கியம் என்று உணர்ந்துள்ளீர்கள்.  இந்த மாதிரியான எண்ணத்தை வெறும் நம் நாடு  மட்டுமல்ல, மொத்த உலகமுமே இப்படிப்பட்ட எண்ணத்துக்கு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.  என்ன மாதிரியான விஷயங்கள் நம் நாட்டில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.  நமது இளைஞர்கள் அந்நிய நாட்டுக் கொள்கைகள், அந்நிய நாட்டு பொருள் சார்ந்த சிந்தனை, சிற்றின்ப விஷயங்களை நோக்கி செல்லுதல், எதைப் பற்றியும் எந்த ஒரு தார்மீக சிந்தனை அல்லது பொறுப்புணர்வு பற்றியும் கவலைப்படாமல் இருத்தல், இந்த கம்யூனிசம் பற்றிய சிந்தனைகள், ஒற்றுமையின்மை, பிரிவினை பேச்சுக்கள் போன்றவற்றை கண்டு ஈர்க்கப்படுகிறார்கள்.  இதன் தாக்கத்தால் அப்பாவி மக்களும், லட்சியம் கொள்கை என்று வாழக்கூடிய இளைஞர்களும், தங்களுடைய நன்மைக்கு, எதிர்காலத்துக்கு பாதகம் வரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.  நம் நாட்டை அடிமைப்படுத்த முனையும் வெளிநாட்டவர்களுக்கு தோழர்களாக மாறி, அவர்களது உளவாளிகளாகவே இருந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.  முன்பெல்லாம் இந்த சக்திகள் எல்லாம் நமது நாட்டை துண்டாட முயன்றன.  இன்று அவைகள் மீண்டும் இணைந்து வெளிப்படையான ஒரு போர் வெளிப்படையான ஒரு போரை அல்லது போர் பாதையை நடத்த முன்னெடுக்கின்றன.  மிச்சம் இருக்கக்கூடிய இந்த ஒன்றுபட்ட இந்தியாவை துண்டாட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் நீங்களோ, ஒரு பெரும் பாறை போல இந்த மண் சரிவிலிருந்து புயலிலிருந்து உங்களை நீங்களே காத்துக்கொண்டு இருந்துள்ளீர்கள்.   இப்படி நேர்மையாக நிமிர்ந்து நின்றதால், இந்த தேசமே நிமிர்ந்து நிற்க நீங்கள் உதவுகிறீர்கள்.  உங்களது தாக்கம் இந்த  நாட்டின் நன்மைக்காகவும், பல்கலைக்கழகங்களின் நன்மைக்காகவும் மட்டுமே இருக்கிறது.  ரவுடித்தனம், தேசத்தை துண்டாடுதல், தேசத்திற்கு அவமானம் சேர்த்தல், பண்பாட்டை வெறுத்தல் போன்றவற்றை பின்பற்றும் அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் எல்லாருமே உங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்.  இதுதான் உங்களது வெற்றியின் அளவுகோல். இதுவே நான் உங்களோடு ஏன் இன்று மாலை நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.  உங்களைப் போன்ற நல்லவர்களை சந்தித்ததிலும் பார்த்ததிலும் பெரும் நன்மையே விளைகிறது.    “  வளரும் நாட்டில் கல்விக்கான திட்டம்” என்பதே இந்த தலைப்பு.  இந்த தலைப்பை உருவாக்கும் பொழுது உருவாக்கியவர்களுக்கு இதில் சந்தோஷம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  முன்னேறி வரும் நாடு என்ற சொற்றொடரே முன்னேறாத நாடுகள் அல்லது பின்தங்கிய நாடுகள் என்று ஏற்றுக்கொண்டோம் என்று பொருள்.  சமீப காலம் வரை கிழக்கத்திய நாடுகள் இந்த பெயர் கொண்டே அழைக்கப்பட்டன.   இன்று ஓடுதளம் தாண்டி பறக்கும் நிலையில் இருக்கிறோம்.  அதாவது பறக்க வேண்டிய இந்த விமானம் நெடுந்தூரம் ஓடிவிட்டது.  இனி பறக்கும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.  அதனால் நாம் முன்னேறாத நாடு என்ற இடத்தில் இருந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு என்ற இடத்தை அடைந்து விட்டோம். இந்த இடத்தைக் கடந்த பிறகு நமது பண்பாடு மற்றும் கல்விக்கான திட்டம் நிச்சயிக்கப்படுகிறது.  அதனால் ஏற்கனவே பறக்க துவங்கி விட்டோம் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். இவ்வாறு கூறிக்கொள்வது நமது தவறு இல்லை என்று கருதுகிறேன்.  நாம் சற்று பின்தங்கி இருந்திருக்கலாம்.  நாமும் சாமானிய மனிதர்கள்தானே! அதனால் நாமே நம்மை கொஞ்சம் பாராட்டிக்கொள்வது தவறில்லை.  திட்டமிடுதல் என்பது எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடுவதில்லை.  சில சமயம் பிரச்சினைகளை பெரிதாகவும் ஆழமாகவும் ஆக்கி விடுகிறது.  இந்த நாட்டின் பண்பாட்டோடு கலந்து வாழக்கூடியவர்களுக்கு இன்னும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. திட்டக்

(* Taken from the papers collected by Sri. Dharmpal from the India office library, the British museum etc)

கல்வியின் திட்டமிடல் பிரச்சனைக்கு நாம் மீண்டும் வருவோம். கல்வி என்பது மிகவும் பரந்து விரிந்த விஷயமாக இருப்பதால் எங்கே துவங்குவது என்றே தெரியவில்லை. இதை பல்வேறு பிரிவுகளாக, பல்வேறு தலைப்புகளாக பிரிக்க முடிகிறது.  எல்லாமே நியாயமாகவும் சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்படக்கூடிய விஷயமாகத்தான் இருக்கின்றன.  இந்த எல்லா பிரிவுகளும், உட்பிரிவுகளும் தனக்குரிய விசேஷமான பிரச்சனைகளையும் அதை நிறைவேற்றுவதற்கான தேவைகளையும் கொண்டு இருக்கின்றன. கைத்தொழில் ரீதியாக அல்லது டெக்னிக்கல் கல்வி என்பது இந்த சமுதாயத்தில் மிகவும் முக்கியமானது.  குறிப்பாக பழைய தொழில் முறைகள் என்பது காலாவதியாகி புதிய தொழில் முறைகளை ஏற்க வேண்டும்.  குழந்தை கல்வி என்பது ஒரு மிகப்பெரிய விஷயம்.  இதனிடையில் சில விசேஷமான அறிவார்ந்த மாணவர்கள் என்பவர்கள் வேறு அமைந்து விடுகிறார்கள்.  அவர்களுக்கு உரிய முன்னேறிய கல்வி, மிகவும் விசேஷமான கல்வி, அதற்கான தொழில் நுட்பங்கள் இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு நாட்டின் உயிர்நாடியே இது போன்ற அறிவு ஜீவிகளின் ஜீவனை கையாள்வதில்தான் இருக்கிறது.  ஒரு தேசம் சற்று சுதந்திரமாகவும், சற்று மனித நேய உணர்வுடனும், அந்த கல்வியை அணுக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் அந்த தேசம் சரியாகவும் நெடுந்தூரமும் பயணிக்க முடிகிறது. கல்வி என்பது ஒரு தேசத்தின் உள்ளுணர்வை, மனசாட்சியை பலப்படுத்துவதாகவும், ஒற்றுமையை அதிகப்படுத்துவதாகவும் மக்களை உரிமைக்காகவும், கடமைக்காகவும் குரல் கொடுக்கக் கூடியவர்களாக மாற்ற வேண்டும். பொருளாதார ரீதியான விஷயங்களும் இருக்கின்றன.  எப்படி இதற்கு பணம் ஒதுக்குவது, எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்குவது, என்பது போன்றவைகளும் இருக்கின்றன.  அதற்குப் பிறகு எந்த மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதும் இருக்கிறது.  அதற்கான சரியான பாட புத்தகங்கள், பாடத்திட்டங்கள் எல்லாவற்றையும் வரையறுக்க வேண்டும். இது எல்லாமே மிகவும் முக்கியமான கேள்விகள்.  ஒரு தேசம், இது எல்லாவற்றையும் சமாளித்து ஆக வேண்டிய நிலையிலும் இருக்கிறது.  மிகத் தெளிவாக நாம் இந்த கேள்விகளுக்குள் நுழைய முடியாது. சொல்லப் போனால் நான் இந்த கல்வி திட்டத்தைப் பற்றியோ இதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் பற்றியோ நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளே செல்லத் தயாராகவே இல்லை. இதைப் பற்றி பேசுவதற்கு இன்னும் பெரும் கல்வியாளர்களான நீதிபதி ஜாக்லா, டாக்டர் சுவாமி, பேராசிரியர் பாய் மகாவீர் எம்.பி மற்றும் பலர் இந்த பிரச்சனைகளை நேரடியாக சந்தித்து கையாண்டு வருகிறார்கள்.  அவர்கள் இதைப் பற்றி சொல்லுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  நான் என்ன பேச வேண்டும் என்று தேர்ந்தெடுத்துள்ளேன் என்றால் இந்த தலைப்பை ஒட்டி ஆனால் சற்று மாறுபட்ட விஷயம் என்பது என் கருத்து.  கல்வி பற்றிய ஹிந்து பார்வை என்பதே அது.  இந்தியா கல்வியைப் பற்றி என்ன சிந்தித்துள்ளது, கல்வி என்பதற்கு ஏதேனும் வரைமுறை, வரையறை உள்ளதா அல்லது கல்வியைப் பற்றி சில கொள்கைகள், இந்திய கொள்கைகள் என்று ஏதாவது உள்ளதா அல்லது இந்தியாவின் ஆன்மாவை வெளிப்படுத்தக்கூடிய விஷயமாக கல்வி இன்று உள்ளதா என்பதே கேள்வி.  இந்தக் கேள்விகள் எல்லாமே இன்றைய கல்வியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சுற்றி இருக்கின்றன என்று நினைக்கிறேன்.   நமது எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய கர்த்தாக்களாக நாம் ஆக வேண்டும் என்றால்,  நாம் முதலில் நமது கடந்த காலத்தை அறிந்து கொள்ள வேண்டும். அப்படி கடந்த காலத்தை ஆராய்ச்சி செய்யும்போது சில நுண்ணிய யோசனைகள் நமது மனதில் குறுக்கே வரலாம்.  சில, காலம் கடந்து இருக்கக்கூடிய சத்தியவாக்காக, சத்திய விஷயங்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  அப்படி ஏதேனும் நடந்தால் அந்த யோசனைகளை நமக்கு சரியான வழிகாட்டுதலாக இன்றைய கல்வி முறைக்கு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  ஒரு தேசத்தின் கல்வியைப் பற்றிய கொள்கை என்பது அவர்களுடைய மனிதத்துவத்தை பற்றிய கொள்கைகளோடு சார்ந்து உள்ளது.  ஒரு மனிதனை எந்த அளவிற்கு புரிந்து வைத்துள்ளோமோ, மனிதனை எந்த அளவிற்கு விளக்குகிறோமோ,  அந்த அளவிற்குதான் அந்த கல்வி என்பது அந்த தேசத்தில் இருக்கும். அந்த அளவு ஆழமாகத்தான் அந்த தேசத்தின் கல்வி என்பது இருக்கும்.  நாம் மனிதனை வெறுமனே ஒரு சரீரமாக பார்த்தால், கல்வியை நாம் பார்க்கும் விதம் ஒரு வகையாக இருக்கும்.  மனோரீதியானவன் என்று பார்த்தால் அப்போது வேறு ஒரு விதமாக இருக்கும். ஆனால் ஒரு மனிதனை ஆன்மாவாக பார்க்க ஆரம்பித்தோம் என்றால் கல்வியின் போக்கே வேறு விதமாக இருந்து விடும்.

ஒரு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இப்படி உடல் மனம் ஆன்மா என்றெல்லாம் பிரித்துச் சொன்னேன்.  உண்மையைச் சொல்லப் போனால் இது மூன்றையும் பிரிக்கவே முடியாது.  காரணம், மனிதன் இந்த மூன்று விஷயங்ககளின் தொகுப்பே ஆவான்.  அதனால் எந்த தேசமும் இதில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் கட்டமைத்து விட முடியாது.  இதில் ஏதாவது ஒன்றை உதாசீனம் செய்துவிட்டும் கட்டமைத்து விட முடியாது.  எந்த அளவுக்கு இதை சீரியஸாக ஆழமாக மனதில் எடுத்துக்கொண்டு அதை கட்டமைக்கிறோம் என்பது சரியான கல்வி முறையை, கல்விப் பாடத்திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இந்தியாவில் பன்னெடுங்காலம் தொட்டு ஹிந்துக்கள் மனிதனை ஒரு ஆன்மாவாகவே கருதி வந்துள்ளனர் அதற்காக உடல், மனம், புத்தி போன்றவைகள் மறுக்கப்பட்டன என்றெல்லாம் நாம் சொல்லவில்லை. ஆனால் ஆன்ம முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றம் என்பதை மிக அதிகமாகவும் முன்னிறுத்தி வைத்துள்ளனர்.  இந்த ஆன்ம, ஆன்மீக முன்னேற்றம் என்பது இந்திய கல்விக்கு ஒரு விசேஷமான வர்ணத்தை ஒரு விசேஷமான தனித்துவத்தை கொடுத்து வந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பண்டைய காலத்து ரிஷி முனிவர்கள் எல்லாரும் மரணத்திற்குப் பிறகு, அதாவது இந்த சரீர வாழ்க்கைக்கு பின்னால் வேறு ஒரு வாழ்க்கை உள்ளது என்றும், வேறொரு பிரம்மாண்டமான உலகம் உள்ளது என்றும் கூறி வைத்துள்ளார்கள். ஐம்புலன்களையும், மனதையுமே வைத்துக்கொண்டு வாழ்வது என்பது இந்த ஆன்மாவின் மிகப்பெரிய வாழ்க்கையின் பயணத்தின் ஒரு மிகச்சிறிய அங்கமே என்பதை கூறினார்கள். அவர்கள் அதோடு கூட ஆன்மாவின் அசல் வாழ்க்கை, உண்மையான வாழ்க்கை அவனது உண்மையான வீடு என்பதாக வேறொரு உலகத்தை கூறி வந்தனர்.  மற்ற எல்லா இடங்களுமே அவன் அந்நியனாக தோன்றும் அளவிற்கு அதன் வர்ணனைகள் இருந்தன.  அதனால் இந்த ரிஷி முனிகள் எல்லாருமே இந்த நிரந்தரமான வாழ்க்கை, அதை நோக்கி மட்டுமே நமது சொல், செயல், சிந்தனை எல்லாம் இருக்க வேண்டும், சொர்க்கத்தைப் பற்றிய வர்ணனைகள் எல்லாம் கூறி அதை நோக்கியே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.  இந்த ரிஷி முனிவர்கள் எல்லாரும் கல்வியே மனிதனை இது போன்ற உயர்ந்த லட்சியம் மிகுந்த, உயர்ந்த சுக வாழ்க்கை, நிரந்தர நித்தியானந்தம் நிறைந்திருக்கக் கூடிய வாழ்க்கையை பற்றி கூறி அதை எப்படி அடைய வேண்டும் என்பதைப் பற்றியே அதிகம் பேசினார்கள்.

அவர்கள் கற்றுக் கொடுத்ததெல்லாம் இந்த அகங்காரம் மிகுந்த வாழ்க்கையைத் துறந்து விட வேண்டும், குறுகிய மனப்பான்மையை சிறிய எண்ணங்களை சின்ன ஆசைகளை, தேவையில்லாத வம்பு சண்டைகளை துறந்து விட வேண்டும், சகோதரத்துவம் மிகுந்த உணர்வு இரக்கம் மிகுந்த சிந்தனை, எல்லோரும் எல்லாவற்றையும் ஒன்றாக பாவிக்கும் மனோபாவம் இதையெல்லாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாக 'நான்' என்பதைத் துறந்து விட வேண்டும்.  அதை துறந்துவிட்டால், உள்ளே மிகவும் ஆழமாக எல்லா சக்திகளும், எல்லா ஆசீர்வாதங்களும் எல்லா நிறைவுகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்றார்கள்.

இந்த ரிஷி முனிவர்கள்  எல்லோரும்  இந்தக் கல்வி முறையை வெறும் கொள்கை அளவில் உருவாக்கி வைத்துவிட்டு, தத்துவார்த்த ரீதியாக சொல்லிவிட்டு மட்டும் நிறைவடைந்துவிடவில்லை.  அதற்குப் பதிலாக அதை அணுகும் முறையையும் உருவாக்கி வைத்தார்கள்.  யோகா என்றொரு முறையை அவர்கள் இந்த உலகிற்கு தந்தார்கள்.   யோகா என்பது யதார்த்தமான நடைமுறையில், மனதின் உள்ளேயும் சென்று, வெளியேயும் பார்த்து, புதிய முறையில் உலகத்தையும் அகண்ட பார்வையுடன் பார்க்க கூடிய தன்மையை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த ஆழமான, மிகவும் உணர்வுள்ள, மிகவும் உயிர்ப்புள்ள இந்த வாழ்க்கை, உள்நோக்கிப் பார்க்கும் பார்வை என்பது சாதாரண அன்றாட வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ, மாற்றாக இருக்கவோ முடியவே முடியாது என்பதைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு பதிலாக, இந்த வாழ்க்கையை எப்படி இன்னும் சிறப்பாக முழுமையாக வாழ இது உதவும் என்று கண்டறிந்தார்கள். இவ்வாறாக ஆன்மாவை முழுமைப்படுத்தி, மனதையும் உடலையும் முழுமைப்படுத்தி, அதற்கு ஒரு நிறைவான பொருளைக் கொடுத்து, முழுமையாக உண்மையான கூட்டுறவுடன் மனம் ,உடல், ஆன்மா இதன் கூட்டுறவுடன் வாழும் பொழுது அது சிறப்பான வாழ்க்கையாக அமைகிறது என்பதை கண்டறிந்தனர்.  இந்த உள் ஆராய்ச்சி,  உள்ளார்ந்த வாழ்க்கை, உள்ளார்ந்த ஆராய்ச்சி - இது இல்லாமல் வெளி வாழ்க்கை என்பது கண்மூடித்தனமான மிகவும் பலமற்ற, சாரமற்ற,   தன்னையே, தன்னிடம் தொலைத்த வாழ்க்கையாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.  அதனால் கல்வி என்பது மனிதனின் உடை, உணவு, உறையுள் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இருப்பது என்பது மனிதநேயத்தையே தோற்கடிக்கக் கூடிய கல்வி முறை ஆகும் என்பதை கண்டறிந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். இதனால்தான் என்னவோ மேற்கத்திய பள்ளிகளில் கல்லூரிகளில் இருக்கக்கூடிய இந்த காலத்து இளைஞர்கள் இந்த வெற்று கல்வியை, ஆதாரமற்ற கல்வியை கற்பதினால் இயல்பாகவே எதிர்ப்பு தன்மை மிக அதிகமாக இருக்கிறது என்றும்,  ஆழ்ந்த சிந்தனை, ஆழமான பக்குவம் போன்றவைகள் இல்லாமல் இருப்பதினால் எதிர்ப்பு சிந்தனை மிக அதிகமாக இருக்கிறது என்றும் நினைக்கிறேன்.

இந்திய ஆன்மீகம் என்பது யோகா முறையில் மனதை ஒருநிலைப்படுத்தி அதன் மூலமாக உடலையும் ஒருநிலைப்படுத்தக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது என்பது என்னவோ உண்மைதான்.  ஆனால் அதுவே அதன் லட்சியம் அல்ல.  உள்நோக்கிப் பார்ப்பது, புலன்களை உள்நோக்கி இழுப்பது என்பதே முக்கியமாக இருக்கிறது.  அதற்கு வெளிப்புற ஈர்ப்புகள் இருந்தாலும்கூட, அது இரண்டாம் கட்ட தேவைதான் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட முடிவுக்கான முடிவாக இருந்தாலும் கூட, அதுவே இறுதியான முடிவு அல்ல என்பதை உணர்ந்ததாக இருந்தது. உண்மையான லட்சியம் என்பது தன்னை, தனக்குள்ளே இருக்கக்கூடிய திறமைகளை, தனக்குள்ளே இருக்க வேண்டிய லட்சியங்களை, உணர்வுகளை, மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தி, உயர்ந்த லட்சியங்களை நோக்கி ஆன்மாவை இட்டுச் செல்வது என்பதற்காகவே இந்த கல்வி என்பது இருந்தது. அதை நோக்கியே இந்த யோகா என்பது நம்மை செலுத்துவதாக அமைந்தது.

இந்த லட்சியமானது மிகவும் சுருக்கமாக மிகக் குறைந்த சொற்களால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான காயத்ரி மந்திரத்தில் உள்ளது.  இதை பல நூறாயிரக்கணக்கானவர்கள் இந்தியாவெங்கும் தினசரி ஜபம் செய்து வருகிறார்கள் இந்த மந்திரம் நமது மனதை தூண்டுவதாக இறைவனைய நோக்கி செல்லக் கூடிய வகையில் தூண்டுவதாக, உத்வேகப்படுத்துவதாக, உருவாக்குவதாக, புரிந்துகொள்வதாக ஆகட்டும் என்று வேண்டுகிறது.  பல உபநிஷத்துகள் இவ்வாறாக தனது பிரார்த்தனையை துவக்குகிறது அதாவது 'இறைவா, எனக்கு எனது கை கால்களை, விரல்களை, எனது பேச்சை, எனது முக்கியமான உறுப்புகளை, எனது கண்களை, காதுகளை மற்ற எல்லா அவயவங்களையும் மிகவும் வலுவுள்ளதாக ஆக்கு' என்று வேண்டிக் கொள்வதாக இருக்கிறது.

இந்தியாவின் கல்விக் கொள்கையில் இரண்டு இரு வேறு லட்சியங்கள் இருந்தன.  ஆனால் இரண்டுமே இணைந்து செயல்பட்டன.  ஒன்று உடலை வலு உள்ளதாக ஆக்குவது, இன்னொன்று மனதை வலு உள்ளதாக ஆக்குவது.  அதாவது, நமது நாடி நரம்புகளையும், தசை நார்களையும், எலும்புகளையும் வலுவுள்ளதாகவும் இன்னொன்று நமது மனதை வலுவுள்ளதாகவும் ஆக்குவதாக அமைந்தது.  இந்த இந்திய கல்வி முறை என்பது மிகவும் உண்மையுடன் தூய்மையாக பின்பற்றப்பட்டால் மிகவும் முழுமையான சக்தி மிகுந்த, ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வாழ முடியும்.  இதே போல ஆரோக்கியமாகவும் எந்த விதமான அவயவங்களும் இந்திரியங்களும் பாழாகாமல் நல்ல தெளிவான மனதுடன் குலையாத சக்தியுடன் நம் வாழ முடியும்.  இந்துவின் உளவியல்படி ஒரு மனிதனின் மனம், புலன்கள் என்பது இந்த ஆன்மாவின் சக்திகள் ஆகும். அதனால் அவை வலுப்படுத்தப்படவேண்டும், அகலப்படுத்தப்படவேண்டும், ஆழப்படுத்தப்பட வேண்டும், தூய்மைப்படுத்தப்படவேண்டும் என்பதே ஆகும்.  நான் மிகவும் சிறப்பாக பார்க்கக்கூடியவனாக, சிறப்பாக கேட்கக் கூடியவனாக, நிறைய பார்க்கவும் கேட்கவும் கூடியவனாக ஆக வேண்டும் என்பது பிரார்த்தனையின் ஓர் அங்கம். மற்றொரு இடத்தில் நமது கண்கள் நல்லவைகளை பார்க்கட்டும். காதுகள் நல்லவைகளை கேட்கட்டும் என்கின்றனர்.  இதன் லட்சியம் என்னவென்றால் நல்ல விஷயங்களை பார்ப்பதனாலும் கேட்பதினாலும் இன்னும் மேன்மை அடைந்த தூய்மையான சிறப்பான ஆழ்ந்த லட்சியம் நமக்கு கிடைக்கிறது.  அதை நோக்கித்தான் நமது லட்சியம் இருக்கிறது என்றும் புரிகிறது.  இதற்குப் பொருள் குணங்களை, ஆசைகளை, உணர்வுகளை எல்லாவற்றையும் பலப்படுத்த வேண்டும்.  அதிகமாகும் சக்தியையும் மனதையும் ஒருங்கிணைப்பதால் அதிகமாகும் சக்தியை கட்டுப்படுத்தவேண்டும், நெறிப்படுத்தவேண்டும், நமது மனோபலத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல் நமக்குள்ளே  மறைந்திருக்கக் கூடிய சக்திகளை இவை வெளிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், யதார்த்த வாழ்க்கையின் அடிப்படை இவைதான் என்பதை நமக்கு காட்டிவிடும்.  நமது உணர்வுகளும் மனமும் அவை இஷ்டம் போல ஓடுமாயின் எந்தவிதமான உயர்ந்த சக்திகளாலும் கட்டுப்படுத்த முடியாமல் போகுமாயின் அவை தாமே அழிந்துவிடும்.  ஆன்மாவின் எல்லையற்ற தூய்மையான ஒளியினால் அவை வழிகாட்டப்படுமானால், அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதமாக வந்து அமையும்.  கிரேக்க அறிஞர்களும் இதையே போதிக்கிறார்கள்.  பிளேட்டோ உயர்ந்த நிலையை அடைந்த ஆன்மா என்றும், கீழ் நிலையில் இருக்கும் ஆன்மா என்றும் இருக்கிறது என்கிறார்.  இந்த கல்வி என்பது கீழ் நிலையில் இருக்கும் ஆன்மாவை மேல் நிலையில் இருக்கும் ஆன்மாவின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஹிந்து கல்வி முறையில் வேறொரு கோணமும் அல்லது வேறு ஒரு லட்சியமும் இருக்கிறது.  இதை அதிகமாக யாரும் பேசுவதில்லை.  ரிஷி முனிவர்கள் பொதுவாக ஒரு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதன் மூலத்திற்கு, அடிப்படைக்குச் சென்று ஆராய்கிறார்கள்.  அரைவேக்காட்டுத்தனமாக,  பாதி வழியில் கிடைத்ததை வைத்துக்கொண்டு அவர்கள் திருப்தி அடைவதே இல்லை.  உதாரணமாக, அவர்கள் கற்பித்த இந்தக் கல்விமுறையில் அவர்களுடைய லட்சியம் வெறுமனே தகவல்களை கொடுத்துவிட்டு அல்லது தகவல்களைத் தேடவிட்டு, அதுவும் பல்வேறு துறைகளில் தகவல்களைத் தேடவிட்டு நம்மை அலைக்கழிப்பதாக அமைக்கவில்லை.  மாறாக மனதையே செதுக்கி பண்படுத்தி அதை வாங்கிக் கொள்ளக்கூடிய பக்குவத்தை ஏற்படுத்தி, அதை எப்படி முறைப்படுத்தி உள்வாங்க வேண்டும், அதை மனதில் எப்படி அசைபோட்டு அந்த தகவல்களை எல்லாம் தொகுத்து ஒரு நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும் என்று சிந்திக்க வைக்கக் கூடிய பயிற்சியும் சேர்த்து அதில் கொடுத்திருந்தார்கள்.  அதே போல அறிவைத் தேடும் அவர்களுடைய தேடலில் வெறுமனே ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையை எடுத்துக்கொண்டு வெளிப்புறமாக அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட துறையை அவர்கள் முடித்து விடவில்லை.  யார் அந்த துறையை சிறப்பாக அறிந்து வைத்திருக்கிறார்கள், அதை எங்கிருந்து அறிந்து வைத்தார்கள், எப்படி அறிந்து கொண்டார்கள், அதன் ஊற்றுக்கண் என்ன, எங்கிருந்து ஊற்று உருவாகிறது, இதுதான் உண்மையா, இதில் இருக்கக்கூடிய விஷயங்கள் உலகுக்கு நன்மை ஏற்படுமா என்றெல்லாம் ஆராய்ந்து மிகவும் அடிப்படைவரை சென்று ஆராய்ந்தார்கள். அவர்கள் இவ்வாறாக சிந்தித்து சிந்தித்து, தியானம் செய்து மனமே எல்லாவிதமான எண்ணங்களையும் இணைக்கும் விஷயம் என்றும், இருதயமே எல்லா விஞ்ஞான மற்றும் அறிவுப்பூர்வமான விஷயங்களை இணைக்கும் விஷயம் என்றும் அறிந்து கொண்டார்கள்.  அதனால் மனம் தான் எல்லா விதமான எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் அடிப்படை என்றால், இதைக் கொண்டு இருதயத்தை நாம் ஆட்சி செய்துவிட முடியும் அல்லது கட்டுப்படுத்திவிட முடியும்.  அதே போல இருதயம் தான் எல்லா விஞ்ஞானம் மற்றும் அறிவு போன்ற விஷயங்களுக்கு ஊற்றுக்கண் என்றால் மனித இதயத்துக்குள் நுழைந்து கண்டுபிடிப்பதன் மூலம் எல்லா விஞ்ஞான விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும். இப்படி இருதயத்தை கடைந்தெடுப்பதனால்தானே எத்தனையோ விஞ்ஞான விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

ஹிந்து கல்வி முறை என்பது மிக உயர்ந்த லட்சியங்களைக் கொண்டதாக இருந்தது. ஆனால் தற்காலிக, நாகரீக கல்வி முறை என்பது இதை அழிக்க முற்படுகிறது. ஆனால் முடியவில்லை.  இந்திய கல்வி முறை 'விக்ஷேபஸ்' எனும் ஒரு விஷயத்தை முன்னிறுத்துகிறது.  அதாவது கவனம் இன்மை , கவனச் சிதறல், குழப்பம், பதட்டம், அயற்சி, சோர்வு இவை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலைமை. இன்றைக்கு மிகவும் அற்புதமாக சிந்திக்க கூடிய மனங்களில் கூட மேலே கூறப்பட்ட இந்த விஷயங்கள் இருக்கின்றன.  ஒருவன் மிகவும் புத்திசாலியாக சாமர்த்தியனாக பல சில வழிகளில் இருந்து விடலாம். மிக அற்புதமாக சில விஷயங்களில் வேலை செய்யக் கூடியவராக இருந்துவிடலாம். நல்ல பொறியாளராக நல்ல மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்துவிடலாம். ஆனால் மனதில் எப்பொழுதும் ஒரு குழப்பமும் தெளிவும் இல்லாமல் ஏதோ பித்து பிடித்தவர்கள் போல இருப்பதை காண முடிகிறது. காரணம் இன்றைய நாகரீகமானது என்பது ஓய்வின்றி வெறுத்துப் போய் பித்து பிடித்ததாக ஆக்கியுள்ளது.  எந்த விதமான நிதானத்திலும் இல்லை.  தானே தனக்கு எதிர்வினைகளை ஆற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த நாகரீக பண்பாடு என்பது இருதயத்திற்கும் நோயைத் தந்து மனதிற்கும் நோயை தருகிறது.  அமெரிக்காவில் உளவியல் மருத்துவர்கள் எல்லோரும் மிகப்பெரிய அளவில் பணம் ஈட்டுகிறார்கள், இது போன்ற மனதில் ஏற்படும் சிக்கல்களால்.

இன்றைய நாகரீக கல்வி முறை இதற்கு எந்தவிதமான நிவாரணமும் தரத் தயாராக இல்லை ஆனால் அந்த காலத்து கல்வியாளர்கள் மிகவும் தெளிவாக ஜெபம், தியானம் என்ற முறையாலும் இதை மிகவும் சாமர்த்தியமாக சிறப்பாக எதிர் கொள்ள முடியும் என்று காண்பித்துள்ளார்கள்.   இதனால் இந்த ஆன்மாவிற்கும் அந்த ஹிருதயத்திற்கும் ஏற்படக்கூடிய நிதானமின்மை போன்ற எண்ணங்களில் இருந்து வெளிவர முடியும் என்று காட்டியுள்ளார்கள்.  இந்த ஜெபம் அல்லது தியானம் இரண்டும் இல்லாமல் ஒரு மனம் நிதானமாகவும் ஆரோக்கியமாகவோ இருக்கவே முடியாது. எந்தக் கல்வி முறையாக இருந்தாலும் அது சந்தோஷத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்றால் இந்த இரண்டையும் கைக்கொண்டே தீரவேண்டும்.

நமது ஹிந்து ரிஷி முனிகள், வழிகாட்டிகள் எல்லோரும் நமது உடன்பிறந்த மனிதர்கள் எல்லோரையுமே சகோதரர்களைப் போல என்றும், இந்த உலகமும் இதைச் சுற்றி இருக்கக்கூடிய இயற்கையையும் நமது நண்பர்களைப் போல நடத்த வேண்டும் என்றும் நம்பினார்கள். அதனால் அவர்களுடைய கல்வி முறை இதை நோக்கியதாக இருந்தது. சந்தோஷத்திற்காக  பேரின்பத்திற்காக அவர்கள் கல்வி கற்பித்தார்கள்.  ஒற்றுமைக்காக கற்பித்தார்கள் . சேவைக்காக ஒற்றுமைக்காக ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக அக்கம்பக்கத்து வீட்டாருடன் இணைந்து பழகுவதற்காக சக மனிதர்களுடன் இணைந்து வாழ்வதற்காக இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்தார்கள்.  ஆனால் இன்றைய நாகரீக கல்வியோ ஒரு மனிதன் தன்னைத் தானே எதிர்க்கக் கூடிய அளவிற்கு கொண்டு வந்துவிட்டது.  சக மனிதர்களை இயற்கையை சுற்றுப்புற சூழலை எதிர்க்கிறான். கல்வியே சக மனிதர்களோடு போட்டியிடுவதாகவும் எதிர்ப்பை காட்டுவதற்காக இருக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு உள்ளது.  இந்த மாதிரியான இன்றைய  சமுதாயத்தில் இது தவிர்க்க முடியாததாக,  தன்னிடமே எல்லாம் இருக்க வேண்டும்; மற்றவர்களை சுரண்டித் தின்னும் பழக்கம் இருக்கும் மனிதன், மற்றவர்களை  சுரண்டுவதும், மிருக உலகத்தை  சுரண்டுவதும், இந்த பூமித்தாயை சுரண்டுவதும் இயற்கையை சுரண்டுவதும் இவ்வாறாக வாழ்வதே வாழ்க்கை; இதில் மனிதனுக்கு மட்டுமே எல்லாவற்றுக்குமான உரிமைகளும் உள்ளன;  மற்ற எந்த உயிர்களுக்கும் எதுவுமே கிடையாது என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது.  இது போன்ற எண்ணங்களை மனதில் விதைத்தால் எதிர்ப்புகளும் போராட்டங்களும் சுரண்டல்களும் மட்டுமே மிஞ்சும்.  இது போன்ற விதைகளை மனதில் விதைக்க விதைக்க நமக்கு கிடைக்கக்கூடியது மனோ வியாதிகளும், குற்றங்களும், போதை மருந்துகளும், சுற்றுப்புறச் சூழ்நிலை பாழாகிவிட்டது என்ற நிலைகளும் பைத்தியக்காரத்தனமும் மட்டுமே மிஞ்சும். இதை மட்டுமே அறுவடை செய்யும் நிலை ஏற்படும்.

·         மொழிமாற்றம் செய்தவர்:  திரு. ஆனந்த் வெங்கட் , சென்னை.